பி.இ.: நான்கு சுற்றுகள் முடிவில் 51,990 இடங்களுக்கு மட்டுமே சேர்க்கை !!

பி.இ. பொதுப் பிரிவு ஆன்-லைன்
கலந்தாய்வு இன்னும் ஒரு சுற்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், 51,990 இடங்கள் மட்டுமே இதுவரை நிரம்பியுள்ளன.
சுமார் 1.15 லட்சம் இடங்கள் சேர்க்கையின்றி காலியாக உள்ளன.
தமிழகம் முழுவதும் உள்ள 509 பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருந்த 1,76,865 இடங்களுக்கான கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
நான்கு சுற்றுகள் நிறைவு
முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டுப் பிரிவினர் என சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது
அதனைத் தொடர்ந்து பொதுப் பிரிவு மாணவர்களுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு தொடங்கப்பட்டது
 பொதுப் பிரிவு தொடங்கும்போது மொத்தம் 1,67,380 இடங்கள் இடம் பெற்றிருந்தன.
மொத்தம் 5 சுற்றுகளாக நடத்தப்படும் இந்த பொதுப் பிரிவு கலந்தாய்வில், திங்கள்கிழமையுடன் நான்கு சுற்றுகள் நிறைவடைந்தன.
1 லட்சத்து 15 ஆயிரம் காலியிடங்கள்
முதல் சுற்றில் 6,768 பேர், இரண்டாம் சுற்றில் 12,206 பேர், மூன்றாம் சுற்றில் 17,152 பேர் மற்றும் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நான்காம் சுற்றில் 15,864 பேர் என மொத்தம் 51,990 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து, இறுதி ஒதுக்கீட்டையும் பெற்றுள்ளனர்.
 இன்னும், ஒரே ஒரு சுற்று கலந்தாய்வு மட்டுமே நடைபெற உள்ள நிலையில், 1,15,390 இடங்கள் சேர்க்கை இன்றி காலியாக உள்ளன*
*கடைசி சுற்றில் 20,000 இடங்கள் சேர்க்கை பெற்றாலும், குறைந்தபட்சம் 95,000 இடங்கள் மாணவர் சேர்க்கையின்றி காலியாக இருக்க வாய்ப்பு உள்ளது என்கின்றனர் கல்வியாளர்கள்.
முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்புகள்.
 அகில இந்திய தொழில்நுட்பக் கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவுறுத்தலின் அடிப்படையில், அண்ணா பல்கலைக்கழக கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்க்கை பெற்ற முதலாமாண்டு மாணவர்களுக்கு மூன்று வார கால அறிமுக வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கின.
இந்த அறிமுக வகுப்புகளை அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா தொடங்கி வைத்தார்.
 இந்த அறிமுக வகுப்புகளுக்குப் பிறகு, மாணவர்களுக்கு முறையான வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஆகஸ்ட் 29-ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

Share this