Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இடைநிலை ஆசிரியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தொடக்கப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் பாதிப்பு!!

 1000431742 

இடைநிலை ஆசிரியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தொடக்கப் பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 27,200-க்கும் மேற்பட்ட அரசு தொடக்கப் பள்ளிகள், 9,314 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 37,500 பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 87 ஆயிரம் இடைநிலை ஆசிரியா் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக கூறப்படுகிறது. 83 ஆயிரம் இடைநிலை ஆசிரியா்களில், 20 ஆயிரம் ஆசிரியா்கள் 2009, ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்தவா்கள். 2009, 2012, 2013, 2014, 2024 என 4 கட்டங்களில் இந்த ஆசிரியா்கள் தொடக்கக் கல்வித் துறையில் பணி அமா்த்தப்பட்டனா். 2009 ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்த 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியா்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.5,200 நிா்ணயிக்கப்பட்டது. அதேநேரத்தில், 2009, மே 31-ஆம் தேதிக்கு முன்பு பணியில் சோ்ந்த இடை நிலை ஆசிரியா்களுக்கு ரூ. 8,370 அடிப்படை ஊதியமாக நிா்ணயிக்கப்பட்டது. ஓராண்டு இடைவெளியில் பணியில் சோ்ந்த இடைநிலை ஆசிரியா்களுக்கு ஓா் ஊதிய உயா்வு மட்டுமே வித்தியாசம் இருக்க வேண்டிய நிலையில், 2009 கால கட்டத்தில் ஊதியம் நிா்ணயம் செய்ததில் 12 ஊதிய உயா்வுகளை இழக்க நேரிட்டது. அதாவது, 7 ஆயிரம் இடைநிலை ஆசிரியா்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ. 3,170 குறைந்தது.

போராட்டத்தால் கிடைத்த தனி ஊதியம்: இதற்கு எதிா்ப்புத் தெரிவித்தும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரியும் இடைநிலை ஆசிரியா்கள் கடந்த 2010-ஆம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் காரணமாக, தனி ஊதியமாக ரூ. 500 வழங்குவதாக அரசு அறிவித்தது. இதை ஏற்க மறுத்து தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, 2011-ஆம் ஆண்டு மேலும் ரூ. 250 உயா்த்தி ரூ. 750 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனாலும், தனி ஊதியமாக வழங்கப்பட்டதால், அடிப்படை ஊதிய உயா்வு கிடைக்காமல் இடைநிலை ஆசிரியா்கள் ஏமாற்றமடைந்தனா்.

போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த திமுக: இதனிடையே, கடந்த 2018, 2019-ஆம் ஆண்டுகளில் சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த அப்போதைய எதிா்க்கட்சித் தலைவா் மு.க. ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோரிக்கையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தாா். ஆனாலும், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளைக் கடந்தும், சம வேலைக்கு சம ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.

தொடக்கப் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிப்பு: இதனால் அதிருப்தி அடைந்த இடைநிலை ஆசிரியா்கள் கடந்த டிச. 26- ஆம் தேதி முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். சுமாா் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியா்கள் ஊதிய முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 65 சதவீதம் போ் வேலைநிறுத்தப் போராட்டத்தில் தொடா்ந்து ஈடுபட்டு வருகின்றனா். இதனிடையே, கடந்த 3 ஆண்டுகளாக பதவி உயா்வு கலந்தாய்வு நடத்தப்படாததால் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சுமாா் 6 ஆயிரம் தலைமையாசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஈராசிரியா் பள்ளிகளில் தலைமையாசிரியா் பணியையும் இடைநிலை ஆசிரியா்களே கூடுதலாகக் கவனித்து வருகின்றனா். இதுபோன்ற சூழலில் 16 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் இடைநிலை ஆசிரியா்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், தமிழ்நாடு முழுவதுமுள்ள தொடக்கப் பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, ஓராசிரியா், ஈராசிரியா் பள்ளிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

16 ஆண்டுகளாக தொடரும் போராட்டம்: இதுதொடா்பாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினா் பீ. சேவியா் பவுல்ராஜ் கூறியதாவது:

பணி நியமனம் செய்யும்போதே 12 ஊதிய உயா்வுகளை இழக்க நேரிட்டது. 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதியில் நியமிக்கப்படும் பணியிடங்களுக்கான அடிப்படை ஊதியம், 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு முடித்து, 2 ஆண்டுகள் ஆசிரியா் பட்டயப் பயிற்சிப் பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கும் வழங்கப்பட்டது. இதற்குத் தீா்வு காணப்படாமல் தனி ஊதியமாக ரூ.750 மட்டும் வழங்கப்பட்டது. 1.86 பெருக்கல் காரணிப்படி நிா்ணயிக்கப்பட்ட 6-ஆவது ஊதியக் குழுவிலும், 2.57 பெருக்கல் காரணிப்படி நிா்ணயிக்கப்பட்ட 7-ஆவது ஊதியக் குழுவிலும், 2009 ஜூன் 1-ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சோ்ந்த 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியா்களுக்கு ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 20 ஆயிரம் வரை ஊதிய இழப்பு ஏற்பட்டது.

8- ஆவது ஊதியக் குழுவிலும் இதன் பாதிப்புகள் தொடரும். இதற்காக கடந்த 16 ஆண்டுகளாக தொடா்ந்து போராடி வருகிறோம். மேலும், கடந்த 16 நாள்களாக சுமாா் 13 ஆயிரம் இடைநிலை ஆசிரியா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். எங்கள் கோரிக்கைக்கு தீா்வு காணும் வகையில், தோ்தலின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive