நீங்கள் நியமிக்கும் லெகஸி கான்டேக்ட்தான் உங்களுடைய மரணத்துக்குப் பிறகு, உங்கள் ஃபேஸ்புக் கணக்கை ஒரு நினைவுப் பக்கமாக நிர்வகிக்கலாமா அல்லது வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும்.
ஒவ்வொருவரும் அவரின் இறப்புக்கு முன்பாக தங்களின் சொத்துகளுக்கு வாரிசுகளை நியமிப்பதுபோல, ஃபேஸ்புக் கணக்குக்கும் வாரிசுகளை நியமிப்பது அவசியம். இதற்கான வசதியை ஃபேஸ்புக் சில ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகப்படுத்தியது. ஆரம்பத்தில் அமெரிக்கவாழ் ஃபேஸ்புக் பயனாளர்களுக்கு மட்டுமே இந்த வசதியை வழங்கிய ஃபேஸ்புக் நிறுவனம், இப்போது அதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் மாற்றியிருக்கிறது.
மெமோரியலைஸ்டு அக்கவுன்ட்!
ஒருவரின் மரணத்துக்குப் பின்னால், அவரின் நினைவாக இருக்க வேண்டும் என்பதற்காக, அவர் பயன்படுத்திய ஃபேஸ்புக் அக்கவுன்ட், அவரின் புகைப்படம், அவர் பதித்த ஸ்டேட்டஸ் அனைத்தும் உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என உறவினர்கள் ஆசைப்படுவார்கள். மரணத்துக்குப் பிறகு ஒருவருடைய அக்கவுன்டை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியுமா என்றால், அதற்கான பதில் `முடியும்' என்பதுதான். நீங்கா நினைவுகளைக்கொண்ட இந்த மாதிரியான அக்கவுன்ட் மெமோரியலைஸ்டு கணக்காகக் கருதப்படுகிறது.
இந்த வகை அக்கவுன்ட், வழக்கமான அக்கவுன்ட் போஸ்டிங்கிலிருந்து வேறுபட்டது. இந்த அக்கவுன்ட்டில் யாரும் லாக்இன் செய்ய முடியாது. புதியதாக எந்த ஒரு நண்பரின் வேண்டுகோளும் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த அக்கவுன்ட்டில், அதை உருவாக்கியவரின் தனிப்பட்ட செட்டிங்ஸ் பாதுகாக்கப்படும். எனவே, இறந்தவரின் அக்கவுன்ட்டுக்கு அவருடைய நண்பர்கள், டைம்லைனில், தகவல்களைப் பதியலாம். குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அதில் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளலாம். பிரைவேட் மெசேஜ் எனப்படும் தனிப்பட்ட தகவல்களையும் பகிர்ந்துகொள்ளலாம். இறந்தவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அப்படியே வைக்கப்படும். நண்பர்கள் அவற்றை எந்த நேரத்திலும் பார்க்கலாம். புகைப்படங்கள், ஸ்டேட்டஸ் அப்டேட் தகவல்கள், லிங்க்ஸ், வீடியோஸ் என நண்பர்களின் பார்வைக்கு அது எப்போதும் கிடைக்கும்.
லெகஸி கான்டேக்ட்!
நீங்கள் நியமிக்கும் லெகஸி கான்டேக்ட்தான் உங்களுடைய மரணத்துக்குப் பிறகு, உங்கள் ஃபேஸ்புக் கணக்கை ஒரு நினைவுப் பக்கமாக நிர்வகிக்கலாமா அல்லது வேண்டாமா என்பதைத் தீர்மானிக்கும். ஃபேஸ்புக்கில் உங்கள் நண்பராய் உள்ள ஒருவரை நீங்கள் இதற்கென நியமிக்கலாம். அது உங்கள் மகன் / மகள் / மனைவியாகக்கூட இருக்கலாம். நீங்கள் லெகஸி கான்டேக்ட்டாக ஒருவரை நியமித்ததும், அவருக்கு ஆட்டோமேட்டிக்காக மெசேஜ் சென்றுவிடும். இருந்தாலும், தனிப்பட்ட முறையில் அதை அவரிடம் தெரிவிப்பது முக்கியம்.
Settings > Security > Legacy Contact ஆப்ஷன் மூலம் லெகஸி கான்டெக்ட்டை நியமிக்கலாம். இவ்வாறு நியமிக்கப்படுபவர், உங்களின் மறைவுக்குப் பிறகு உங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை நிர்வகிப்பார். உங்கள் தொடர்பில் இருக்கும் நண்பர்களுக்கு உங்கள் மறைவு குறித்த தகவலை தெரிவிப்பார். ஒருமுறை லெகஸி கான்டெக்ட்டை நியமித்துவிட்டால் அதை மாற்ற முடியாது என்றில்லை. எவ்வளவு முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். இதற்குமேல் இறந்தவரின் ஃபேஸ்புக் பக்கம் வேண்டாம் என நினைக்கும்போது, அதை நீக்கிவிடவும் இங்கு வழி தரப்பட்டுள்ளது. அதையும் அந்த லெகஸி கான்டேக்டால்தான் நடைமுறைப்படுத்த முடியும்.
`ஒருவர் இறந்துவிட்டார் என்பதை ஃபேஸ்புக் எப்படி அறியும்?' என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். லெகஸி கான்டேக்ட்டாக நியமித்த நபர், அந்த நபரின் மறைவை ஃபேஸ்புக்குக்குத் தெரியப்படுத்த வேண்டும் அல்லது மறைந்துபோனவரின் டைம்லைனில் அவரின் மறைவுக்கு அவரின் நண்பர்கள் வருத்தத்தைத் தெரிவிக்கும்போது, ஆட்டோமேட்டிக்காக ஃபேஸ்புக் அவரின் மறைவைத் தெரிந்துகொள்ளும்.
சமூக வலைத்தளங்களில் நமக்குப் பின்னும் நம் நினைவலைகள் இருக்க, லெகஸி கான்டேக்ட் அவசியம்!