கோடை விடுமுறை முடிவடைந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் 4-ம் தேதி திறக்கப்பட்டு, தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் முதல் நாளிலே மாணவர்களுக்கு பாடப் புத்தகம், நோட்டு, சீருடை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் உதவித் தொகை என்ற பெயரில், பெற்றோரிடம் மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிய வந்துள்ளது.
பள்ளிகளில் 6 -ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பெற்றோரை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், உங்கள் குழந்தை ரூ.50 ஆயிரம் உதவித் தொகை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதைப் பெற ரூ. 18 ஆயிரம் முன் பணமாக செலுத்த வேண்டும். இத்தொகை பின்னர் திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
அதன் பிறகு, பெற்றோரின் வாட்ஸ்அப் எண்ணுக்கு க்யூ ஆர் ஸ்கேன் குறியீட்டை அனுப்பிவைத்து, அதன் மூலம் பணம் செலுத்தமாறு கூறுகின்றனர். மேலும், பெற்றோரை நம்ப வைப்பதற்காக ஏற்கனவே உதவித் தொகை பெற்றதாகக் கூறி சில பெற்றோர்களுக்கு அனுப்பிய ஸ்கீரின் ஷாட்டை போலியாக அனுப்பி வைக்கின்றனர்.
இதை உண்மை என நம்பும் சில பெற்றோர், சம்பந்தப்பட்ட எண்களுக்கு பணத்தை அனுப்பி வைக்கின்றனர். பின்னர், பணம் செலுத்திய ஓரிரு நாள்களில் அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள மொத்தத் தொகையையும் மர்ம நபர்கள் தங்களது வங்கிக் கணக்குக்கு மாற்றி உள்ளனர்.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ``இதுபோன்ற மோசடி கடந்த 2023-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. பள்ளிக் கல்வித் துறை சார்பில், உதவித் தொகை வழங்குவதற்காக பெற்றோர்களிடம் யாரும் தொடர்பு கொள்வதில்லை.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை என அந்தந்த நலத்துறை சார்பில், மாணவர்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக கல்வி உதவித் தொகை செலுத்தப்படுகிறதே தவிர, கூகுள் பே, போன் பே போன்றவற்றின் மூலம் அனுப்பப்படுவதில்லை.
இது தொடர்பாக வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகளை பெற்றோர் நம்ப வேண்டாம். கடந்த காலங்களில் இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறையில் புகார்கள் அளிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனவே, மோசடி நபர்களிடம் ஏமாறாமல் பெற்றோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என தெரிவித்தனர்.
வேலைநாள் 210 ஆக குறைப்பு இதற்கிடையே, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்ட 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான நாட்காட்டியின்படி, பள்ளி வேலைநாட்கள் 210 ஆக குறைக்கப்பட்டுள்ளது. முந்தைய நாட்காட்டியில் வேலைநாள் 220 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மேலும், புதிய நாட்காட்டி அறிவிப்பின்படி, அனைத்து சனிக்கிழமைகளும் முழு விடுமுறை நாட்களாக இருக்கும். இந்த நாட்காட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும் என பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
வெயில், மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் சூழலில், அதை ஈடுசெய்ய சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படுவது வழக்கம். அதுபோன்ற எதிர்பாரா விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை வேலைநாளாக இருக்குமா அல்லது இருக்காதா என்பது பற்றி புதிய நாட்காட்டியில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...