ஒரேநாடு, ஒரே தேர்தல் என்பது தற்போதையே சூழலில் சாத்தியமில்லை: தலைமை தேர்தல் ஆணையர் !!!

நாடாளுமன்றத்திற்கு, சட்டமன்றங்களுக்கும்
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு, தற்போதைய நிலையில், சாத்தியமில்லை என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் தெரிவித்திருக்கிறார்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை பாஜக தொடர்ந்து முன்மொழிந்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்த கருத்திற்கு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறார்.
 இதுதொடர்பாக, மத்திய சட்ட ஆணையமும், இம்மாத இறுதியில் பரிந்துரை அறிக்கையை வழங்கவிருக்கிறது. இருப்பினும், ஒரே காலக்கட்டத்தில், நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்த, தனி பிரதிநிதித்துவ சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று, தலைமை தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது.
இந்தச் சூழலில், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற முழக்கத்திலிருந்து சற்று பின்வாங்கியுள்ள பாரதிய ஜனதா கட்சி, குறைந்தபட்சம் நாடாளுமன்றத் தேர்தலோடு, அதற்கு முன்னும், பின்னும், சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொள்ளும், 11 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும், தேர்தல் நடத்த கோரியிருக்கிறது.
இதுதொடர்பாக பேசிய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத், பிரதிநிதித்துவ சட்டம் இயற்றப்படாமல், நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு, தற்போதைய நிலையில் சாத்தியமில்லை என கூறியிருக்கிறார். தேர்தல்களே தேவைப்படாத நிலையில், சட்டப்பேரவைகளை கலைத்துவிட்டு, தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இப்படியாக, தேர்தல் சட்டம் திருத்தியமைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஒரே நேரத்தில், நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துவது என்பது சாத்தியப்படும் என்றும் ஓம் பிரகாஷ் ராவத் கூறியிருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலோடு, 11 சட்டமன்றங்களுக்கு தேர்தல் நடத்துமாறு பாஜக தலைவர் அமித் ஷா விடுத்துள்ள கோரிக்கை குறித்து பதிலளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர், இதற்கும், இருப்பில் இருப்பதை விட, அதிக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், தேவைப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Share this

0 Comment to "ஒரேநாடு, ஒரே தேர்தல் என்பது தற்போதையே சூழலில் சாத்தியமில்லை: தலைமை தேர்தல் ஆணையர் !!!"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...