இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ), தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். மாநிலம் முழுவதுள்ள 7 ஆயிரத்துக்கும் மேலான தனியார் பள்ளிகளில் 1 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில், எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேருபவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்கலாம். தமிழகத்தில் 2013-ல் அமலான இந்த ஆர்டிஇ திட்டத்தின் கீழ், இதுவரை சுமார் 5.7 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், வரும் கல்வியாண்டு (2026-27) இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பப் பதிவு வரும் 20 முதல் மே 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை தனியார் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆர்டிஇ திட்டத்தின் கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கை பெற முடியும். இந்த திட்டத்தின் கீழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் விண்ணப்பிக்க வேண்டும்.
வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர்கள், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், 3-ம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளிகள், துப்புரவுத் தொழிலாளர்களின் குழந்தைகள் ஆகியோரின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். நலிந்த பிரிவினர் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் வருமானம், இருப்பிடம், சாதிச் சான்றிதழ்களை சமர்பிப்பது அவசியமாகும். பெற்றோர்கள் rte.tnschools.gov.in எனும் வலைத்தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பம் வந்தால் வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...