Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசு பள்ளிகளை தத்தெடுக்க முன்வருவார்களா?

          தொழில் நகரமான திருப்பூரில், அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; அதற்கு, தொழில் அமைப்புகள் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

          பனியன் ஏற்றுமதியில், ஆண்டுக்கு 18 ஆயிரம் கோடி, அன்னிய செலாவணி ஈட்டித்தரும் தொழில் நகரமாக திருப்பூர் உள்ளது. கடந்த 15 ஆண்டுகளில், பனியன் தொழில் அபரிமிதமான வளர்ச்சிப்பாதையில் சென்ற நிலையில் சாயக்கழிவு நீர், டாலர் மதிப்பு சரிவு போன்ற பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தது. எனினும், பிரச்னைகளில் இருந்து மீண்டு(ம்) எழுந்து, தற்போது வெற்றிப்பாதையில் பயணிக்கிறது.பனியன் வர்த்தகத்தில், உலகளவில் திருப்பூர் முக்கிய நகரமாக சிறக்க, தொழிலதிபர்களின் தீவிர முயற்சியும், திட்டமிடலும், தொழிலாளர்களின் அயராத உழைப்பும் அடித்தளமாக அமைந்தது. அதேநேரத்தில், நகர வளர்ச்சிக்காக, தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் அமைப்புகள் சார்பில், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

        நொய்யல் கரையை சுத்தப்படுத்துதல், வளம் ரோடு, ஆண்டிபாளையம் குளம் தூர்வாரும் பணி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவிலை புதுப்பித்து கும்பாபிஷேகம், கண்காணிப்பு கேமரா பொருத்துதல், நலத்திட்ட உதவி வழங்குதல் என சமூக பணி தொடர்கிறது. தொழில் அமைப்பினரை நிர்வாகிகளாக கொண்டிருக்கும் ரோட்டரி, லயன்ஸ் கிளப் மூலமாகவும், கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகளும் கட்டித்தரப்படுகின்றன.இதேபோல், திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளை, தத்தெடுக்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தனியார் பள்ளிகளைபோல், அரசு பள்ளிகளில் கல்வி தரத்தை உயர்த்த அரசு தரப்பில் திட்டங்களை செயல்படுத்தினாலும், அதற்கேற்ற கட்டமைப்பு வசதி, பெரும்பாலான பள்ளிகளில் இல்லை. எஸ்.எஸ்.ஏ., திட்டத்தில், வகுப்பறை, கழிப்பிட வசதி செய்தாலும், ஆண்டுதோறும் அதிகரிக்கும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, கூடுதல் வகுப்பறை அவசியமாகிறது. மேலும், சமையல் கூடம், கலையரங்கம், சுற்றுச்சுவர், குடிநீர் தொட்டி, பெஞ்ச், நாற்காலி, மேஜை, மின்விளக்கு மற்றும் மின்விசிறி, விளையாட்டு உபகரணங்கள், கம்ப்யூட்டர் வசதி, ஆய்வக உபகரணங்கள் உள்ளிட்ட பலவிதமான தேவைகள், அரசு பள்ளிகளில் போதுமானதாக இல்லை.

இன்றைய காலகட்டத்தில், கம்ப்யூட்டர் சார்ந்த அறிவு அவசியமாக மாறி விட்டதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி அளிப்பது மிக முக்கியமாகிறது; பல பள்ளிகளில், கம்ப்யூட்டர் லேப் மற்றும் கம்ப்யூட்டர் வசதி போதிய அளவில் இல்லை. மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, உடற்கல்வி ஆசிரியர்களும் இருப்பதில்லை; விளையாட்டில் ஆர்வம் இருந்தும், சரியான பயிற்சியின்றி பாதிப்படைகின்றனர். முறையாக விளையாட்டு பயிற்சி அளிக்கும் பட்சத்தில், விளையாட்டு கோட்டாவில், பணி வாய்ப்பு பெற முடியும்.
திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் பெரும்பாலானோர் பனியன் தொழிலாளர் குழந்தைகள். தொழில் அமைப்புகள், அப்பள்ளிகளை தத்தெடுத்தும் பட்சத்தில், பள்ளிக்கு செய்யும் நலத்திட்ட உதவிகள் மூலம், மறைமுகமாக தங்கள் நிறுவன தொழிலாளியின் குடும்பத்துக்கு உதவும் சூழலும் உருவாகும்.

திருப்பூர் கே.எஸ்.சி., அரசு பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவம் கூறுகையில், ""தொழில் அமைப்புகள், அரசு பள்ளி களை தத்தெடுத்தால் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்களுக்கு சமுதாயத்துடன் நல்ல ஒருங்கிணைப்பு ஏற்படும். தொழில் அமைப்பு ஆதரவு, பள்ளி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்,'' என்றார். பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், தொழில் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி, அரசு பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; தொழில் அமைப்புகள், தங்கள் பகுதியில் உள்ள ஏதேனும் ஒரு பள்ளியை தத்தெடுத்து, அதன் வளர்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும்.

முயற்சிக்கலாமே!
திருப்பூரில் உள்ள அரசு பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் பலரும், தற்போது, தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகள், டாக்டர், வக்கீல்களாக திருப்பூரிலேயே வசிக்கின்றனர். முன்னாள் மாணவர் சங்கங்களிலும், பங்கு வகிக்கின்றனர். முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, முக்கிய தொழில் அமைப்புகளை அணுகி, பள்ளிகளை தத்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive