.jpg)
காலை உணவு மற்றும் மதிய உணவுத் திட்டத்தினை கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க வேண்டும். இப்பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்
தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டு காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. படிப்படியாக இத்திட்டம் வளர்ச்சி பெற்று தற்போது 1 முதல் 8 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்குமான திட்டமாக உயர்ந்துள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் உள்ள திட்டங்கள் அனைத்தும் முழுமையாக குழந்தைகளை சென்றடைய ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த ஈடுபாடும் ஒத்துழைப்பும் உதவியாக இருந்து வருகிறது. காலை உணவுத் திட்டத்தை கண்காணிக்க ஆசிரியர்கள் நோடல் அலுவலர்களாக நியமனம் செய்யப்பட வேண்டுமென்று மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களால் சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், நோடல் அலுவலர்கள் என்று பொறுப்பு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு பள்ளிகளின் பணிச்சுமை அதிகரிக்கப்படுகிறது.
கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் காலை 7 மணிக்கு பள்ளிக்கூடம் வந்து பாத்திரங்கள் கழுவுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் கண்காணிக்க வேண்டுமென்பது எப்படி சரியானதாக இருக்கும்? அதிகாலையில் பள்ளிக்கு வரும் ஆசிரியர்களின் குடும்பங்களை யார் கவனிப்பது? பள்ளிகளில் காலை 9.30 மணிக்கு பள்ளி நேரம் என்றாலும், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள் 9:00 மணிக்கே வந்து தங்கள் பணிகளை தொடங்கி செய்து வருகின்றனர்.
தற்போதைய அறிவிப்பால் காலை 7 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டிய நிலை உருவாகிறது. காலை 7 மணியிலிருந்து மாலை 4.30 மணி வரை தினந்தோறும் 9.30 மணி நேரம் பணியாற்றும் சூழல் ஏற்படுகிறது. தொழிலாளர்களுக்கு கூட 8 மணி நேர வேலை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஆசிரியர்களை கூடுதல் நேரம் பணியில் ஈடுபடுத்திடலாமா?
ஏற்கனவே 2000ஆம் ஆண்டில் மதிய உணவுத் திட்டம் ஆசிரியரிடத்தில் ஒப்படைக்கும் முயற்சிகள் நடைபெற்றது. தார்மீக அடிப்படையில் ஈடுபாடு காட்டும் ஆசிரியர்களை பொறுப்புக்கு உரியவர்களாக மாற்றி, தண்டனைக்கு உள்ளாக்கும் நிலையை எதிர்த்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை நடத்தின. முழு வேகத்துடன் நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக ஆசிரியர்கள் மதிய உணவுத் திட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.
ஒரு திட்டத்தை அறிவிக்கின்ற போது அதற்கான பணியாளர்களையும் நியமனம் செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அந்த வகையில் சிறப்பு மிகுந்த திட்டமான காலை உணவுத் திட்டத்தை கண்காணிக்கும் வகையில் தனியே பணியாளர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். இந்த கண்காணிப்பு பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் தொடர்பாக நடைபெறும் அனைத்து பணிகளிலும் ஆசிரியர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஆசிரியர்களை கூடுதல் பொறுப்புக்கு உட்படுத்தும் புதிய அறிவிப்பை கைவிட வேண்டும்.
அன்புடன்...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மாநில அமைப்பு: ஜே.எஸ்.ஆர். மாளிகை, 78. பெல்சு சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. TAMILNADU ELEMENTARY SCHOOL TEACHER'S FEDERATION








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...