Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ? - கலைஞர்

திமுக தலைவர் கலைஞர் 27.07.2014 ஞாயிற்றுக்கிழமை கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

கேள்வி :- கல்வித் துறை மானியத்தின் மீது பல அறிவிப்புகளை எதிர்பார்த்த ஆசிரியர்கள், எந்த முக்கிய அறிவிப்பும் வராத நிலையில் ஏமாந்திருப்பதாகக் கூறப் படுகிறதே? 

கலைஞர் :- கடந்த 17-7-2014 அன்று தமிழகச் சட்டப் பேரவையில் பள்ளிக் கல்வித் துறை, உயர் கல்வித் துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை ஆகிய மூன்று முக்கிய மானியக் கோரிக்கைகளின் மீது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மூன்று முக்கியத் துறைகளும் பேரவையிலே ஒரே நாளில் அவசர அவசரமாக விவாதிக்கப் பட்டுள் ளது என்பதில் இருந்தே, இந்தத் துறைகளின்பால் இந்த ஆட்சியினருக்கு உள்ள ஆர்வத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. 

கழக ஆட்சியில் மூன்று நாட்கள் ஒதுக்கப்பட்டு, இந்த மூன்று துறைகளுக்கான மானியக் கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டதற்கு மாறாக தற்போது ஒரே நாளில் மூன்று துறைகளுக்கான மானியங்கள் மீது விவாதம் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறை மானிய விவாதத்தின் போது பல முக்கிய அறிவிப்புகளை ஆசிரியர் சமுதாயம் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தது. குறிப்பாகப் பள்ளிகளில் அதிகரித்துக் கொண்டே இருக்கும் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் அனைத் தும் மாணவர் நலன் - முன்னேற்றம் கருதி நிறைவு செய்யப்படும் என்றும்; முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான, மத்திய அரசுக்கு இணையாக, தமிழகத் திலே பணியாற்றும் இடை நிலை ஆசிரியர்களுக்கும் ஊதியத்தை உயர்த்தி இந்த ஆண்டாவது அறி விப்பார்கள் என்றும் ; அ.தி.மு.க. அரசு ஏற்கனவே அறிவித்தவாறு 61 மாணவர்களுக்கே 3 ஆசிரியர் கள் நியமிக்கப்படுவர் என்றும் ; மாணவர்களின் இடை நிற்றலைத் தடுக்கும் பொருட்டு 1,268 பள்ளிகளை மூடும் திட்டம் கைவிடப்படும் என்றும், அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு தனியார் நடத்தும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு இணையாக உயர்த்தப்படும் என்றும்; இவை அனைத்தையும் நிறைவு செய்திடும் வண்ணம் தேவையான அறிவிப்புகள் எல்லாம் அணி அணியாக வரப் போகிறதென்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதில் எந்த அறிவிப்பும் வரவில்லை.

பள்ளிக் கல்வி அமைச்சர், இடை நிலை ஆசிரியர்கள் அல்லாத 3,459 புது ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்று கூறியிருப்பது பெரும் ஏமாற்றத்தைத்தான் தந்துள்ளது. அ.தி.மு.க. அரசு அமைந்து மூன்றாண்டுகள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரையில் இந்தப் பள்ளிக் கல்வித்துறை ஆறு அமைச்சர்களைக் கண்டிருக்கிறது என்ற ஒன்றே இந்தத் துறையின் அவல நிலையைப் படம் பிடித்துக் காட்டும். 

பள்ளிக் கல்வித் துறையின் அமைச்சராக முதலில் பொறுப்பேற்ற சி.வி. சண்முகம், அவர் அமைச்சராக இருந்த குறுகிய காலத்தில் 55 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்படுவார்கள் என்று மிகப் பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தினார். சி.வி. சண்முகத்தைத் தொடர்ந்து இந்தத் துறையில் அமைச்சராகப் பொறுப்பேற்ற அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஒரு வார காலமே அந்தத் துறையின் அமைச்சராக இருந்தார். அவர் 55 ஆயிரம் ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுவிட்டார்கள் என்று, திடீரென்று ஒரு போடு போட்டார்; அ.தி.மு.க. ஆட்சியில் புதிய தாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் எண்ணிக்கை பற்றி, அவரிடம் விளக்கம் கேட்பதற்கு முன்பாகவே, அவரிடமிருந்து அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டு, அமைச்சரவையிலிருந்து கழற்றி விடப்பட்டார். அவரைத் தொடர்ந்து என்.ஆர். சிவபதி பள்ளிக் கல்வித் துறை அமைச்சரானார். அவரோ முன்னர் செய்யப்பட்ட அறிவிப்புகளை ஆராய்ந்து பார்க்காமல், 26 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்கப் போகிறோம் என்றார். சில நாட்களுக்குப் பிறகு விழிப்புணர்வு பெற்றவரைப் போல, அவரே 14 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். 

சிவபதியைத் தொடர்ந்து நான்காவது பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக வைகைச் செல்வனும், ஐந்தாவது அமைச்சராக என்.எஸ். பழனியப்பனும் பொறுப்பிலே இருந்த போது “நமக்கேன் வம்பு” என்று ஆசிரியர் நியமனம் பற்றியே எதுவும் கூற வில்லை. ஆனால் அப்போது ஊரகத் தொழில் துறை அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமி, அ.தி.மு.க. அரசு 64 ஆயிரம் ஆசிரியர் மற்றும் அமைச்சுப் பணியாளர்களை நியமித்துள்ளது என்றார். இன்று அவர் இருக்குமிடம் தெரியவில்லை. 

இன்றைய பள்ளிக் கல்வி அமைச்சர் 12-7-2014 அன்று ஒரு விழாவில் பேசும் போது, கடந்த மூன்றாண்டுகளில் 51 ஆயிரம் ஆசிரியர்கள் புதிதாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் 18 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்தார். ஆம் ;10ஆம் தேதி பேரவை தொடங்கிய பிறகு அமைச்சர் செய்த அறிவிப்பு இது!

ஆனால் இதே அமைச்சர் கல்வி மானியக் கோரிக்கையின் விவாதத்தின் போது 3,459 ஆசிரியர்கள் மற்றும் 415 ஆசிரியர் அல்லாத அலுவலர்கள் நியமிக்கப்படுவர் என்று தெரிவித்திருக்கிறார். எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ அ.தி.மு.க. அமைச்சர்களால்!

உண்மையில் எத்தனை ஆசிரியர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று ஆசிரியர் சங்கத்தாரைக் கேட்டால் மிகக் குறைவாகக் கூறுகிறார்கள். கல்வி மானியத்திற்குப் பதிலளித்த அமைச்சர், இடைநிலை ஆசிரியர் நியமனம் தொடர்பாக எதுவும் கூறாததால் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைக்குமென்று நம்பிக்கையோடு காத்திருக்கும் இடைநிலை ஆசிரியர்கள் பெரும் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். 

இவ்வாறு கலைஞர் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.




6 Comments:

  1. எப்படித்தான் ஆசிரியர்கள் நியமனம் குறித்த எண்ணிக்கையை ஏற்றியும் இறக்கியும் கூறிட முடிகிறதோ? கலைஞர்

    ReplyDelete
  2. VK sir pgku revaluation iruka? List eppa sir varum?

    ReplyDelete
  3. இடைநிலை ஆசிரியர்கள் வெயிட்டேஜ் மதிப்பெண் வெளியிடுங்கள் ? எப்போது?

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. FLASH SAD NEWS : NO CHANCE FOR SELECTION LIST ON 30 the JULY !!!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive