இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் 38 மாவட்டங்களிலும் அரசு மாதிரிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
மாற்றுப் பணி மற்றும் பணி மாறுதலில் இப்பள்ளிகளில் பணியாற்றி வரும் முதுநிலை ஆசிரியர்கள், கணினி பயிற்றுநர்கள் கடந்த ஜூலை 8-ம் தேதி நடைபெற்ற பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து, முதுநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்று வேறு மேல்நிலைப் பள்ளிகளை தேர்வு செய்து இடமாறுதல் ஆணைகளைப் பெற்றனர்.
தற்போது நிர்வாக காரணங்களுக்காகவும், ஏற்கெனவே ஆசிரியர்களுக்கு மாதிரிப் பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளதாலும், மாதிரிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நலன் கருதியும் அந்த ஆசிரியர்கள் தொடர்ச்சியாக மாதிரிப் பள்ளியிலேயே மாற்றுப் பணியில் ஈடுபட ஆணை வழங்குமாறு தமிழ்நாடு மாதிரிப் பள்ளிக் குழு உறுப்பினர் செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதை ஏற்று, பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு பணி மாறுதல் பெற்று சம்பந்தப்பட்ட பள்ளியில் பணி ஏற்றுக்கொண்ட முதுநிலை ஆசிரியர்களுக்கு மீண்டும் மாதிரிப் பள்ளிகளிலேயே மாற்றுப் பணி வழங்கப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை மாதிரிப் பள்ளிகளில் அவர்கள் மாற்றுப்பணியில் ஈடுபடும் வகையில் பணி விடுவிப்பு ஆணை வழங்க வேண்டும். அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் பணிபுரியவில்லை என்பதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
அதேபோல, மாதிரிப் பள்ளிகளில் மாற்றுப் பணிக்குச் செல்வதால் அரசுப் பள்ளிகளில் கற்பித்தல் பணியை தொடர, பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்எம்சி) மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...