தீபாவளிக்கு பட்டாசு வாங்க சேர்த்து வைத்த பணத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை கொடுத்த ஏழை மாணவர்கள்
ஸ்ரீவில்லிபுத்தூர், ஆக.20: கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக தாங்கள் இரு நாட்கள் மிட்டாய் வாங்கிச் சாப்பிட பெற்றோர் தந்த காசுகளை சேர்த்து வைத்து தலைமை ஆசிரியரின் உதவியுடன், அம் மாநில முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளனர் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் படிக்கும் ஏழை மாணவ மாணவியர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஏழை மாணவ மாணவியர் சுமார் 15 பேர் படித்து வருகிறார்கள். இங்கு பணிபுரியும் தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ், மாணவ மாணவியரிடம் கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும், மாணவர்கள் உதவ வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கியுள்ளார்.
இதனையடுத்து ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி மா.வேல்மயில், தங்களுக்கு பெற்றோர் ஸ்னாக்ஸ் வாங்கிச் சாப்பிட தரும் காசுகளை இரு நாட்கள் சேர்த்து வைத்து தருவதாகக் கூறினார். இதனை அனைத்து மாணவ மாணவியரும் ஏற்றுக் கொண்டு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தங்களது பெற்றோர் மற்றும் தாத்தா, பாட்டிமார் கொடுத்த காசுகளை வாங்கிச் சாப்பிடாமல் சேர்த்து வைத்து திங்கள்கிழமை பள்ளிக்குக் கொண்டு வந்தனர்.

பொ.சுரேஷ் என்ற மாணவர் வரும் தீபாவளிக்கு பட்டாசு வாங்க சேர்த்து வைத்த பணத்தை கொண்டு வந்திருந்தார். அ.கனிதா என்ற மாணவி கடந்த ஓராண்டாக தான் சேர்த்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு வந்திருந்தார். கோ.காளி வைஷ்ணவி என்ற மாணவி தனது பிறந்தநாளுக்கு ஆடை வாங்க சேர்ந்து வைத்திருந்த பணத்தைக் கொண்டு வந்திருந்தார். இவ்வாராக மொத்தம் ரூ.1584 யை ஏழை மாணவ மாணவியர் வழங்கினர். இதனுடன் தலைமை ஆசிரியர் தனது பங்களிப்பாக ரூ.3 ஆயிரம் சேர்த்து மொத்தம் ரூ.4584 யை உடனடியாக கேரள மாநில முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி அதற்கான ரசீதும் பெற்றார்.
இது குறித்து தலைமை ஆசிரியர் கோ.ஜெயக்குமார் ஞானராஜ் கூறியதாவது: சிறு வயதிலே மாணவர்களிடம் இரக்கம் மற்றும் கொடுக்கும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். வாங்கிக் கொண்டே இருக்கக் கூடாது. இருப்பதிலிருந்து கொடுக்க பழக வேண்டும் என்று மாணவர்களிடம் விளக்கினேன். ஏற்கனவே முன்னர் வேலை பார்த்த பள்ளிகளிலும் கார்கில் போர், குஜராத் பூகம்பம் போன்ற நிகழ்வுகளின் போதும் மாணவர்களிடம் பேரிடர்கள் குறித்து விளக்கி பிரதமர் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பியுள்ளோம். கொடுக்கும் பணம் சிறிதாக இருந்தாலும், மாணவர்களிடம் கொடுக்கும் மற்றும் உதவும் மனப்பான்மையை வளர்க்க வேண்டும். இது போன்ற பண்புகளை  மாணவர்கள் மனதில் வளர்த்து விட்டால், அவர்கள் தலைமுறையே இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும் போது தாங்களே முன்வந்து உதவுவார்கள்.
மாணவர்கள் தாங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு சில காசுகள் உதவியதை பெருமையாக கருதுகிறார்கள் என்றார் அவர்.

Share this

0 Comment to "தீபாவளிக்கு பட்டாசு வாங்க சேர்த்து வைத்த பணத்தை கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு பணத்தை கொடுத்த ஏழை மாணவர்கள்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...