Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வீடே பள்ளி, பெற்றோரே ஆசிரியர்

        ஒரு நாட்டின் வளமும் வளர்ச்சியும் செழிப்பும் சீர்மையும் அந்த நாட்டிலுள்ள இயற்கை வளங்கள், பொருளாதார வளர்ச்சி, தொழில் துறையில் முன்னேற்றம்,கல்வியாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றினால் மட்டும் அமைவதன்று.
 
         ஒவ்வொரு வீட்டினரின் பங்களிப்பும் அதில் அடங்கியிருக்கிறது. ஒரு நாடு என்பது பல சமுதாயங்களின் கூட்டமைப்பு ஆகும். சமுதாயம் என்பது பல வீடுகளில் வாழும் மக்களின் தொடரமைப்பு ஆகும்.சமுதாயத்தின் அடிப்படை அமைப்பாக குடும்பம் விளங்குகிறது. குழந்தைகளுக்கு முதல் பள்ளிக்கூடம் வீடுதான்.
 
          பெற்றோர்தான் குழந்தைகளின் முதல் ஆசிரியர்கள். ஒரு வீடானது, மக்களை நல்லவர்களாக அடையாளப்படுத்தும் பண்புகளான அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்து தூண்களைத் தாங்கியதாகவும், தூய்மை, நல்லறிவு, இரக்கம், பொறுமை ஆகிய நான்கு சுவர்களைக் கொண்டதாகவும், அமைதியை கூரையாகவும், சிரத்தையை தளமாகவும், இறை வழிபாட்டினை வாயிலாகவும், அருள் அதனுள் வீசும் காற்றாகவும், ஆனந்தம் அங்கு நிகழும் இசையாகவும் கொண்டு அமைய வேண்டும். அப்போதுதான் அந்த வீட்டிலுள்ளவர்கள் அன்பு, பொறுமை, தியாகம், அருள், சகிப்புத் தன்மை, அறம் சார்ந்த பண்புகள் ஆகியவை உடையவர்களாகஇருப்பார்கள். நாம் வசிக்கும் வீடே அறிவு வளர்ச்சிக்கும் ஒழுக்கலாற்றுக்கும் களனாக அமைகிறது. ஒழுக்க இயல்புகள் வீட்டின் வழிதான் அமையும்."குலஞ்சிறக்கும் ஒழுக்கம் குடிகட்கெல்லாம்' என்கிறார் கம்பர். உயர்ந்த எண்ணங்களை உருவாக்கும் உலைகளனாக ஒருவனுக்கு அவன் வீடு அமைகிறது.
 
           வீட்டில் உள்ள முதியோரும், பெற்றோரும், உற்றார் உறவினர்களும் எந்நிலையில் இருக்கிறார்களோ, அந்நிலையில்தான் அங்கு வளரும் குழந்தைகளும் இருப்பார்கள். அந்த வீட்டில் அன்பு வாசம் வீசினால், அவர்களின் பண்பு நலன்கள் வெளியிலும் அவ்வாறே மணம் வீசும். ஒருவன் வீட்டிலிருந்து என்ன மனநிலையில் கிளம்புகிறானோ அந்தமனநிலையில்தான் வெளியில் அவன் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கும். எனவே, ஒருவனின் நன்மையும், தீமையும் அவனுடைய வீட்டில் உள்ளவர்களின் செயல்பாடுகளில் தான் அமைந்துள்ளது. அதாவது, ஒருவனுக்கு இரு கண்களாக இருக்கும் கல்வி, ஒழுக்கம் ஆகிய இரண்டையுமே அவனுக்கு கற்றுத் தருவது அவன் வசிக்கும் வீடே. ஒழுக்கம் என்பது ஒருவன் தன் உயர்வை விரும்பி தனக்கு என சில விதிமுறைகளை வகுத்துக் கொண்டு அவற்றை உறுதியாகக் கடைப்பிடிப்பதாகும். நமக்கு தீமை செய்வாரும் நாமே, நமக்கு நன்மை செய்வாரும் நாமே என்பதை உணர்ந்து வீட்டிலுள்ளவர்கள் செயல்பட்டால், சமுதாயமும் நாடும் நேரிய வழியில் செல்லும்.  
 
