Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சம வேலைக்கு இணையான ஊதியம் வழங்கி போராட்ட தீயை அணைக்குமா அரசு? - எழுத்தாளர் மணி கணேசன்

125965 சம வேலைக்கு இணையான ஊதியம் வழங்கி போராட்ட தீயை அணைக்குமா அரசு?

தமிழகத்தில் உள்ள கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக இடைநிலை ஆசிரியர்கள் ஆறாம் மற்றும் ஏழாம் ஊதியக் குழுக்களின் பரிந்துரைகள் மற்றும் அரசின் தவறான கொள்கைகளால் பல்வேறு ஊதிய முரண்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக, ஆறாவது ஊதியக் குழு நடைமுறைப்படுத்தப்பட்ட 2009 ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்குப் போராடிப் பெற்ற ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் என்ற கொள்கை முடிவிலிருந்து அன்றைய மாநில அரசு வழுவி கல்வித் தகுதி மற்றும் பணிநிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் ₹9300 க்குப் பதிலாகக் வெறும் பத்தாம் வகுப்பு தேர்ந்த கடைநிலை ஊழியர் அடிப்படை ஊதியம் ₹5200 என்பதை நிர்ணயம் செய்ததிலிருந்து இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய இடைவெளி அதிகரிக்க தொடங்கி விட்டது 

அதன்பின், நடைமுறைப்படுத்தப்பட்ட ஏழாவது ஊதியக் குழுவிலும் இதன் தாக்கம் காரணமாக மேனிலைக்கல்வி, ஆசிரியர் பட்டயக்கல்வி, தகுதித் தேர்வு ஆகிய எவற்றையும் கருத்திலும் கவனத்திலும் ஆசிரியர் இயக்கங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த ஊதிய முரண்பாட்டுக் கோரிக்கை முழக்க நியாயத்திலும் காணப்படும் உண்மைநிலையைப் புறந்தள்ளி ₹35600 என்று நிர்ணயம் செய்யாமல் ₹20600 என்று மீண்டும் தாம் ஏற்கனவே செய்த அதே தவறை செய்து ஊதிய முரணை மேன்மேலும் அதிகரிக்க செய்து விட்டனர். 

இதற்குத் தீர்வு காண 2009 இல் ₹5200 அடிப்படை ஊதியம் பெற்றவர்களும் 2012 இல் ₹20600 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்களும் 'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற ஒற்றைப் புள்ளியில் ஒன்றிணைந்து ஒருங்கிணைந்து போராடத் துணிந்தனர். 2009, ஜூன் 1-க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 8,370 ஆக இருந்தது. அதன்பின் நியமிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ. 5,200 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இது இவர்களிடையே ஊதியத்தில் பெரும் வேறுபாடு ஏற்படுத்தியதை முன்னிறுத்தி முதலில் மாநில அரசுக்கு இணையான சம வேலைக்குச் சம ஊதியம், பிறகு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் என்பதை மாபெரும் கொள்கை முழக்கமாக, இறுதி இலக்காகக் கொண்டு போராட முனைவதிலிருந்து தடம் புரண்டு மாநில அரசுக்கு இணையான சம வேலைக்குச் சம ஊதியம் என்று தம் நியாயமான கோரிக்கையின் எல்லையைச் சுருக்கிக் கொண்டது துரதிர்ஷ்டவசமானது.

இத்தகையோர் தற்போது காணப்படும் பல்வேறு ஆசிரியர் சங்கங்களுள் ஏதேனும் ஒன்றில் உறுப்பினர்களாகப் பயணத்தைத் தொடங்கினர். எனினும், சம வேலைக்குச் சம ஊதியம் என்ற ஒற்றைக் கோரிக்கையை மட்டும் முன்மொழிந்த ஓர் அமைப்பிடம்சரணாகதி அடைந்து ஏற்கெனவே பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுடன் புதிதாகப் பணியேற்ற இடைநிலை ஆசிரியர்களும் கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு பள்ளித் தேர்வு விடுமுறையின் போதும் மாநில தலைநகர் சென்னையில் அனைவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பல்வேறு சமூக வகையான அறப் போராட்டங்களை நடத்தி வந்தது அறியத்தக்கது.

