தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜேக் பேரமைப்பின் சார்பில் இன்று 20.01.2026 செவ்வாய் காலை சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு. தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களையும், மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களையும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களுடன் சென்று சந்தித்து நமது கோரிக்கைகள் தொடர்பான விண்ணப்பத்தை அளித்தோம்.
இடைநிலை ஆசிரியர்களுடைய ஊதிய முரண்பாடுகள் தொடர்பாக டிட்டோஜேக் பேரமைப்பின் கோரிக்கையினை விரைந்து நிறைவேற்ற வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமெனக் கேட்டுக்கொண்டோம்.
இடைக்கால ஏற்பாடாக பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு சிறப்புத் தகுதித் தேர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும் எனவும், சிறப்பு தகுதித் தேர்வு அறிவிக்கப்படும் பொழுது ஆசிரியர்களுடைய பணித் தகுதி, உயர் கல்வித் தகுதி ஆகியவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களிடம் தெளிவாக எடுத்துக் கூறினோம். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் இது தொடர்பாக விரிவாகக் கேட்டு அறிந்து நிச்சயமாக பணியில் இருக்கும் ஆசிரியர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.
அனைத்துக் கோரிக்கைகளையும் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியளித்தவாறு விரைந்து நிறைவேற்றுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பரிந்துரை செய்து உதவிட வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொண்டோம். முழுமையாக நமது அறிக்கையினைப் படித்து ஆவண செய்வதாக உறுதியளித்தார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...