           கூடையிலுள்ள ஒரு அழுகிய பழம் அடுத்தடுத்த பழங்களை அழுக வைத்திடும்.ஒரு தொற்று நோய் ஓரிருவருக்குவரினும் அது ஊரையே பலியாக்கி விடும். அதுபோல, ஒரு வீட்டில் துன்பமும் வன்முறை எண்ணமும் காழ்ப்புணர்ச்சியும் துளிர் விட்டால், அது அந்த வீட்டிலுள்ளவர்களை அழிப்பதோடு, சமுதாயத்திற்குள் புரையோடிய புண்ணாகி பின்னர் நம் உயிராகிய நாட்டையே அழிக்க முற்படுகிறது. ஒரு நல்லவனின் உள்ளம் சார்ந்தது சாராதது எதையும் கெடுக்காது. எனவே, வீட்டிலுள்ளவர்கள் நல்லறிவோடு நல்லுணர்வோடு தாங்கள் கெடாத தன்மையோடு பிறர் கெடாமல் இருக்கத் தக்க சூழலையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் ஒருவர் விட்டுக் கொடுத்தால் மற்றவர்கள் கெட்டுப் போவதில்லை. இல்லையெனில் வீட்டில் யார் பெரியவர்,யார் சம்பாதிக்கிறவர், யார் அறிவாளி, யார் அறிவிலி, படிக்காதவன், படித்தவன் ஆகிய தன்னுணர்ச்சி, தற்பெருமை, அகங்காரம், தன்நலம் ஆகிய களைகள் முளைத்து வீட்டையே அழித்து சமுதாயத்திற்குள் அவப்யெரையும் உண்டாக்கி நாட்டையே இன்னல்களுக்கு உள்ளாக்கும். அரசு குடிமக்களைக் காக்கும் கடன் கொண்டதாயினும், வீடே பெற்றமக்களை வழி நடத்தும் பொறுப்பு வாய்ந்தது.
 
          எனவே, நாம் வாழும்வீடு ஒரு கோயிலாக இருக்க வேண்டும். நம் பெற்றோர் நமக்கு தெய்வங்கள் என்றால், நமது உற்றார் உறவினர்கள் நமக்கு காவல் தெய்வங்கள். நாம் செய்யும் நல்வினை, தீவினைகளைப் பொறுத்தே நம் வாழ்வும் அமையும். ஒருவன் வீட்டின் சூழ்நிலையைப் பொறுத்தே அவன் வாழ்வில் சொர்கமும் நரகமும் தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான் பாரதியாரும், "வீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில்
எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடுதலைப்பட்டு வாழ தகுந்த இடத்திற்கு வீடு என்ற பெயர் கொடுத்தனர் போலும். விடத்தக்கது வீடு என்ற பிற்கால உரை ஒப்பதக்கதன்று. வீடு துயரிடம் ஆவதற்கு காரணம் விடுதலையும் அன்பும் இல்லாமையே' என்கிறார்.
 
        ஒரு நாள் ஈசாப் ஏதென்ஸ் நகருக்கு சென்றிருந்தார். அப்போது ஒருவன் அவரிடம் வந்து "ஏதென்ஸ் நகர மக்கள் நல்லவர்களா கெட்டவர்களா' எனக் கேட்டான். உடனே ஈசாப், "உன் வீட்டில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்' என்று கேட்டார். அதற்கு அவன் "ஐயோ என் வீடு ஒரு சண்டைக்காடு யாரிடமும் ஒற்றுமை இல்லை' என்றான். ஈசாப் "அப்படியானால் ஏதென்ஸ் நகரமும் அப்படித்தான் இருக்கும்' என்றார். இன்னொருவன் வந்து அதே கேள்வியை அவரிடம் கேட்டான். அவனிடமும் ஈசாப் "உன் வீட்டில் உள்ளவர்கள் எப்படிப்பட்டவர்கள்' என்று கேட்டார். அதற்கு அவன் "என் வீடு ஒரு அமைதிப் பூங்கா, அங்கு எப்போதும் அன்பு மணம் வீசும்,ஒருவரையொருவர் பழிப்பதில்லை' என்றான். அப்போது ஈசாப் "அப்படியானல் ஏதென்ஸ் நகரமும் அப்படித்தான் இருக்கும்' என்றார்.

            வீட்டிலுள்ளவர்கள் நல்லறிவும் நல்லன்பும் நல்லெண்ணமும் நற்செய்கையும் உடையவராக இருந்தால் நாடும் அவ்வாறே இருக்கும். எனவே, உண்மையான மகிழ்ச்சி என்பது அவரவர் வீட்டில்தான் இருக்கிறது. வெளியில் எங்கும் தேடிப் போக வேண்டியதில்லை. உள்ளம் அமைதி பெறவே உறையுள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive