Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

இன்று உலக இருதய தினம்!

        தேவையற்ற பழக்கங்களை தவிர்ப்பதே இருதயத்திற்கு பலம். புகை பழக்கத்தை நிறுத்துவோம்... இருதயத்தை காப்போம். இந்தியாவில் நாளுக்கு நாள் இருதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் அதிகரித்துள்ளனர்.

புகை பழக்கம்: புகை பிடிப்பதன் தீமைகள் குறித்தும், அதை விலக்குவதற்காக எடுக்க வேண்டிய முறைகள் குறித்தும் சர்வதேச அளவில் கட்டுரைகளும், நுால்களும் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. 


புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் இருப்பதில்லை என்பதும், புகை பிடித்துப் பார்த்தவர்கள் அனைவரும் புகைக்கு அடிமையாவதில்லை; முதன் முதலாக புகை பிடிக்கும் போது புகை நமது மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்களே நாம் புகைக்கு அடிமை ஆவோமா, இல்லையா என்பதை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதே சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி முடிவு.

சிறுவயதில் திருட்டுத்தனமாக புகை இழுத்துப் பார்க்கும் போது யார் மிகவும் ஓய்வாகவும், இன்பமாகவும் உணர்கிறார்களோ அவர்களே புகைக்கு அடிமையாவதாக ஆராய்ச்சி சொல்கிறது. தினமும் விரல்களிடையே புகைந்து கருகும் சிகரெட்டுகள் எண்ணிகைக்கும், இருதய நோய் வரும் வாய்ப்பிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒரு நாளைக்கு 20 சிகெரட் இழுத்து தள்ளுபவர்களில் 61 சதவீதம் பேர், இருதய நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆராய்ச்சி தெரிவிக்கிறது.

பதட்டப்படாதீர்கள்: குறித்த நேரத்தில் வேலைக்கு கிளம்ப, உணவு அருந்த, விளையாட, பொழுது போக்கில் ஈடுபட, குடும்பத்துடன் கலந்து பழக நேரத்தை திட்டமிடுங்கள். பஸ், ரயில், விமானப் பயணம் புறப்படுகிறீர்களா அதற்கு முன்பே குறித்த இடத்தில் சேர்ந்து விடுங்கள். 
உணவு சாப்பிடும் போது ஊர்க்கவலைகள், அலுவலகம், குடும்ப விஷயங்களை பேசி குழப்பி கொள்ளாதீர்கள். நண்பர்களுடன் கலகலவென சிரித்து, பேசி பழகுங்கள்.

எதிலும் நிதானம் தேவை:
உங்களைத் திடுக்கிடச் செய்ய பேசுவோரிடம் அப்படியா, பரவாயில்லை என, உறுதியாக பேசுங்கள். இரவில் படுக்கப் போகும் முன், பொழுது விடிந்தால் அவன் வருவானே, இவன் 
வருவானே அந்த பிரச்னையை எப்படி சமாளிப்பது என்று கவலையுடன் படுக்கச் செல்லாதீர்.
தினமும் 5 கி.மீ., நடைப் பயிற்சி: தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். 

நாள்தோறும் ஐந்து கி.மீ., துாரத்திற்கு குறையாமல் நடந்தால், எந்த இருதய நோயாக இருந்தா லும் அது தீவிரமடையாமல் தடுக்கலாம். நடப்பதைப் போல சைக்கிள் ஓட்டுவதும் நன்மை தரும்.

பழங்கள், பச்சை கீரை, காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிரட், சப்பாத்தி, ரொட்டி, புரோட்டா ஆகியவற்றை சாப்பிடும் போது வெண்ணெய், நெய், வனஸ்பதி போன்ற கொழுப்புப் பொருட்கள் சிறிதளவு சேர்க்கலாம் அல்லது தவிர்க்கலாம். தோல் நீக்கிய கோழி இறைச்சி, மீன் போன்ற கொழுப்பற்ற இறைச்சிகளை எண்ணெயில் பொரிக்காமல் உண்ணலாம்.

