Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

"டெஸ்லா மாடல் S " - எவர் “க்ரீன்” எலெக்ட்ரிக்! உலகின் நம்பர் -1 எலெக்ட்ரிக் கார்!

          மின்சார கார்களா? அதெல்லாம் ஓட்ட நல்லாவும் இருக்காது; ஸ்பீடாகவும் போகாது. என்ன இருந்தாலும் பெட்ரோல் இன்ஜின் ஃபீல் இருக்காது’ என சிலர் சொன்னாலும், காலம் மாறிவிட்டது நண்பர்களே! இனி, மின்சார கார்களைத் தவிர்க்க முடியாது.
பாரம்பரியமிக்க கார் நிறுவனங்களே மின்சார கார் தயாரிப்பிலும், ஆராய்ச்சியிலும் சொதப்பிக்கொண்டிருக்கின்றன. ஒரு மின்சார காராக மட்டுமில்லாமல், உலக ஆட்டோமொபைல் துறைக்கே பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறது, டெஸ்லா மாடல் S காரின் வெற்றி.

2009-ல் அமெரிக்க அரசின் எரிசக்தித் துறையிடம் இருந்து வாங்கிய 465 மில்லியன் டாலர் கடனில்தான் துவங்குகிறது, டெஸ்லா மாடல் S காரின் வரலாறு. புகழ்பெற்ற டிஸைனர் ஃபரன்ஸ் வான் ஹால்ஸ்ஹஸன், டெஸ்லா காரை டிஸைன் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பிரபல முதலீட்டாளர் எலான் மஸ்க், தொழில்நுட்பம் தொடர்பான விஷயங்களை கவனித்துக்கொண்டார். இப்படி உருவானதுதான் டெஸ்லா மாடல் S எலெக்ட்ரிக் கார்.

2012-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாடிக்கையாளர்களின் கைக்குச் சென்றடைய ஆரம்பித்தது இந்த கார். அப்போது, கலிஃபோர்னியாவில் இருக்கும் டெஸ்லாவின் தொழிற்சாலையில், மாடல் S காரின் தயாரிப்பு, வாரத்துக்கு 15 முதல் 200 யூனிட்டுகள் மட்டுமே!

பின்புதான் உலகமே எதிர்பார்க்காத ஆனந்த அதிர்ச்சி செய்தி வந்தது. உலகப் புகழ்பெற்ற 'கன்ஸ்யூமர் ரிப்போர்ட்ஸ்’ பத்திரிகை, 'நாங்கள் டெஸ்ட் செய்ததிலேயே மிகவும் சிறந்தது டெஸ்லா மாடல் S கார்தான்’ என்ற நற்செய்தியை ஊருக்கும் உலகிற்கும் பிரகடனம் செய்தது. இதன் பிறகுதான் இந்த காரின் மீது உலகின் கவனம் முழுமையாகத் திரும்பியது. இதையடுத்து பல ஆட்டோமொபைல் இதழ்கள், '2013-ம் ஆண்டின் சிறந்த கார்’ என டெஸ்லாவுக்கு மணிமகுடம் சூட்ட, அமெரிக்க சாலைப் பாதுகாப்பு அமைப்பான NHTSA, 'நாங்கள் சோதனை செய்ததிலேயே மிகவும் பாதுகாப்பான கார் மாடல் S என அறிக்கைவிட்டது. அதனால், புகழின் உச்சிக்குச் சென்றது டெஸ்லா S. உலகிலேயே சிறந்த ஏரோடைனமிக்ஸ் முறையில் வடிவமைக்கப்பட்ட காரும் இதுதான்.

இந்த ஆண்டு மே மாதம் முதல், வாரம்தோறும் 700 மாடல் S கார்களைத் தயாரிக்கிறது டெஸ்லா. லாபம் குவிந்ததால், அமெரிக்க அரசிடம் இருந்து '2022-ம் ஆண்டுக்குள் திரும்பச் செலுத்திவிடுவோம்’ என்று வாங்கிய 465 மில்லியன் டாலர் கடனை, 9 ஆண்டுகளுக்கு முன்பாகவே, கடந்த ஆண்டு வட்டியுடன் செலுத்திவிட்டது டெஸ்லா. இதேபோல கடனை வாங்கிய நிஸானும், ஃபோர்டும் இன்னும் திரும்பச் செலுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், எதிர்பார்க்காத திசையில் இருந்து வந்தது ஒரு சிக்கல். இதுவரை எந்த ஒரு காரும் சந்தித்திராத இந்தச் சிக்கலை, டெஸ்லா இன்று வரை கஷ்டப்பட்டுச் சமாளித்து வருகிறது. அது, டெஸ்லா கார்களை டீலர்கள் மூலமாக விற்க முடியாது என்பதுதான். டெஸ்லா மாடல் S காரை வாங்க வேண்டும் என்றால், அவர்களுடைய இணையதளம் மூலமாகத்தான் ஆர்டர் செய்ய முடியும். அமெரிக்க நகரங்களில் இருக்கும் ஸ்டோர்கள், காரைப் பார்வையிட மட்டுமே.

