புதிய விண்வெளி அவதாரம்!

தலையாலங் கானத்துச் செரு வென்ற பாண்டிய நெடுஞ்செழியன் என்ற சுருக்கமான பெயர் மாதிரியே, "ஏரோபிக் வெஹிக்கிள் ஃபார் டிரான்ஸட்மாஸ்ஃபெரிக் ஹைப்பர்சானிக் ஏரோஸ்பேஸ் டிரான்ஸ்போர்ட்டேஷன்' என்ற நெடுநீண்ட ஆங்கிலச் சொற்கோவைச் சுருக்கமே "அவதார்'.

உள்ளபடியே, திரவ ஹைடிரஜன் - திரவ ஆக்சிஜன் ஆகிய இணையரின் கலப்பில் உருவாக இருக்கும் பீம அவதாரம். இது ஒரு வகை விண்வெளி விமானம். கம்பன் பாடுவது போல, "மண்ணில் தேர் சென்ற சுவடெலாம் பாய்ந்து விண்ணில் ஓங்கி' எழுந்து விண்வெளி சுற்றிவிட்டு, அமைதியாகத் தரை இறங்கும். மீள் பயன்பாட்டுக்கு உரிய விண்கலம்.

சுழலித் தாரைப் பொறியும், அதிவேக மோது தாரைப் பொறியும், "கிரையோஜெனிக்' என்கிற அதிகுளிர் திரவ உந்துபொறியும் இணைந்த தனித் திட்டம். இதன் 25 டன் எடையில் 15 டன் திரவ ஹைடிரஜன் இடம்பெறுமாம்.
இன்று 1 டன் செயற்கைக்கோளை விண்ணில் கொண்டுவிட ஆகும் செலவு ஏறத்தாழ 100-130 கோடி ரூபாய். அதுவே இந்த விண்வெளி விமானத்தினால் 4-7 கோடி ரூபாய் அளவுக்குச் சிக்கனம் ஆகிறது என்றால் கசக்குமா என்ன?
இலவசமாக வளிமண்டலக் காற்றில் இருந்து ஆக்சிஜனை உறிஞ்சி இழுத்து உபயோகித்தால் விமானத்தின் எரிபொருள் செலவு மிச்சம். அதிக எடைச் செயற்கைகோளையும் சுமந்து செல்லலாம். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியர்கள் விண்வெளி விமானப் பயணம் செய்யலாம். விண்வெளிச் சுற்றுலாவுக்கும் உகந்த விமானம் என்றால் மகிழ்ச்சி தானே.

சீனா, ரஷியா, ஜப்பான் போன்ற நாடுகளை முந்திக் கொண்டு இத்தகையக் காற்று உறிஞ்சி விமானத்தின் முன்னோடிப் பரிசோதனையில் இந்தியா வெற்றி பெற்று உள்ளது.
இந்த ஆண்டு செப்டம்பர் 2 அன்று ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து செலுத்தப்பட்ட "சோதனைச் செயல்விளக்கி'ப் பயணம் முக்கியம் ஆனது. விண்வெளியில் பறந்தவாறே, முதல் ஐந்து நொடிகளில் வளிமண்டலத்தின் காற்றினை உள்வாங்கி, அதனையே தனக்குள் அடங்கிய விசேட எரிபொருளை எரித்து இரண்டு நொடிகள் மேலும் பறந்து சாதனை படைத்தது, நமது "ஸ்க்ராம்ஜெட்' ஏவூர்தி. "சூப்பர்சானிக் கம்பஷ்சன் ராம் ஜெட்' என்பதன் சுருக்கப் பெயர்.

காற்றில் ஒலிவேகத்தை விட 5 மடங்கு அசுரப் பாய்ச்சல் என்ற வகையில் அமெரிக்கா, ஆஸ்திரேலியாவுக்கு அடுத்த மூன்றாம் இடம் இந்தியாவிற்கே.
சமீபத்தில் 8.9.2016 அன்று திரவ ஹைடிரஜன் - திரவ ஆக்சிஜன் ஆகிய "கிரையோஜெனிக்' (அதிகுளிர் திரவ எரிபொருள் கலவை) ஏவூர்திப் பொறியின் மூன்றாவது முறையாக வெற்றி பெற்று உள்ளது. வணிக ரீதியிலான பயணங்களுக்கு நம்மைத் தயார்படுத்தும் முதல் வெற்றிப் பயணம்.
இன்றைக்கு ஜி.எஸ்.எல்.வி.-எஃப்05 ஏவுகலனால் 2,211 கிலோ எடை கொண்ட இன்சாட்-3டி.ஆர் செயற்கைக்ககோளினை ஏவுதற்கு 7 டன் விசை ஊட்டும் கிரையோஜெனிக் பொறி போதும். ஆனால் 4,000 கிலோ எடைச் செயற்கைக்கோள் என்றால் 20 டன் விசை தேவை. அதற்கான ஜி.எஸ்.எல்.வி.-மார்க்3 ஏவுகலனும் பயணத்திற்குத் தயாராகி வருகிறது.

இந்த இன்சாட்-3டி.ஆர் செயற்கைக்கோளில் அதி நவீன வானிலை ஆய்வுக் கருவிகள் இடம்பெறுகின்றன. வளிமண்டலத்தின் வெப்பநிலை, ஈரப்பதம், பசுமைக் குடில் வாயுக்கள் அளவினைப் பதிவாக்கும் உபகரணங்களும் இதில் இடம்பெறுகின்றன. இவை அகச்சிகப்பு மற்றும் கட்புலனாகும் வெள்ளை அலைவரிசைகளில் இயங்குபவை.
வானிலை ஆராய்ச்சி, தகவல் பரிமாற்றம், கடல் மற்றும் வான்வழிப் பயண விபத்துகளில் உயிர்மீட்பு, நிவாரண நடவடிக்கைக்கு உதவுகிற உபகரணங்கள் இதில் இடம்பெறுகின்றன. இந்த "காஸ்பாஸ்-சார்சாட்' திட்டத்தில் அமெரிக்கா, கனடா, ரஷியா, பிரான்சு உள்பட 37 நாடுகளின் ஒத்துழைப்பும் உள்ளது.
இதே செப்டம்பர் 26 அன்று திட்டமிடப்பட்டு உள்ள கடலாய்வுக்கான அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் "ஸ்காட்சாட்', அல்ஜீரியா நாட்டு "அல்சாட்-2ஏ' மற்றும் 2 சிறு செயற்கைக்கோள்கள் நம் நாட்டில் இருந்து செலுத்தப்பட உள்ளன.

ஒரு கணக்கில், இந்த ஒரு (செப்டம்பர்) மாதத்தில் மட்டும் 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்துவது இந்திய வரலாற்றில் புதிய சாதனை.
உள்ளபடியே, மூன்றுக்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் ஒரே ஏவுகலனில் செலுத்திய உலகில் முதல் நாடு இந்தியாதான்.

ஏற்கெனவே 2008 ஏப்ரல் 28 அன்று இந்தியாவின் கார்ட்டோசாட்-2ஏ மற்றும் இந்திய வானிலை ஆய்வுச் செயற்கைக்கோளுடன் அயல்நாடுகளின் 9 செயற்கைக்கோள்களும் ஏவப்பட்டன. அதன் பின்னர்தான் 2013-இல் அமெரிக்கா 29 செயற்கைக்கோள்களையும், 2014-இல் ரஷியா 37 செயற்கைக்கோள்களையும் ஒரே பயணத்தில் பறக்கவிட்டன.

2016 ஜூன் 22 அன்று நம் நாட்டு "பி.எஸ்.எல்.வி.-சி34' என்னும் துருவச் செயற்கைக்கோள் ஏவுகலன் முதன்முறையாக 20 செயற்கைக் கோள்களுடன் ஸ்ரீஹரிக்கோட்டாவில் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
பி.எஸ்.எல்.வி.-சி34 ஏவுகலனில் நம் நாட்டு "கார்டோசாட்-2சி' உடன் இந்திய மாணவர்கள் வடிவமைத்த இரண்டு செயற்கைக்கோள்களும் இடம்பெற்றன. அவை, சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தின் தயாரிப்பான 1.5 கிலோ எடை கொண்ட "சத்யபாம்சாட்', புனே பொறியியல் கல்லூரியின் 1 கிலோ எடை கொண்ட "ஸ்வயம்' செயற்கைக்கோள் ஆகியவை.
அன்றியும், அமெரிக்கா, கனடா, ஜெர்மன், இந்தோனேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 17 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டன. அவற்றை அந்தந்த நாட்டின்மேல் பறவைகள் போலப் பறக்கவிட்ட பெருமை நம் இந்திய விண்வெளிக்கு உண்டு.
இந்தப் பயணத்தின்போது முதன்முறையாக நான்காம் கட்ட திரவ உந்துபொறி இயக்கத்தில் ஒரு புதிய நுட்பம் கையாளப்பெற்றது. நில வாகனங்களை ஓட்டுவதைப் போலவே-ஏவூர்திப் பொறியினை இயக்கி, நிறுத்தி, மீண்டும் இரண்டாம் முறையும் இயக்குவிக்கப்பட்டது. திரவ உந்துபொறியினை இரண்டு முறை இயக்கியதும் இதுவே முதல்முறை.
அது மட்டுமா, இந்த 2016-ஆம் ஆண்டு விண்வெளி விளைச்சலில் முத்திரை பதித்துவிட்டோம்.