போட்டி, பொறாமை வேண்டாம்: எண்ணெய் பயன்படுத்தி தான் ஆக வேண்டும் என்றால் சூரிய காந்தி எண்ணெய், கடுகு எண்ணெய், சோயா பீன்ஸ் எண்ணெய், நல்லெண்ணெய் போன்றவைகளை பயன்படுத்தலாம். பழச்சாறு, பால் சேர்க்காத டீ அல்லது சர்க்கரைக்கு மாற்றான வேறு பாதிப்பற்ற இனிப்பு கலந்து குடிக்கலாம்.

ஆண்கள் 35, பெண்கள் 40 வயதில் கட்டாயம் இருதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆண்டிற்கு ஒரு முறை 'டி.எம்.டி' எடுத்து பார்த்துக் கொள்வது நல்லது. மன அழுத்தம் இருதய நோய்க்கு விடப்படும் அழைப்பு. மன அழுத்தத்தை குறைக்க கோயில் போன்ற அமைதியான இடங்களுக்கு செல்லலாம். -

இருதய அறுவை சிகிச்சை துறையில் பல்வேறு முன்னேற்றங்கள் வந்தாலும், இருதயத்திற்கு வரக்கூடிய பிரச்னைகளை நடை, புகைப்பதை தவிர்த்தல், மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை மற்றும் யோகா, தியானம் போன்ற நல்ல பழக்க,வழக்கங்களால் இருதயத்தை பாதுகாக்கலாம். 
பணிபுரியும் இடங்களிலும், போட்டி பொறாமையின்றி வாழ்ந்தால், இருதய 
நோயிலிருந்து எளிதில் தப்பிக்கலாம்.

- டாக்டர்.எம்.சம்பத்குமார்
மதுரை.


இருதயநோயிலிருந்து பாதுகாக்க வழிகள்

இன்றைய சூழலில் இருதய நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து 
வருகிறது. உலகில் அதிகளவிலான மரணத்துக்கு இருதயநோய் காரணமாக விளங்குகிறது. 
இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 40 லட்சம் பேர் இருதய நோய்களால் மரணமடைகின்றனர். 
இருதய நோய்களால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை 3 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது எதிர்காலத்தில் 20 சதவீதமாக கூட உயரலாம் என டாக்டர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இரவு பணிகள், அதிக நேரம் பணிபுரிவது, இதனால் குடும்பத்தில் ஏற்படும் நிம்மதியின்மை போன்றவை இருதய நோய்க்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது.

புகைப்பிடிப்பவர்களுக்கே அதிகம்: 


அதே போல் உலகில் மாரடைப்பால் மரணமடைபவர்களில் 20 சதவீதம் பேர் புகைபிடிப்பவர்கள். புகை பிடிக்காதவர்களை விட புகைபிடிப்பவர்களுக்கு இருதய நோய் வரும் வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம். புகை பிடிப்பதனால் இருதயத்துக்கு செல்லும் ஆக்சிஜன் அளவு குறைகிறது. 

புகை பிடிப்பவர்களுக்கு மட்டும் இதனால் பாதிப்பு என்றில்லை. அவர்களை சுற்றியுள்ளோரும் குறிப்பாக குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். நியூயார்க்கில் புகை பிடிக்க கட்டுப்
பாடுகள் விதிக்கப்பட்ட பிறகு இருதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 சதவீதம் குறைந்திருக்கிறது. இந்தியாவிலும் இது போன்ற கட்டுப்பாடுகள் தேவை என டாக்டர்கள் வலி
யுறுத்துகின்றனர். இல்லையெனில் 2020ல் உலகிலேயே அதிக இருதய நோயாளிகளை கொண்ட நாடு இந்தியாவாக இருக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடல் பருமனாதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இருதய நோய்கள் ஏற்படலாம் என கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயால் இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் சேதமடை வதால் மாரடைப்பு ஏற்படலாம். சர்க்கரை நோயாளிகளில் 75 சதவீதம் பேருக்கு இந்த குறைபாடு இருக்கிறது. இதனால் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது. எனினும் சர்க்கரை நோயாளிகளுக்கு இருதய நோயை எளிதில் கண்டறிய முடிவதில்லை.

