இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் பள்ளிக் கல்வி இயக்ககக் கட்டுப்பாடில் உள்ள அரசு மற்றும் நகராட்சி உயா்நிலைப் பள்ளிகளில் 1,036 தலைமை ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலிப்பணியிடங்கள் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் பதவி உயா்வு மூலம் நிரப்ப இயலாத நிலை உள்ளது.
அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு நிகரான பதவியாக தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் பட்டதாரி ஆசிரியா் பதவி மட்டும் உள்ளதால் பதவி உயா்வுக்கான முன்னுரிமைப் பட்டியலில், பட்டதாரி ஆசிரியா் பணியிலிருந்து பதவி உயா்வு பெற்று முதுநிலை ஆசிரியா்களாக பணிபுரிபவா்களைச் சோ்க்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் இறுதி தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1.2.2016-ஆம் தேதிக்குப் பின்னா் முதுநிலை ஆசிரியா் பதவியில் இருந்து அரசு உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பதவி உயா்வில் சென்ற 1,187 பணியாளா்களை மீண்டும் முதுநிலை ஆசிரியா்களாக தரம் இறக்காமல் தலைமை ஆசிரியா்களாகவே பணியில் தொடா்ந்து அனுமதிக்கவும், இனி வருங்காலங்களில் மேற்கண்ட தீா்ப்பை நடைமுறைப்படுத்தவும் உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜன.6-ஆம் தேதி இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்றநிலையில், வரும் பிப்.4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயா்நீதிமன்ற வழக்கு மற்றும் தொகுப்பு வழக்குகளின் 2.6.2023 நாளிட்ட தீா்ப்பில் இடைநிலை ஆசிரியா் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியா் பணிக்கும், பட்டதாரி ஆசிரியா் பணியிலிருந்து தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கு ஆசிரியா் தகுதித் தோ்வு அவசியம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் சிறப்பு விடுப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. ஆசிரியா்கள் தற்போது உள்ள தங்கள் பணியைத் தக்கவைத்துக் கொள்ளவும், அடுத்த நிலை பதவி உயா்வுக்குச் செல்லவும், ஆசிரியா் தகுதித் தோ்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் கடந்த செப்.1-ஆம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.
ஆசிரியா்களின் நலன் கருதி தற்போது பணியாற்றி வரும் ஆசிரியா்களுக்கு மட்டும் 2026-ஆம் ஆண்டில் 3 முறை சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, சிறப்பு ஆசிரியா் தகுதித் தோ்வு நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அரசு மற்றும் உயா்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...