'தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின்' கீழ்(TAPS) ஓய்வூதியம் பெறுவதற்கு 18 ஆண்டுகள் பணி முடித்து இருக்க வேண்டும் என்ற அரசின் விதிமுறைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு 18 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் ஓய்வூதியம் மாதம் 10,000 மட்டுமே வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்டரிக் ரெய்மாண்ட் கூறுகையில், "பழைய ஓய்வூதியத் திட்டத்தில் 10 ஆண்டுகாலம் பணிக்காலம் முடித்திருந்தாலே ஓய்வூதியத்திற்கு தகுதியானவர் என்கிற நிலை இருந்தது.
தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக கடந்த ஜனவரியில் திமுக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையில், இந்த திட்டத்தின் கீழ்வரும் அனைவருக்கும் 50 சதவீத ஓய்வூதியம் என்றுதான் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது தகுதியான பணிக்காலம் 18 ஆண்டுகள் என அரசு விதிகள் வகுத்துள்ளதோ என அச்சப்பட வேண்டியுள்ளது.
ஏனெனில் 18 ஆண்டு பணிக்காலம் குறைவானவர்களுக்கு ரூ.10,000 மட்டுமே ஓய்வூதியம் என தற்போது அரசு உத்தரவு வெளியாகி உள்ளது. இது ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் வயிற்றில் அடிக்கும் வஞ்சக செயல் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கருதுகிறது.
ஏற்கனவே ஊழியர்களின் 10 சதவீத பங்களிப்பை கட்டாயம் எனக் கூறி, லட்சக்கணக்கில் ஊதியத்தையும் கையில் வைத்துக் கொண்டு, ரூ.10 ஆயிரம் என சொற்ப தொகையினை ஓய்வூதியமாக அறிவித்திருப்பது அவர்களது எதிர்காலத்தை குழி தோண்டி புதைக்கும் வஞ்சக செயலாகும்.
அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு சவப்பெட்டி தயாரிக்கும் தமிழக அரசின் இந்த உத்தரவு உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம். இல்லையென்றால், ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் களத்தில் இறங்கி போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...