இருதய தசை பலவீனம் அடைவது ஏன்

இருதயம் ஒரு தானியங்கி தசை. ஒரு நிமிடத்தில் 72 முறை தானாகவே சுருங்கி விரியும் தன்மை படைத்தது. ஒவ்வொரு முறை சுருங்கி விரியும் போதும் 55 சதவீதத்துக்கு மேல் ரத்தத்தை வெளியில் அனுப்பும்.

இருதய தசை பலவீனம் அடையும் போது 40 சதவீதத்துக்கு கீழாகவே ரத்தத்தை வெளியில் அனுப்ப முடியும். இதனால் இருதயம் வீங்கி, நடக்கும் போது மூச்சிறைப்பு ஏற்படும். வியாதி முற்றும் போதும், ஓய்வில் படுக்கும் போதும் மூச்சிறைப்பு ஏற்படும். கால்களில் வீக்கம் ஏற்படும். இந்த வியாதி பிறந்த குழந்தை முதல் வயோதிகர் வரை எவரையும் பாதிக்கும் பரம்பரை 
காரணமாகவும், கிருமிகள் பாதிப்பினாலும் இருதயம் பலவீனம் அடையலாம்.

கர்ப்பிணிகளை யும் இது பாதிக்கும். மது அருந்துதல், வால்வு பழுது, மாரடைப்பு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி மூலமும் இருதய தசை பலவீனம் அடையலாம். எக்கோ பரி
சோதனை மூலம் இருதய தசை பலவீனம் அடைவதை கண்டுபிடிக்க முடியும்.

முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், இருதய தசை பலவீனம் காரணமாக ஓராண்டில் 10 
சதவீதம் பேர் மரணம் அடையும் அபாயம் உள்ளது. மாரடைப்புக்கு ஸ்டெண்ட், பைபாஸ் 
செய்வதன் மூலமும், வால்வு மாற்று அறுவை சிகிச்சை மூலமும் இருதய தசை பலவீனத்தை குணப்படுத்தலாம். இருதய துடிப்பில் ஏற்படும் கோளாறுகளை மின் அதிர்வு மூலம் சரி செய்யும் தானியங்கி கருவியை மார்பில் தோலுக்கு அடியில் நிரந்தரமாக வைப்பதன் மூலம் திடீரென 
ஏற்படும் மரணங்களை தடுக்க முடியும்.

டாக்டர் ஜி. துரைராஜ்,
மதுரை, 98421 05000எப்படி தவிர்ப்பது


* புகை பிடிப்பதை முற்றிலும் தவிர்த்தால், இருதய நோய்கள் வருவதிலிருந்து நம்மை பாதுகாக்கலாம்.
* உப்பு அதிகளவில் பயன்படுத்துவதால் உடலில் ரத்தக்கொதிப்பு அதிகரிக்கும். இதன் மூலம் இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
* ரத்தத்ததில் கொலஸ்ட் ரால், சர்க்கரை, பிபி போன்றவற்றின்அளவை சீரான அளவில் வைத்திருக்க வேண்டும்.
* யோகா மற்றும் தியானம் செய்வது உடலுக்கு மிக நல்லது.
* தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியமானது.
* பெரும்பாலான நேரங்களில் எஸ்கலேட்டர் மற்றும் லிப்ட் ஆகியவற்றை பயன்படுத்தாமல், மாடிப்படிகளை பயன்படுத்த வேண்டும். இதனால் மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறையும்.
* ஒரு நாளுக்கு சராசரியாக 10 ஆயிரம் அடிகள் நடக்க வேண்டும். காலையில் ஒரு மணி நேரம் நடப்பது சிறந்தது.
* முறையான உடற்பயிற்சி, சரியான உணவு பழக்கம், உரிய முறையில் மருத்துவம் எடுத்துக்கொள்வது இருதய நோயிலிருந்து பாதுகாக்கும்.
* காய்கறிகள் அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மதுப்பழக்கத்தை அறவே கைவிட வேண்டும்.

உடல் பருமனாதலாலும், சர்க்கரை நோய் காரணமாகவும் இருதய நோய்கள் ஏற்படலாம் 
என கண்டறியப்பட்டுள்ளது.
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive