மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் எம்இ, எம்டெக், எம்எஸ்சி உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில் சேர ‘கேட்’ (GATE) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். அதேபோல, ஒருசில தனியார் கல்வி நிறுவனங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களும் கேட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துகின்றன. மத்திய அரசின் ஒருசில பொதுத் துறை நிறுவனங்கள் கேட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனங்களையும் மேற்கொள்கின்றன.
கேட் தேர்வு மதிப்பெண் 3 ஆண்டுக்கு செல்லத்தக்கது. கேட் நுழைவுத் தேர்வை ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஒரு ஐஐடி அல்லது ஐஐஎஸ்சி (இந்திய அறிவியல் நிறுவனம்) நடத்தும். அந்த வகையில், வரும் 2027-ம் ஆண்டில் கேட் தேர்வு நடத்தும் பொறுப்பு சென்னை ஐஐடியிடம் வழங்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, 2027 கேட் நுழைவுத் தேர்வுக்கான அறிவிப்பை சென்னை ஐஐடி நேற்று வெளியிட்டது. அதன்படி, 2027 பிப்.6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் (சனி, ஞாயிறு) 30 பாடங்களில் கேட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வில் புதிதாக ‘ரோபோட்டிக்ஸ் அண்ட் ஆட்டோமேஷன்’ பாடம் சேர்க்கப்படஉள்ளது. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆகஸ்ட் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளது. முழு விவரங்களையும் https://gate2027.iitm.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விரிவாக அறியலாம் என்று சென்னை ஐஐடி அறிவித்துள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...