திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைபேர் பகுதியில் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவால் 74 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் ஏழு பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மேலும் இருவர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது எனக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு குழு அமைத்துள்ளது.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் சாந்தாராம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. வாயுக் கசிவு சம்பவம் குறித்து விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை ஆணை பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே, அமோனியா கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அமைச்சர் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
தொடர்ந்து, அமோனியா வாயு கசிவு சம்பவம் குறித்த விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், அமோனியா வாயுக்கசிவால் 9 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இறால் பண்ணை உரிமையாளர்கள் மோகன், ஜோசப் ஆகியோரை காவல் துறை கைது செய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான இறால் பதப்படுத்தும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் இரவு, பகல் என இரண்டு ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இன்று காலை சுமார் 120 பேர் பணியில் இருந்த போது திடீரென அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில், இந்த வாயுவை சுவாசித்த தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். உடனே அவர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் மேலும் சிலருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில தொழிலாளர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அமோனியா வாயு நேரடியாக உடலுக்குள் சென்றதால் நுரையீரல் வீங்கி கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...