ஒழிப்பு! தமிழக குவாரிகளில் குழந்தை தொழிலாளர் முறை.. பள்ளி வருகை பதிவேடை கண்காணிக்க அறிவுறுத்தல்

'தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் உள்ள கிரானைட் குவாரிகளில், குழந்தை தொழிலாளர்கள் ஒருவர் கூட பணி அமர்த்தப்படவில்லை' என, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், பள்ளிகளில், மாணவர் - மாணவியர் வருகைப் பதிவேடுகளை தொடர்ந்து கண்காணிக்கும்படி, ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

தமிழக குவாரி,குழந்தை தொழிலாளர் முறை,ஒழிப்பு,பள்ளி வருகை பதிவேடு,கண்காணிக்க அறிவுறுத்தல்
நாட்டில் பல்வேறு இடங்களிலும், கிரானைட் குவாரிகள் இயங்கி வருகின்றன; 200க்கும் மேற்பட்ட நிறங்களை உடைய கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன.
ஆந்திரா, பீஹார், குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மஹாராஷ்டிரா, ம.பி., ஒடிசா, ராஜஸ்தான், உ.பி., மேற்கு வங்கம் மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களில், கிரானைட் குவாரிகள் இயங்கி வருகின்றன.
நடவடிக்கை :
இந்த குவாரிகளில், குழந்தை தொழிலாளர்கள் அதிக அளவில், பணி அமர்த்தப்படுகின்றனர். குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை தடுத்து நிறுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக, 2007ல், 'தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்' என்ற சட்டரீதியான அமைப்பை, மத்திய அரசு உருவாக்கியது.
குழந்தைகள் உரிமை தொடர்பான சட்டங்களும், விதிமுறைகளும் நாட்டில் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை கண்டறிவதே இந்த அமைப்பின் வேலை. குழந்தைகள்
சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, அவர்கள் மீதான அத்துமீறல்களை தடுப்பது.மேலும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்பது, குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிப்பது உட்பட, குழந்தைகள் நலனில் அக்கறை செலுத்தும் பணிகளை, இந்த அமைப்பு செய்து வருகிறது.
இந்நிலையில், கிரானைட் குவாரிகளில், குழந்தை தொழிலாளர்கள் பணி அமர்த்தப்படுவது குறித்தும், அவர்கள் மீதான அத்துமீறல்களை தடுப்பது குறித்தும் நடவடிக்கை எடுக்க, தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் முடிவு செய்தது.
இதற்காக, உண்மை அறியும் குழு உருவாக்கப்பட்டது. இதில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம், 'யூனிசெப்' எனப்படும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் சர்வதேச நிதியம், மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை சேர்ந்தவர்கள், உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
முதல் கட்ட ஆய்வு :
இந்தக் குழு, 2017, செப்டம்பர் மற்றும், 2018, பிப்ரவரியில் இரண்டு கட்டங்களாக ஆய்வு நடத்தியது. ஆந்திரா, தெலுங்கானாவின் பிரகாசம் மற்றும் கரீம் நகர் மாவட்டங்களில் முதல் கட்ட ஆய்வு நடத்தப்பட்டது. இரண்டாம் கட்ட ஆய்வு, தமிழகத்தின் சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், கர்நாடகாவின் ராமநகரா மாவட்டத்திலும் நடத்தப்பட்டது.
குவாரிகளில் பணிபுரிபவர்கள், கிராமத்து மக்கள் மற்றும் பள்ளிகளில் நேர்காணல்கள் நடத்தப்பட்டன. இதன் இறுதியில், அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள கிரானைட் குவாரிகளில், குழந்தை தொழிலாளர் முறை, முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டு உள்ளனர்.
'இங்குள்ள குவாரிகளுக்கும், கிராமங்களுக்கும் அதிக துாரம் இருப்பதால், அங்கு குழந்தைகள் பணியாற்றுவதற்கான சான்றுகள் இல்லை. 'இருப்பினும், இந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ - மாணவியரின், வருகைப் பதிவேடுகளை, தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியம்' என, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சியில் குவாரிகள் முக்கிய பங்கு:
ஆய்வுப் பணியில் ஈடுபட்ட தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய உறுப்பினர், பிரியங்கா கன்னுாங்கோ கூறியதாவது:இந்த குவாரிகளில் பெரும்பாலும், பீஹார், ஒடிசா மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அதில் பலர், தனியாளாக பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களுக்கு, தங்கும் இடம் மற்றும் உணவு போன்ற வசதிகளை, குவாரி உரிமையாளர்கள் செய்து தருகின்றனர். குவாரிகள் அமைந்துள்ள இடங்களில், வேறு வருமானத்திற்கான வழிகள் இருப்பதாக தெரியவில்லை. அந்த கிராமங்கள், குவாரிகளை நம்பியே இருக்கின்றன. அப்பகுதியின் உள்ளூர் பொருளாதாரத்தில், இந்த குவாரிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Share this

0 Comment to " ஒழிப்பு! தமிழக குவாரிகளில் குழந்தை தொழிலாளர் முறை.. பள்ளி வருகை பதிவேடை கண்காணிக்க அறிவுறுத்தல்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...