இதே காலகட்டத்தில், வழமையான ஆசிரியர் இயக்கங்கள் தனியாகவும், கூட்டாகவும் முந்தைய, தற்போதைய, நாளைய இடைநிலை ஆசிரியர்களுக்கு உரிய, உகந்த, நியாயமான, அடிப்படை உரிமையான மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பதை மீளவும் பெற்றிட, இக்கோரிக்கைக்குத் தொடர்பில்லாத பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேனிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு நிலைகளில் உள்ள அரசு ஊழியர்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து இன்று வரை போராடி வருகின்றனர். இவற்றின் விளைவாக, 2023 இல், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய மூவர் குழு அமைக்கப்பட்டது.

ஆனால் அதன் அறிக்கை இன்னும் முழுமையாகச் செயல்படுத்தப்படவில்லை என்பது வேதனைக்குரியது. இதற்கிடையில் அரசு, இவ் ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்றுப் பல்வேறு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதும் எண்ணத்தக்கது. ஆனால் எந்தவொரு நிரந்தரத் தீர்வும் எட்டப்படாமல் கிணற்றில் போடப்பட்ட கல்லாக இறுகிப் போய் காணப்படும் அவல நிலை கவலைக்குரிய ஒன்று.

இந்நிலையில், கடந்த தேர்தலின்போது எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருந்த அன்றைய எதிர்க்கட்சி எப்படியேனும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து விடவேண்டும் என்ற நிலையில் போராட்டக் களத்தில் நேரில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியினை ஆட்சிக்கு வந்த பின் நிறைவேறாதது கண்டு மீண்டும் இவ் இடைநிலை ஆசிரியர்கள், கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.

இதனிடையே சேற்றில் ஒரு கால் வரப்பில் ஒரு கால் என்று எல்லோரையும் உள்ளடக்கிய பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடும் ஆசிரியர் இயக்கத்திலிருந்து நேரடியாகவும் மறைமுகமாகவும் மெல்ல விடுபட்டு தமக்கென்று தம் இந்த ஒற்றைக் கோரிக்கையை மட்டும் வழிமொழியும் சங்கத்துடன் பின்னிப் பிணைந்து மிகத் தீவிரமாக இயங்கத் தொடங்கியது காலத்தின் கோலம் எனலாம். மேலும், இது எங்கள் கோரிக்கை, எங்களுக்கான கோரிக்கை, இதை நாங்களே போராடி நிறைவேற்றிக் கொள்கிறோம் என்று சூளுரைத்து மிக உக்கிரமாக தற்போது போராடி வருவது யாவரும் அறிந்ததே. இனி இழப்பதற்கு ஏதுமில்லை எனும் இந்த நிலையில், அவரவரின் தாய்ச் சங்கங்களின் ஆதரவுக் கரம் நீட்ட வேண்டும் நோக்கும் போக்கும் நல்லதொரு மனமாற்றம் ஆகும். தவிர, 2004 - 2006தொகுப்பூதிய கால ஆசிரியர்கள், ஒன்றிய அரசுக்கு இணையான அடிப்படை ஊதியம் மறுக்கப்பட்டவர்கள் என இடைநிலை ஆசிரியர்கள் இவர்களன்றிக் காணப்படும், இவர்களது சம வேலைக்குச் சம ஊதியம் வரையறைக்கு வெளியே விளிம்பில் உள்ள சிறப்பு நிலை எய்தும் குரலற்ற இடைநிலை ஆசிரியர்கள் எனப் பலவகையில் சிதறுண்டு இருப்பது என்பது ஆசிரியர் சமூகத்தின் சொல்லொணாத் துயரம் ஆகும்.

ஓநாயின் கண்ணீரை ஆடு பொருட்படுத்தினால் என்ன ஆகும் என்று இங்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அரசு கடும் நிதிச் சுமையில் இருக்கிறது. அதனால், 2004 இல் உள்ளவர்களுடன் 2009 மற்றும் 2012 இல் உள்ளவர்களைச் ஊதியத்தில் சமன்படுத்தினால் மட்டும் போதும் என்று கோருவது என்பது அவரவர் தம் நியாயத் தராசில் வைத்துப் பார்த்துக் கொள்ளவும்.

சரி. கடந்த 2025 இல் மற்றும் அதன் பின்னர் வருவோர் இவர்களுள் யாரிடம் ஒப்பிட்டு சம வேலைக்குச் சம ஊதியம் என்று கூக்குரல் போடப் போகின்றார்கள் என்று தெரியவில்லை. இது முடிவற்றது. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பது நேற்றைய, இன்றைய, நாளைய அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் பொதுவானது. பொருந்தக் கூடியதும் கூட. இதில் ஊதிய முரண்பாடு என்கிற பேச்சுக்கே இடமில்லை. அப்படியும் ஏதேனும் ஓர் அசம்பாவிதம் நிகழுமேயானால் மூத்தோர் இளையோர் உரிமையைத் தக்க வகையில் நிலைநாட்டி ஊதிய இழப்பை ஈடுசெய்திட இயலும்.

கடும் பாதிப்புக்கு உள்ளான பாவப்பட்ட இனத்தில் போராட்ட களத்தில் ஒரு கூட்டம்; வகுப்பறைக்குள் பிறிதொரு கூட்டம் என்கிற நிலை ஆசிரியர் இயக்க வரலாற்றில் இதுவரை நிகழாத ஒன்றாகும். ஒரு குறிப்பிட்ட ஒரு சாராருக்கு மட்டுமே பயன்படத்தக்க ஒற்றைக் கோரிக்கையோடு வீதியில் இறங்கிய நிகழ்வு என்பது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியது அவசர அவசியமாகும்.

இதில் பிற மாநில ஊதிய ஒப்பீடுகள் வேறு. மத்திய அரசு ஆளுகைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, பல மாநிலங்கள் இடைநில ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் 9300 தர ஊதியம் 4200 என்பத நியாயமாக வழங்காமல் சுரண்டி அதில் ஒரு பகுதியை மட்டும் வழங்கி வந்துள்ளது தொழிலாளர் நலனுக்கு எதிரான ஒன்றாகும். இதிலும் தமிழ்நாடு மிகக் குறைந்த ஊதியத்தை வழங்கிக் கொண்டிருப்பது தான் கொழுந்து விட்டெரியும் போராட்டத்திற்கு

அடிகோலிட்டுள்ளது என்பது சிந்திக்கத்தக்கது. பன்னெடுங்கால போராட்டத்தின் விளைவாகப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கூட உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டமாக உருவெடுத்துள்ளது. அதே காலகட்டத்தில் எழுந்த இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் இழுத்தடிப்பு ஆகிக் கொண்டே வருவது வருந்தத்தக்கது. மத்திய அரசுக்கு இணையான ஊதியம் எனும் ஒற்றைக் கோரிக்கை முழக்கம் ஒருமித்து எழும்பியிருந்தால் இந்நேரம் விடிவு ஆகியிருக்கக் கூடும். இதை உணர்ந்தே ஜாக்டோ ஜியோ மற்றும்டிட்டோஜாக் ஆகியவை தம் ஐந்து இன்றியமையாத கோரிக்கைகளுள் ஒன்றாக இக்கோரிக்கை இருப்பதை அறியமுடிகிறது.

உலகளவில் காணப்படும் தொழிலாளர் நலனுக்கான அமைப்பின் உயிர்த் துடிப்புள்ள இயக்கம் என்பது ஒரு நீண்ட நெடிய தொடர் ஓட்டம் ஆகும். முந்தையவர் போராடிப் பெற்றுத் தந்ததைப் பிந்தையவர் சிரமேற்கொண்டு போராடித் தக்க வைத்துக் கொண்டு அதற்கடுத்த இளைய தலைமுறையினரிடத்துக் கொண்டு சேர்க்கும் கடமையும் பொறுப்பும் இருப்பதைத் தட்டிக் கழிக்கக் கூடாது.

பணியனுபவத்தைப் புறந்தள்ளி தமக்கு முன் உள்ள எல்லோரையும் முந்திக் கொண்டு போவதே இங்கு தவறு. இதில் அவர்களை மிதித்துக் கொண்டு முன்னேற நினைப்பது என்பது எந்த வகையில் சரி? தகுதித் தேர்வுடன் நியமனத் தேர்வெழுதி வந்த தாங்களே உயர்ந்தவர்கள் என்று எல்லோரையும் தாண்டி முன்னாடி

நிற்கும்போது தான் மூத்தோர் வலி புரியும். எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் என்று நினைப்பது எத்தகைய அறமற்ற செயல்.

இப்போதும் குடி முழுகிப் போகவில்லை. ஆறாவது ஊதியக் குழுவில் இடைநிலை ஆசிரியர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு தற்போதைய அரசே பரிகாரம் தேடும் பொருட்டு மத்திய அரசுக்கு இணையான மாநில அரசின் இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்குச் சம அடிப்படை ஊதியமாக ₹9300 ஐ அன்று முதல் மறு நிர்ணயம் செய்து தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய விகிதமான ₹35600 இல் மாற்றியமைக்க முன்வருவதே சாலச்சிறந்தது. இஃது ஒன்று தான் மாநிலம் முழுவதும் உள்ள ஒட்டுமொத்த இடைநிலையாசிரியர்களின் ஊதிய முரணை ஒரேயடியாக களையும் நியாயமான சிறந்த வழியாகும்.

இந்த முதன்மையான முக்கியமான கோரிக்கையை முன்வைத்து இந்த போராட்டம் அனைத்து பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களையும் உள்ளடக்கிய வடிவமாக உருமாற்றப்பட்டால் வெற்றிக்கனி நிச்சயம் என்பதை உறுதியாகக் கூற முடியும்.

ஏனெனில், இடைநிலை ஆசிரியர்களை உள்ளடக்கிய அனைத்து ஆசிரியர் இயக்கங்களும் தற்போது முன்னெடுக்கும் போராட்டத்தில் மனமுவந்து தாமாகக் குதிக்கும் நிலை உருவாகக் கூடும். இங்கு யாரும் வானத்தில் இருந்து குதித்து வந்து விட முடியாது. எல்லோரும் இரத்தமும் சதையும் நிரம்பிய பூமியிலிருந்து தான் தோன்ற முடியும். தமக்கான அமைப்பின் அதிகார பசிக்கு அப்பாவிகளை இரையாக்க முயலுதல் ஒரு நல்ல தலைமைக்கு அழகல்ல. கடைக்கோடியில் உள்ள உறுப்பினரின் பணிப்பாதுகாப்பை முதலில் உறுதி செய்து கொண்டு அதன் பின் போராட்டக் களம் நோக்கி அடியெடுத்து வைப்பதே ஒரு நல்ல தலைமையின் அடையாளம். வெறும் உணர்ச்சிப் பெருக்கு கடைசியில் விழலுக்கு இறைத்த நீராகவே போய் முடியும்.

இவர்களது மூர்க்கத்தனமான போராட்ட முனைப்பு என்பது ஏற்கனவ இருக்கும் பல்வேறு கோரிக்கைகளை வென்றெடுத்த 60ஆண்டுகளுக்கு மேலாக உள்ள ஆசிரியர் அமைப்புகளை வெல்வதில் தான் அதிக கவனம் குவிக்கப்படுவதைப் பல்வேறு சமூக ஊடகங்களில் காணப்படும் பலவகையான பதிவுகளின்வழி உணர முடிகிறது. தமது ஒப்பற்ற ஒற்றை மாபெரும் கோரிக்கை வெல்ல வேண்டுமானால் அனைத்து ஆசிரியர் சங்கங்களின் பரந்துபட்ட ஆதரவும் அரவணைப்பும் மிகவும் இன்றியமையாதது. அதுவரை இஃது ஒரு கை ஓசையாகவே இருக்கும். ஏனைய சங்கங்களும் இதன் நியாய, அநியாயங்களை எடுத்துரைத்து வேடிக்கைப் பார்க்காமல் உணர்வுப்பூர்வமான முறையில் கரம் நீட்டி உதவிட முன் வருதல் நல்லது.

அரசும் இதுநாள்வரை பாராமுகமாக இருப்பதைத் தொடர இனியும் சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. போராட்டத்தை எப்படியேனும் முறியடிக்கும் விதமாக பேச்சுவார்த்தை நடத்துவதைக் கைவிட்டு ஆக்கப்பூர்வமான வகையில் சிறு நம்பிக்கையையாவது அளிக்கும் விதத்தில் அமைய முன்வர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சினைக்குத் நிரந்தர தீர்வையும் அள்ளித் தெளித்த அவசர வாக்குறுதிக்குத் தக்க நேர்மையையும் அறுவடை செய்யக் காத்திருக்கும் குடும்பம் சகிதமாக போராடும் போராட்டக்காரர்களை வீணாக அலைகழிக்கும் போக்கைத் தவிர்த்து காலத்தில் நல்லதொரு அனைவரும் ஏற்கத்தக்க நியாயமான முடிவை அறிவிக்க முன்வர வேண்டும் என்பது அனைவரின் பணிவான வேண்டுகோளாகும்.

எழுத்தாளர் மணி கணேசன்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive