கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 ல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் தயாராக இருப்பதாகவும், மாணவர் சேர்க்கை இந்தாண்டு அதிகரித்துள்ளதாகவும் கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இத் திட்டங்களை வழங்கி முறைப்படுத்த வேண்டிய முக்கிய பொறுப்பு தலைமையாசிரியருக்கு உள்ளது. இப்பணியிடங்கள் மேல்நிலையில் 300, உயர்நிலையில் 700, தொடக்க, நடுநிலையில் 800 என மொத்தம் 1800 காலியாக கிடப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
நீதிமன்ற வழக்கு காரணமா தொடக்க, உயர்நிலையில் பல ஆண்டுகளாக நிரப்பப்படாத நிலைக்கு காரணம் கேட்டால் 'நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது' என அதிகாரிகள் சாதுர்யமாக தெரிவித்து, அ.தி.மு.க., தி.மு.க., ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் காலத்தை கடத்தினர். தற்போது விஜய் தலைமையில் த.வெ.க., ஆட்சி அமைந்த பின்னரும் அதே நிலை நீடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.பதவி உயர்வு, பணப் பலன் போன்ற காரணங்களுக்காக பாதிக்கப்பட்டோர் நீதிமன்ற வழக்கு தொடர்ந்தால் அவர்களை பழிவாங்கும் போக்கு கல்வித்துறையில் அதிகம் உள்ளது. இதனால் தான் நீதிமன்றம் உத்தரவிட்டும் நிறைவேற்றாமல் அவமதிப்பு வழக்குகளை இத்துறை அதிகம் சந்தித்து வருகிறது.அரசு, உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 'டெட்' தேர்ச்சி கட்டாயம் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளன. முதுகலை ஆசிரியர்களுக்கு உயர்நிலை தலைமையாசிரியர் பதவி உயர்வு வழங்க கூடாது என்பது தொடர்பான வழக்கால் உயர், மேல்நிலைகளில் தலைமையாசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப முடியவில்லை.இப்பிரச்னை பல ஆண்டுகளாக நீடிக்கிறது.
இந்நிலையில் நேற்று ( மே 31) 30 தலைமையாசிரியர், 14 டி.இ.ஓ.,க்கள், 3 சி.இ.ஓ.,க்களும் ஓய்வு பெற்றுள்ளதால் காலியிடங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இது கல்வித்துறையின் கற்றல், கற்பித்தல் பணியை முடக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.தலைமையாசிரியர்கள் கூறியதாவது:தலைமையாசிரியர் காலிப்பணியிடங்களில் பெரும்பாலும் சீனியர் ஆசிரியர் கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். அவரது கற்பித்தல் பணியும் பாதிக்கிறது.
தலைமையாசிரியர் இல்லாத பள்ளிகளில் கற்பித்தல் பணி கண்காணிப்பு, ஆசிரியர் சம்பளம் அனுமதி உள்ளிட்ட நிர்வாகம் சார் பணிகள் முடங்கி வருகின்றன. புதிய முதல்வர் விஜய், பதவி உயர்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் அல்லது அரசு கொள்கை முடிவு எடுத்து பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும். இந்த நடவடிக்கையை ஜூன் முதல்வாரத்தில் மேற்கொண்டு இம்மாதத்திலேயே பதவி உயர்வு மூலம் காலியிடங்களை நிரப்ப வேண்டும் என்றனர்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...