சென்னை
ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், ‘தேசிய
கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள
பாடப்புத்தகங்களை மட்டுமே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் வாங்கி மாணவர்களுக்கு
வழங்கவேண்டும். ஆனால் இதை பின்பற்றாமல் சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தனியார்
நிறுவனங்களிடம் இருந்து புத்தகங்களை பெற்று மாணவர்களுக்கு வினியோகம்
செய்கின்றன. இதனால் மாணவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக
பாதிக்கப்படுகின்றனர்’ என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் செயல்பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
‘தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ள பாடப்புத்தகங்களை மட்டுமே தனியார் பள்ளிகள் வாங்க வேண்டும். குழந்தைகள் பாடங்களை புரிந்து, விருப்பத்துடன் மட்டுமே படிக்கவேண்டும். விதிகளின்படி 1 மற்றும் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மொழி மற்றும் கணித பாடங்களையும், 3 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மொழி, கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் பாடங்களை மட்டுமே கற்றுத்தர வேண்டும். சி.பி.எஸ்.இ. மட்டுமின்றி மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் 1 மற்றும் 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது’ என்று நீதிபதி அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.
இந்த நிலையில் நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவை விரைவில் நடைமுறைக்கு கொண்டுவருவோம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். கொல்கத்தாவில் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது: -
சென்னை ஐகோர்ட்டு உத்தரவை வரவேற்கிறேன். அந்த உத்தரவை படித்து வருகிறோம். அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதை கண்டிப்பாக அமல்படுத்துவோம். 1, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுக்கக்கூடாது என்பதற்கு விரைவில் நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வரப்படும். குழந்தைகள் கல்வியை மகிழ்ச்சியுடன் கற்கவேண்டும். கல்வி என்பது அவர்களுக்கு மன உளைச்சலை தரக்கூடாது. எந்த அளவு குழந்தைகளுக்கு கல்வியில் தேவையில்லாத பளுவை குறைக்கமுடியுமோ, அதை நிச்சயம் குறைப்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...