மாணவர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் இழப்பதைப் போல இன்னொரு தண்டனை ஆசிரியனுக்கு உண்டா? மாலன் நாராயணன்

         தீர்ப்புகளும் கொந்தளிப்புகளும் திரையிலும் தாளிலும் இறைந்து கிடக்கின்றன. வரி பிளந்து வாசிக்கும் எனக்குள்ளோ கேள்விகள் நிறைந்து கிடக்கின்றன.
 
         1.காற்றும் நெருப்பும் கலந்து ஆடிய மோக விளையாட்டில் மலர்கள் கருகின. நெருப்புப் படர்ந்த நேரத்தில் ஆசிரியர்கள் வகுப்பறையை விட்டு ஓடிவிட்டார்கள் .அவர்கள் எங்களை காப்பாற்ற முயற்சிக்கவில்லை என்வே அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என பிழைத்த குழந்தைகள் பேட்டி அளிக்கின்றன. குரு தேவனாகும் போது கும்பிடப்படுகிறான். தேவன் மனிதனாகும் போது தண்டிக்கப்படுகிறான். மாணவர்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் இழப்பதைப் போல இன்னொரு தண்டனை ஆசிரியனுக்கு உண்டா?


2.அடிப்படை வசதிகள் இல்லாமல் அனுமதி கொடுத்த அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் அதில் சந்தேகமில்லை. அடிப்படை வசதிகள் இல்லாத பள்ளியில் பிள்ளைகளைத் திணித்து விட வேண்டும் என்று தீர்மானித்த பெற்றோருக்கு என்ன தண்டனை? காய்கறிகளைக் கூட முற்றலா, புழுத்ததா என ஆராய்ந்து வாங்கும் அம்மாக்கள் அப்பாக்கள் பள்ளிக் கூடங்களை பார்வையிட்டா பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள்? பெற்றோரின் பொறுப்பு துவங்குமிடம் எது? முடியும் இடம் எது?

3.ஆறு மாதத்தில் அதிகம் போனால் ஓரிரு ஆண்டுகளில் முடித்திருக்க வேண்டிய வழக்கைப் பத்து ஆண்டுகள் இழுத்தடித்த நீதித்துறையினருக்கு தண்டனை ஏதும் உண்டா? தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்ற தத்துவத்தை எத்தனை நாள் படித்து படித்து மறப்போம்?

4.விபத்தில் விளைந்த நல்லனவற்றை ஊடகங்கள் (தினமணி விதியை மெய்ப்பிக்கும் விதி விலக்கு) மூடி மறைப்பது அறமா? தகுமா? தினமணிச் செய்தியிலிருந்து:

//கும்பகோணம் பள்ளித் தீ விபத்தில் 18 பெற்றோர்கள் தங்களுக்கு இருந்த ஒன்று, இரண்டு குழந்தைகளையும் ஒட்டுமொத்தமாக பறிகொடுத்தவர்கள். இவர்கள் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை செய்து கொண்டவர்கள்.ஆகையால், அவர்கள் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த மருத்துவர் ராதாகிருஷ்ணன், வாரிசு இல்லாத பெற்றோருக்கு உதவ முடிவு செய்து, குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டவர்களுக்கு, மீண்டும் அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பெற இருந்த தடையை நீக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி, அந்த 18 பெண்களுக்கும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சையை நீக்கும் சிகிச்சை செய்யப்பட்டது. அதில் இருவருக்கே குழந்தை பாக்கியம் கிட்டியுள்ளது. குழந்தை பாக்கியம் பெற்ற எம்.வெங்கடேசன் மனைவி வி.மகேஸ்வரி கூறுகையில், என்னுடைய மகள் மீனா (6-ஆம் வகுப்பு), மகன் செல்வகணேஷ் (4-ஆம் வகுப்பு) ஆகிய இருவரையும் தீ விபத்தில் பறிகொடுத்தேன். அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு மீண்டும் எனக்கு 2 குழந்தைகள் பிறந்தன. ஞானசேகர் (3), புவனேஸ்வரி (2) எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறோம். அப்போதைய ஆட்சியர் ராதாகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றார்.//
5. நீதி கேட்பது நியாயமே. நிதி கேட்பது?
குழந்தை என்ற முதலிட்டிற்கு காப்பீடா?
வாழ்க்கை என்பதே வணிகம்தானா?
அன்று தினமணி எழுதிய தலையங்கம் இன்று நினைவில் நிழலாடுகிறது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive