பிளஸ் 1ல் 1,002 பக்கத்துக்கு உயிரியல் பாடம்: தலைசுற்றுவதால் வேறு பிரிவுக்கு மாணவர்கள் ஓட்டம்

'நீட்' தேர்வுக்கு, உயிரியல் பாடப்பிரிவில், கூடுதல்

  • பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், 1,002 பக்கங்கள் உள்ளதால், பலரும், வேறு பிரிவுகளுக்கு ஓட்டம் பிடிக்கின்றனர்.


தமிழகத்தில், இரு ஆண்டுகளாக, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு, 'நீட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில், மாணவர்கள் எளிதாக தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்றியமைக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது.

 நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 பாடத்துக்கு, புது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், உயிரியலில், இதுவரை இருந்ததை விட, இரு மடங்கு பாடம் கூடுதலாக்கப்பட்டுள்ளது. தாவரவியல், 545, விலங்கியல், 457 என, 1,002 பக்கங்கள் கொண்ட, பாடமாக மாற்றப்பட்டுள்ளது.

இப்புத்தகத்தை முழுமையாக புரிந்து படித்தால் மட்டுமே, சிந்திக்கும் திறன் வினாக்களுக்கு பதிலளிக்க முடியும். மனப்பாட முறை ஒழிக்கப்பட்டுள்ளதால், இப்பாடம் பெரும் சுமை என மாணவர்கள் கருதுகின்றனர்.

 இதனால், ஏற்கனவே உயிரியல் பாடத்தை தேர்வு செய்த மாணவர்கள், வேறு பிரிவுகளுக்கு ஓட்டம் எடுக்கின்றனர்.இதுகுறித்து, உயிரியல் ஆசிரியர்கள் கூறியதாவது:

 உயிரியல் பாடம், கணித பாடப்பிரிவு, பியூர் சயின்ஸ் எனும் அறிவியல் பாடப்பிரிவில் இடம்பெறுகிறது. மருத்துவம், இன்ஜினியரிங் பிரிவு செல்ல விரும்புவோர், உயிரியல் பாடமுள்ள கணிதப்பிரிவை தேர்வு செய்வர்.

மருத்துவத்தை மட்டுமே குறிக்கோளாக உள்ளவர்கள், அறிவியல் பாடப்பிரிவை தேர்வு செய்வர். தற்போது, புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள உயிரியல் பாடத்திட்டம் மிகச்சிறப்பானது.


 ஆனால், அவற்றை, ஒரே ஆண்டில் முழுமையாக நடத்தவோ, புரிந்துகொள்வதோ சிரமம். நன்கு படிக்கும் மாணவர்களுக்கு மட்டுமே, இது சாத்தியம்.

பல பள்ளிகளில், தங்கள் பணியிடத்தை தக்க வைத்துக்கொள்ள, உயிரியல் பாட ஆசிரியர்கள், சராசரி மாணவர்களை, இப்பிரிவுகளில் சேர்த்துவந்தனர். இப்போது, அப்படி சேர்க்கும் போது, தேர்ச்சி விகிதம் சரியும்.

 புது பாடப்புத்தகத்தை பார்த்த பின், பல மாணவர்களை, ஆசிரியர்களே, வேறு பாடப்பிரிவுக்கு செல்ல அறிவுறுத்தும் நிலை உருவாகியுள்ளது. உயிரியல் பாடம் எடுத்து படிப்பவர்களில், 40 சதவீதம் பேர் கூட, நீட் எழுதுவதில்லை.

ஆனால், அனைவருக்குமான பாடத்திட்டத்தில், சுமையை ஏற்றியுள்ளதால், மாணவர்களின் பாடு திண்டாட்டமாகியுள்ளது.

 மாணவர்கள் ஆர்வம் காட்டாத பட்சத்தில், உயிரியல் பாடப்பிரிவுகளே, பல பள்ளிகளில் நீக்கும் நிலை உருவாகலாம். இதற்கான மாற்றுவழிகளை, தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Share this

0 Comment to " பிளஸ் 1ல் 1,002 பக்கத்துக்கு உயிரியல் பாடம்: தலைசுற்றுவதால் வேறு பிரிவுக்கு மாணவர்கள் ஓட்டம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...