கடலுார் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி
பள்ளியில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதால் தனியார் பயிற்சி பள்ளிகள் மூடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவுடன் மாணவ, மாணவியர்கள் அடுத்தது பிளஸ் 2, தொழிற்கல்வி பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி பள்ளி, மருத்துவ துறையில் உள்ள சில படிப்புகள் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து படிக்கின்றனர். மாணவர்களின் இந்த தேர்வு வேலைவாய்ப்பை பொறுத்தே மாறுபடுகிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆசிரியர் பள்ளியில் சேர்ந்து படித்து தேர்ச்சி பெற்றுவிட்டால் வேலை கிடைத்துவிடும் என்கிற நிலை இருந்தது. ஆனால் தற்போது அந்த சூழ்நிலை அடியோடு மாறிவிட்டது. ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படித்தாலும் தமிழக அரசின் &'டெட்&' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
மேலும் தற்போது தமிழக அரசு உத்தரவின் படி &'டெட்&' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் போட்டி தேர்விலும் தேர்ச்சி பெற்றால் தான் ஆசிரியர் பணி என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதனால், பெரிய அளவில் ஒன்றும் வேலைகிடைப்பதும் இல்லை. இதனால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் காற்று வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலுார் மாவட்டத்தில் 20 தனியார் ஆசிரியர் பள்ளிகளும், 2 அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும், கடலுார், பரங்கிப்பேட்டையில் அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன.
இப்பள்ளிகள் மூலம் 1,400 இடங்கள் உள்ளன. அவற்றிக்கான கவுன்சிலிங் கடந்த 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதில், வடலுாரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மொத்தமுள்ள 50 இடங்களில் வெறும் 13 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இவர்களில் 11 பேர் மாணவியர்களும், 2 பேர் மாணவர்களும் அடங்கும். கடலுார் அரசு பயிற்சி பள்ளியில் 13 பேர் சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டு இதே பயிற்சி பள்ளியில் 23 மாணவ மாணவியர்கள் சேர்ந்து படித்துள்ளனர்.
இதில், மாணவர்கள் மிகவும் குறைவாக இருப்பதற்கு காரணம் ஆரம்ப பள்ளிகளில் ஒன்று முதல் 3 வகுப்பு வரை ஆசிரியைகளும், 4 மற்றும் 5ம் வகுப்புகளில் மட்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதனால் வேலைவாய்ப்பு மிக அரிதாக இருப்பதால்தான் மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை.
தனியார் பயிற்சி பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கூட கொடுக்க முடியாமல் திணறி வரும் நிலையில் மூடிவிடும் முடிவில் உள்ளனர். இந்நிலையில், மொத்தமுள்ள 20 பயிற்சி பள்ளிகளில் 13 பள்ளிகள் மட்டுமே குறைவான மாணவ, மாணவியர்களை சேர்த்துள்ளது. மீதியுள்ள 7 பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கையை முற்றிலுமாக நிறுத்தி விட்டு மூடி விடும் அவல நிலையில் உள்ளன.
RELATED RIGHT DECISION BY THE TEACHER TRAINING INSTITUTIONS
ReplyDelete