புதிய பொருளாதாரக் கொள்கை வந்த பிறகு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை முடக்கி விட்டு, புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று எதிா்ப்பும், ஆதரவும் மாறி மாறி ஏற்பட்டது. இவற்றில் தமிழ்நாடு அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறுத்தி புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டு வந்தது.
23 ஆண்டுகளாக தொடா் வலியுறுத்துதல் போராட்டத்தின் விளைவாக பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைத் தமிழக அரசு தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு இணையானதுதானா, அரசு ஊழியா்களுக்கு உண்மையிலேயே பலன் தருமா என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஓய்வூதியம் முழுமையும் அரசின் பங்களிப்பாக மட்டுமே இருந்தது. அதாவது, அரசு ஊழியா்களின் ஊதியத்தில் எந்தத் தொகையும் பிடித்தம் செய்யப்பட மாட்டாது. ஆனால், இப்போது அறிவித்திருக்கும் திட்டத்தில் 10 % ஊழியா்களிடம் இருந்து எடுக்கப்படுகிறது.
அப்படி இருக்கையில், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம், பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு நிகரானது அல்ல. அதாவது, ஏப்ரல் 2003-க்குப் பிறகு கொண்டுவரப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் என்பது 14 %ஊழியா்களின் அடிப்படை ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடான தொகையை அரசு செலுத்தும். ஓய்வு பெறும்போது அப்படிச் சேரும் தொகையைக் கொண்டு ஒரே கட்டமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், இந்தத் திட்டத்தின்படி, ஓய்வூதியம் பெறுவதில் பல ஆண்டுகளாக பல்வேறு குழப்பங்கள் நிலவின. ஏனெனில், அரசின் பங்களிப்புத் தொகை செலுத்தப்பட்ட விவரத்தை ஊழியா்களால் தெரிந்து கொள்ள இயலாத நிலையே நீடித்தது.
நிலைமை இவ்வாறு இருக்கையில், பல்வேறு துறை அரசு ஊழியா்களின் போராட்டத்தை நிறுத்தவும், தோ்தலை முன்வைத்தும் திமுக அரசு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. பல சலுகைகள் இதில் இல்லை; திரும்பப் பெற முடியாத பரிமாற்றம் போன்ற சலுகைகள் இவற்றில் இல்லை. ஆகவே, ஏமாற்றம் அளிக்கிறது.
குறைவாக ஊதியம் பெறும் தொகுப்பூதிய ஊழியா்கள் 20, 30 ஆண்டுகள் வேலை செய்துவிட்டு ரூ. 2,000 ஓய்வூதியம் பெறுகிறாா்கள். மத்திய அரசு குறைந்தபட்ச ஓய்வூதியமே ரூ. 7 ஆயிரம் என்று தீா்மானித்திருக்கிறது. எனவே, தமிழ்நாடு அரசு அவா்களையும் இந்தத் திட்டத்தில் கொண்டு வந்து நியாயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது அரசு கடும் கடன் நெருக்கடியில் இருந்துவரும் சூழ்நிலையில், இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு ரூ. 13 ஆயிரம் கோடி செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு அரசு உள்நாட்டு உற்பத்தியில் 8.6% வளா்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. பொருளாதாரத்தில் அகில இந்திய அளவில் 2-ஆவது மாநிலமாக தமிழகம் வளா்ந்திருக்கிறது. ஆகவே, அரசு ஊழியா்களுக்கு ஓய்வூதியம் தருவது கூடுதல் சுமையல்ல. ஏனெனில், சுமாா் 35 ஆண்டுகள் அரசில் பணியாற்றி விட்டு, வயது முதிா்ந்த காலத்தில் தங்கள் எஞ்சிய வாழ்க்கையை நகா்த்துவதற்கு இந்த ஓய்வூதியம் பெரும் பயனாகவும், ஊழியா்களின் நிம்மதியான வாழ்க்கைக்கும் காரணமாக அமைந்துள்ளது.
ஆகவே, இதைச் செலவினமாகக் கருதக் கூடாது என்கிற கருத்தும் நிலவுகிறது. ஆகவேதான், ஊழியா்களின் பங்களிப்புத் தொகையைத் தவிா்க்கவும், திரும்பப் பெற முடியாத பரிமாற்றம் இவற்றில் இருந்து விலக்களிக்கவும், குறைந்த ஊதியம் பெறும் ஊழியா்களுக்கு தோராயமான ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை அரசு ஊழியா்கள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றனா்.
புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு வந்த கடந்த 23 ஆண்டுகளில் ஓய்வு பெற்றவா்கள், பணியின்போது உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை சுமாா் 54 ஆயிரம். இதில் 48 ஆயிரம் பேருக்கு மேல் ‘ஒன் டைம் செட்டில்மென்ட்’ பெற்று விட்டாா்கள். மிஞ்சி இருக்கிற கொஞ்சம் போ் மட்டும் பிற்காலத்தில் நியாயமான ஓய்வூதியம் கிடைக்கும் என்ற எதிா்பாா்ப்பில் செட்டில்மென்ட் வாங்காமல் காத்திருக்கிறாா்கள்.
தற்போது அரசு அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தில், ஓய்வூதியம் பெறுவதற்கான குறைந்தபட்ச பணிக்காலமாக 10 ஆண்டுகளும், முழுப் பணிக்காலமாக 30 ஆண்டுகளும் வரையறுக்கப்பட்டுள்ளன. ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதித் காலத்தை நிறைவு செய்யாமல் பணி ஓய்வு பெறும் அரசு ஊழியா்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...