ஜெர்மனியைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் வெர்னர் ஹெர்சாக் 2007-ம் ஆண்டு இயக்கிய 'Encounters at the End of the World' ஆவணப்படத்தின் காட்சிதான் 2026-ம் ஆண்டான தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அந்தக் காட்சியில், ஒரு பென்குயின் திடீரென தனது கூட்டத்தை விட்டு விலகி, சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ள மலைத்தொடரை நோக்கிச் செல்கிறது. அதனுடன் வந்த மற்ற பென்குயின்கள் உணவு மற்றும் உயிர்வாழ்வதற்காக கடலை நோக்கிச் செல்லும் நிலையில், இந்த பென்குயின் மட்டும் தனியாக மலையை நோக்கிச் செல்வது அந்தக் காணொலியில் தெரிகிறது. அங்கு, கடல் இல்லை, உணவு இல்லை. மலைகள், பனி, உறைபனி மட்டுமே உள்ளது.
தனியே செல்லும் பென்குயின் காணொலி, ஒவ்வொருவருடனும் தொடர்புடையதாக உணர வைக்கிறது. இதனால்தான், இந்த காணொலி இணையதளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த பென்குயின் ஏன் தனியே செல்ல வேண்டும், மற்றவர்களைப் போல தானும் சாதாரண வாழ்க்கை வாழாமல், புதிதாக ஏதோ ஒன்றை தேடிச் செல்கிறதா, மனச்சோர்வா, தனிமையை தேடிசெல்கிறா, இறந்துவிடுவோம் எனத் தெரிந்தும் அங்கு செல்கிறதா என பலரும் கருத்துகளையும் கேள்விகளையும் எழுப்புகின்றனர்.
இந்த டிரெண்டிங்கில் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் இணைந்துள்ளார். ஆர்டிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள கிரீன்லாந்து பகுதியை அமெரிக்கா வசம் ஒப்படைக்க வேண்டும் என ட்ரம்ப் தொடர்ந்து பேசி வரும் நிலையில், அந்தப் பகுதியில் பென்குயினுடன் ட்ரம்ப் நடந்து செல்வது போன்ற ஏஐ-யில் உருவான படத்தை வெள்ளைமாளிகை வெளியிட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், அந்த தனியே செல்லும் பென்குயினே விஜய்தான் என தவெக விர்ச்சுவல் வாரியர்ஸும் தங்கள் பங்குக்கு பதிவிட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விஞ்ஞானிகள், வனவிலங்கு ஆர்வலர்கள் கூறுகையில், “இந்த பென்குயின் நடத்தை அரிது என்றாலும், நரம்பியல் பிரச்சினை, இனப்பெருக்ககால மனஅழுத்தம், குழப்பத்தால் இவ்வாறு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன” எனத் தெரிவிக்கின்றனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...