இதற்கிடையில் மூன்று டெஸ்லா மாடல் S கார்கள் விபத்தினால் தீப்பிடித்தன. அந்த மூன்று கார்களில் ஒன்றின் உரிமையாளர், 'கார் தீப்பிடித்தாலும், நான் உயிர் தப்பியதற்கு அந்த கார் உதவியது’ என்று ஸ்டேட்மென்ட்விட... பப்ளிசிட்டியில் பட்டையைக் கிளப்பியது. டெஸ்லா மாடல் S காரின் பேட்டரியை, 90 விநாடிகளில் மாற்ற முடியும் என்பதைச் செய்து காட்டி, மற்ற எலக்ட்ரிக் கார்

யாரிப்பாளர்களின் வயிற்றில் புளியைக் கரைத்தார் எலான் மஸ்க். இடையில் ஆப்பிள் நிறுவனம் டெஸ்லா மோட்டார்ஸை விலைக்கு வாங்க ஆர்வம் காட்டியது தனிக் கதை. இப்போது டெஸ்லா மாடல் S காரின் தொழில்நுட்பங்களை, மற்ற கார் நிறுவனங்களுக்குக் காப்புரிமை இல்லாமல் இலவசமாகத் தர எலான் மஸ்க் எடுத்துள்ள முடிவு, அந்த நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது. டொயோட்டா பிரையஸ்-க்கு இருந்த 'க்ரீன்’ இமேஜை உடைத்திருக்கிறது டெஸ்லா மாடல் S. ஆனால், வளரும் நாடுகளுக்கான பிரத்யேக எலக்ட்ரிக் காரை டெஸ்லா தயாரிக்க முன்வந்தால், ஆட்டோமொபைல் துறையின் எவர்க்ரீன் மின்சாரக் கண்ணா, டெஸ்லாதான்!

பதற்றத்தில் டீலர்கள், ஆயில் நிறுவனங்கள்!

டெஸ்லா மோட்டார்ஸ், கடந்த மாதம் எலக்ட்ரிக் கார்களுக்காக தான் உருவாக்கிய தொழில்நுட்பங்களின் காப்புரிமைகளை நீக்கியது. இதனால் எந்த ஒரு கார் நிறுவனமும் டெஸ்லாவின் தொழில்நுட்பங்களை இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். உலகில் எலெக்ட்ரிக் கார்களின் உருவாக்கத்தை அதிகரிக்கும் நல்லெண்ணத்திலேயே இப்படிச் செய்ததாக நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் சொன்னாலும், டெஸ்லா மோட்டார்ஸ் உருவாக்கிவரும் மெகா பேட்டரி தொழிற்சாலையின் மீதுதான் எல்லோர் கண்ணும். இங்கு தயாரிக்கப்பட இருக்கிற கோடிக்கணக்கான பேட்டரிகளை, மற்ற கார் நிறுவனங்கள் வாங்க வைப்பதற்காகவே காப்புரிமைகளை நீக்கி, எல்லா கார் நிறுவனங்களும் டெஸ்லாவை நம்பி இருக்க வேண்டிய நிலைமையை உருவாக்கிவிட்டார் எலான் மஸ்க். உலகில் எலெக்ட்ரிக் கார்கள் பரவலான பயன்பாட்டுக்கு வந்தால், கார் டீலர்களுக்குப் பெரிய அடி காத்திருக்கிறது. எலெக்ட்ரிக் கார்களில் மெயின்டனன்ஸ் என்பது வாடிக்கையாளர்களாலேயே செய்ய முடிகின்ற விஷயம் என்பதால், சர்வீஸில் காசு பார்க்க முடியாது என டீலர்கள் இப்போதே டெஸ்லாவுக்கு எதிராக லாபி செய்ய ஆரம்பித்துவிட்டனர். ஆயில் என்ற சமாசாரமே கிடையாது என்பதால், ஆயில் நிறுவனங்களும் கடுப்பில் இருக்கின்றன.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive