கல்லூரிகள் வன்முறை களமாவதை தடுக்கும் விதமாக,
அனைத்து அரசு, தனியார் கல்லூரிகளிலும் உளவுப் பிரிவு, பறக்கும் படை அமைக்க
பாரதியார் பல்கலை உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக கல்லூரி வளாகம் மற்றும்
வெளிப்புறங்களில், மாணவர் சங்க தேர்தல், துறைரீதியான நிகழ்ச்சிகள், பஸ் தின
கொண்டாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், கோஷ்டி மோதல், கொலை உள்ளிட்ட சமூக
விரோத செயல்களில் மாணவர்கள் இறங்குகின்றனர். அவற்றை கட்டுப்படுத்த தேவையான
நடவடிக்கைகளை எடுக்க அனைத்து கல்லூரிகளுக்கும் பாரதியார் பல்கலை
உத்தரவிட்டுள்ளது. பாரதியார் பல்கலையை பொறுத்தவரை, கோவை, திருப்பூர்,
நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு, தனியார் கலைக் கல்லூரிகள்
செயல்படுகின்றன.
அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் பாரதியார் பல்கலை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கட்டுப்பாடு
கல்லூரி வளாகத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்,
அலுவலர்கள் அனைவரும் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும். அனைவரின் வருகை
பதிவேடும் பதிவுசெய்வதுடன், கல்லூரி நேரத்தில் அவர்களை கண்காணிக்க
வேண்டும். ராகிங், பஸ் படிக்கட்டில் பயணம், குற்ற சம்பவங்களில் ஈடுபடுதல்
ஆகியன கூடாது, என மாணவர்களிடம் உறுதிமொழி பெற வேண்டும்.
கண்காணிப்பு: நுழைவாயிலில் வாகனங்களை முழு
சோதனை செய்து, எண்ணை பதிவுசெய்ய வேண்டும்; பொருட்களை சோதனையிட வேண்டும்.
வளாகம், மாணவர் விடுதிகளின் முக்கிய இடங்களில் போலீசாரின் ஆலோசனையுடன்
சி.சி.டிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். உளவுப் பிரிவு: மாணவர்களின்
தகவல்களை சேகரிக்கும் உளவுப் பிரிவு ஒன்றை உருவாக்குவது அவசியம்; குறிப்பாக
சட்டவிரோத செயல்களை போலீசாருக்கு தகவல் அளிக்கும் வகையில் இருக்க
வேண்டும்.
வளாக கண்காணிப்பு பறக்கும் படை
வளாக கண்காணிப்பு பறக்கும் படையில், கல்லூரி
முதல்வர், பேராசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர், என்.எஸ்.எஸ்., மாணவர்கள்
இருவர் கொண்ட குழு அமைக்க வேண்டும். இக்குழு, கல்லூரி மற்றும் மாணவர்
விடுதியின் வருகை பதிவேட்டை ஆய்வுசெய்து, விதிமுறைக்கு மாறாக
தங்கியுள்ளவர்களை கண்டறிய வேண்டும்.
மகளிர் விடுதியில், பெண் வார்டன் மற்றும்
மகளிர் பேராசிரியர்கள் மூலம் சோதனை செய்ய வேண்டும். மாணவர் மற்றும்
மாணவியர் விடுதியில், துணை வார்டன், இரு பேராசிரியர்கள், இரு மூத்த
மாணவர்கள் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
கவுன்சிலிங் மற்றும் கூடுதல் கல்விசார்
நடவடிக்கை: ஆசிரியர்கள் கூடுதல் கல்விசார் நடவடிக்கைகள் குறித்து மாணவர்களை
ஊக்குவிக்க வேண்டும். மேலும், சட்ட விரோத செயல்கள், படிக்கட்டில் பயணம்,
ராகிங் உள்ளிட்டவை குறித்து அறிவுரை வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட
பல்வேறு வழிமுறைகள் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...