இங்கிலாந்தில் அதிவேகமாக புதிய வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், "மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது. எனவே, மக்கள் அச்சப்படத் தேவையில்லை" என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று அவர் கூறும்போது, "தற்போதைய நிலையில், கற்பனையான தகவல்கள், சூழல்கள் மற்றும் பீதிக்கு இடமில்லை என்றே சொல்வேன். அரசு முழுமையான முன்னெச்சரிக்கையுடன் இருக்கிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். என்னைக் கேட்டால், தற்போதைக்கு எந்த விதத்திலும் பீதியடையத் தேவையில்லை" என்றார்.
முன்னதாக கனடா, சவுதி அரேபியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவும் இங்கிலாந்துக்கான விமானப் போக்குவரத்து சேவையை தற்காலிகமாக நிறுத்தின. இதையடுத்து, இந்தியாவும் விமானப் போக்குவரத்து சேவையை நிறுத்த வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வலியுறுத்தியிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாகவே தற்போது மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில், ஐரோப்பிய நாடுகள் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஏற்கேனவே பரவி வைரஸை விட இதன் தொற்றும் தன்மை 70% அதிகம் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டில் பெரும் அச்சம் எழுந்து கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. டிசம்பர் 30 வரை கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த ஆண்டு யு.கே முழுவதுமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முற்றிலும் முடங்கியுள்ளது.
புதிய வகை கோரோனா வைரஸைப் பொறுத்தவரையில், இது பரவும் வேகம் அதிகம் என்பது அச்சுறுத்தலாகப் பார்க்கப்பட்டாலும், இந்த வகை வைரஸின் தாக்கத்தால் மனித உயிருக்கு அதிக அச்சுறுத்தல் இருக்கிறதா என்பது குறித்து இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று இங்கிலாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதனிடையே, புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அவசர கூட்டத்திற்கு இன்று அழைப்பு விடுத்துள்ளது. இதில், சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சர்வதேச சுகாதார அமைப்பின் இந்திய பிரதிநிதியும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய வகை உருமாற்றம் பெற்ற வைரஸ் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...