பாத்திரம் கொண்டு வந்தால் தள்ளுபடி: தமிழ்நாடு ஹோட்டல் சங்கம்!

பாத்திரம் கொண்டு வந்தால் தள்ளுபடி: ஹோட்டல் சங்கம்!

உணவகத்தில் உணவு வாங்குவதற்குப் பாத்திரம் கொண்டு
வந்தால் 5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் அறிவித்துள்ளது.
2019ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் பிளாஸ்டிக் தடை செய்யப்படும் என சட்டசபையில் அறிவித்திருந்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனால், பல்வேறு மாவட்டங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டைத் தவிர்த்து, மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு ஹோட்டல் சங்கம் பிளாஸ்டிக்கை தவிர்க்கும் வகையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, உணவு வாங்குவதற்குப் பாத்திரம் கொண்டு வரும் வாடிக்கையாளருக்கு 5 சதவிகிதம் தள்ளுபடி வழங்கும் திட்டத்திற்கான தீர்மானத்தை, இந்த சங்கம் நிறைவேற்றியுள்ளது. இதில், 10,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
“சராசரியாக, ஒவ்வொரு உணவு பார்சலுக்கும் 3 முதல் 4 சதவிகிதம் வரை செலவு ஏற்படும். ஆனால், வாடிக்கையாளரே பாத்திரம் கொண்டு வந்தால் இந்த செலவு மிச்சமாகும். அதனால், நாங்கள் கொண்டு வந்திருக்கும் திட்டத்தை வாடிக்கையாளருக்குத் தெரியும் வகையில் பலகையில் எழுதி வைக்குமாறு ஒவ்வொரு உணவகத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று இச்சங்கத்தின் தலைவர் ரவி கூறினார்.
“மாநிலத்தில் விடுதிகளுடன் கூடிய உணவகங்கள், உணவகங்கள் மற்றும் சிறிய கடை என 2 லட்சம் உணவகங்கள் உள்ளன. வேலூர், சிதம்பரம் மற்றும் மதுரை போன்ற பகுதியில் வாடிக்கையாளர்களைப் பாத்திரம் கொண்டு வருமாறு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு பாத்திரம் கொண்டுபோய்தான் உணவு வாங்கி வந்தோம். தற்போது, திரும்பவும் அந்தக் காலத்துக்கு செல்கிறோம்” என சங்கத்தின் செயலாளர் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.
இந்த திட்டத்தினால் பிளாஸ்டிக் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில உணவகங்கள் வாழை மற்றும் தையல் இலைகளில் உணவு பார்சல்களை கொடுத்து வருகின்றன. “அனைவரும் சொந்த பாத்திரங்களைக் கொண்டு வரமுடியாததால், அலுமினியப் பாத்திரங்கள் மற்றும் அட்டைப் பெட்டிகள் போன்ற மாற்று வழிகள் குறித்து யோசித்து வருகிறோம்” என அடையார் ஆனந்த பவனின் விஷ்ணு ஷங்கர் கூறினார்.

Share this