PADASALAI.NET 10th, 11th, 12th, TNTET, TRB, TNPSC, STUDY MATERIALS, ONLINE TESTS

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official

கட்டியணைத்து வாழ்த்திய குழந்தைகள்.... இதுதான் விருது!" தேசிய நல்லாசிரியர் ஸதி டீச்சர்

மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின்
பிறந்த நாளான செப்டம்ர் 5-ம் தேதி, தேசிய ஆசிரியர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அதையொட்டி, மத்திய-மாநில அரசுகள் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து கெளரவப்படுத்தும். இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் பட்டியலில், தமிழகத்திலிருந்து கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராடி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர். வாழ்த்துடன் உரையாடினோம்.``என் பூர்வீகம், கோத்தனூர். அப்பா கல்வித்துறையில் வேலை பார்த்தார். நானும் என் அக்காவும் கல்வித்துறையிலேயே பயணிக்க ஆசைப்பட்டார். 1995-ம் ஆண்டு, டிஆர்பி (ஆசிரியர் தகுதித்தேர்வு) எழுதி, ஆசிரியராகத் தேர்வானேன். சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தின் அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியைப் பணியைத் தொடங்கினேன். பல பள்ளிகளுக்கு இடமாறுதலாகி, 2009-ம் ஆண்டில், தலைமை ஆசிரியை ஆனேன். இந்தப் பள்ளிக்கு வந்தது 2012-ம் ஆண்டு.


நான் வொர்க் பண்ணின எல்லாப் பள்ளிகளிலுமே, மாணவர்கள் நல்ல சுற்றுப்புறச் சூழலில் படிக்கணும். அவர்களின் கல்வித்தரம் உயரணும் என்பதில் கவனமா இருப்பேன். பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பலரின் உதவிகளுடன் மேம்படுத்தியிருக்கிறேன். இந்தப் பள்ளிக்கு வந்தபோது, வகுப்பறையும் கட்டடங்களும் பழுதாகி இருந்தன. கழிவறை வசதி சரியில்லை. இவற்றைச் சரிசெய்ய களம் இறங்கினேன். மாணவர்களுக்குக் கழிவறை வசதியை ஏற்படுத்த, எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் நிதி போதுமானதா இல்லை. எங்க கிராமத்தில் உள்ள எல்.என்.டி கம்பெனி நிர்வாகத்திடம் உதவி கேட்டேன்.
அவங்க கொடுத்த 5 லட்சம் நிதியுதவியால், தரமான கழிவறை வசதியை உருவாக்கினோம். அந்த முதல் வெற்றி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. அப்போது, 146 மாணவர்கள் இருந்தாங்க. மாணவர்கள் இடைநிற்றலும் அதிகமா இருந்துச்சு. இந்தக் கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் எங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது சவாலாக இருந்துச்சு. இதை எல்லாம் மாற்றி, தனியார் பள்ளிக்கு இணையா கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம்'' எனப் பெருமிதத்துடன் தொடர்கிறார் ஸதி.
``நிறைய நிறுவனங்களின் உதவியை நாடினோம். எல்.என்.டி நிறுவனம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுக் கட்டடங்களைக் கட்டிக்கொடுத்தாங்க. டேப்லெட் பயன்பாட்டுடன், ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் உட்பட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகளைச் செய்துகொடுத்திருக்காங்க. `மெஷர் கட்டிங்' என்ற நிறுவனம், சுகாதாரமான குடிநீர் வசதி, கணினி பயிற்சி வசதிகளைச் செய்துகொடுத்தாங்க. வி.கே.சி நிறுவனத்தினர்,
ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் எல்லோருக்கும் புது ஷூ, பெல்ட், டை, ஐடி கார்டு கொடுத்து உதவுறாங்க. ஃபர்னிச்சர் உதவிகளையும் செய்றாங்க. இவர்களின் உதவியால், சில ஆண்டுகளிலேயே எங்க பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாச்சு. இப்போ 270 மாணவர்கள் படிக்கிறாங்க. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மாணவர்கள் சிறப்பா இருக்காங்க. 42 வட மாநில மாணவர்களின் தமிழ்ப் பேச்சும் இனிமையா இருக்கும். யோகா, கராத்தே, இசைப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி உட்பட பல பயிற்சிகள் கொடுக்கிறோம். பல போட்டிகள்லயும் மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுவருகிறாங்க" என்கிறார்.
பள்ளி மாணவர்களால் சிறப்பாக நடைபெற்றுவரும் `குட்டி கமாண்டோ' திட்டம் பற்றிக் குறிப்பிடும் ஸதி, ``எங்க கிராமத்தில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுச்சு. பல குழந்தைகள் சரிவர பள்ளிக்கு வராம இருந்தாங்க. இதைத் தடுக்க, `குட்டி கமாண்டோ' என்ற படையை உருவாக்கினேன். அந்தப் படையில் 10 மாணவர்கள் வீரர்களாக இருக்காங்க. அவங்க தினமும் காலையில 5.30 மணிக்கும், மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்குள் விசிலடித்தபடி வலம்வருவாங்க. அதனால்,
பலரும் பொதுவெளியில் மலம் கழிப்பதில்லை. மீறிக் கழிப்பவர்களிடம், `பொதுக்கழிப்பிட வசதி அல்லது தனிக்கழிப்பிட வசதியைப் பயன்படுத்துங்க. இல்லையெனில் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்'னு சொல்வாங்க. இந்தத் திட்டம் பெரிய அளவில் வெற்றிபெற்றிருக்கு. அடுத்து, பிளாஸ்டிக் பை பயன்பாடில்லா கிராமம் என்ற முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்" எனப் புன்னகைக்கிறார் ஸதி.
இவர், கடந்த ஆண்டு மாநில அளவிலான `சிறந்த நல்லாசிரியர் விருது' வென்றது குறிப்பிடத்தக்கது. ``தேசிய நல்லாசிரியர் விருது செய்தி கிடைச்சதும், நான் செய்துவரும் அறப்பணியை ஊக்கப்படுத்துவதாகவும், மற்ற ஆசிரியர்களுக்குத் தூண்டுகோலாகவும் இந்த விருது அமையும்னு நினைச்சேன். விருது செய்தியைக் கேள்விப்பட்டு, பல குழந்தைகள் எனக்கு போனில் வாழ்த்துச் சொன்னாங்க. எதிர்பாராத அவர்களின் வாழ்த்துகளால் நெகிழ்ந்துபோனேன். இன்னைக்குப் பள்ளி தொடங்கினதும், பிரேயர்ல விருது செய்தியைக் குழந்தைகள் எல்லோரிடமும் சொன்னேன். என்னைக் கட்டியணைத்து வாழ்த்துச் சொன்னாங்க. இதுவே சிறந்த விருதா நினைக்கிறேன். சீக்கிரமே குழந்தைகளுக்குப் பிரியாணி விருந்து கொடுத்துக் கொண்டாட ஆசைபடறேன்" என்கிறார் ஆசிரியை ஸதி.
1 Comments:

  1. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Group