நம் நாட்டின் இந்திய மண்டல பயண அமைப்புச் செயற்கைக்கோள் திட்டத்திற்கான 7 ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். வகைச் செயற்கைக்கோள்களில் இறுதி மூன்றும் இந்த ஆண்டில் (20.1.2016, 10.3.2016, 28.4.2016) ஏவப்பட்டவை.
மொத்தத்தில் 2016 ஜூன் 22 வரை இந்தியா சொந்த மண்ணில் இருந்து 131 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தி உள்ளது. அவற்றில் நம் நாட்டின் செயற்கைக்கோள்கள் வெறும் 57 தான். அயல்நாட்டுச் செயற்கைக்கோள்கள் 74 என்பதில் ஒவ்வோர் இந்தியரும் பெருமிதம் கொள்ளலாம்.
அதிலும் 2013 - 2015 ஆண்டுவாக்கில் 13 நாடுகளின் 28 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியதன் வழி இந்தியாவிற்கு ஏறத்தாழ 650 கோடி ரூபாய் வருமானம் என்றால் சும்மாவா?
இன்னொரு சிறப்புச் செய்தி, தெற்காசிய நாடுகளில் சொந்தச் செயற்கைக்கோளினைச் சொந்த ஏவுகலனால் சொந்த மண்ணில் இருந்து செலுத்தும் வல்லமை படைத்த நாடு இந்தியா மட்டும்தான்.

2014 ஆகஸ்ட் மாதம் தெற்காசிய மண்டல ஒத்துழைப்புக் குழுவின் மாநாட்டில் "சார்க்' நாடுகளுக்கு என்றே தனியாக ஓர் செயற்கைக்கோள் செலுத்தப்பட வேண்டும் என்று பாரதப் பிரதமர் அறிவித்தார்.
இதற்கு மத்தியில், 2015 செப்டம்பர் 20 அன்று ஐக்கிய நாடுகள் சபையில் "செயற்கைகோளின் கட்டுப்பாடு எந்த நாட்டின் கையில்' என்று விவாதம் நடந்தது. இந்தியாவும் "சார்க்' உறுப்பு நாடான பாகிஸ்தானும் விவாதித்தன. ஆனால் தீர்ப்பு பாகிஸ்தானுக்கு எதிராக அறிவிப்பானது.
அப்புறம் என்ன, 2.10.2015 அன்று பாகிஸ்தான் இசைவு இன்றியே தனித்து செயற்கைக்கோள் அனுப்பும் திட்டத்திற்கு தயாரானது இந்தியா. ஆனால் "சார்க் செயற்கைக்கோள்' என்ற பெயர் மாற்றப்பட்டு, "தெற்காசியச் செயற்கைக்கோள்' என்ற புதுப்பெயர் சூட்டப்பெற்று உள்ளது. 2016 டிசம்பர் மாதம் அத்திட்டமும் நிறைவேற இருக்கிறது.

தொடர்ந்து, டாக்டர் அப்துல் கலாமின் "இந்தியா இலக்கு 2020'க்கும் அப்பால் 2025-ஆம் ஆண்டுக்குள் "மின்மய இந்தியா' ("டிஜிட்டல் இந்தியா') ஒளிர்வதற்கு 4 "ஜிசாட்' ரகச் செயற்கைக்கோள்கள் தயாராகி வருகின்றன.
சந்திரயான்-2 விண்கலன் சுமந்து செல்லும் நிலா ஊர்தி நம் சந்திரனில் தரை இறங்கும். அதற்கும் இதே ஜி.எஸ்.எல்.வி.தான் வாகனம்.
தொடர்ந்து, 2020-ஆம் ஆண்டுக்குள் நமது "ஆதித்யா' (400 கிலோ) விண்கலம் சூரியனுக்கு அருகில் சுற்றிப் பறக்கும். அதன்வழி சூரியனின் புறப் பரப்பில் இருந்து கிளம்பும் ஒளிப் புயல் அளவிடப்படும். இந்த விண்கலன்கள் அனைத்துமே "மேக் இன் இண்டியா' திட்டத்தின்கீழ் இந்தியாவின் சொந்தத் தயாரிப்புகள்.
இத்தனைக்கும் நம் நாட்டு சொந்த உந்து எரிபொருள் வரலாற்றின் பொன்விழா தொடங்க இருக்கிறது. முதலாவது இந்திய "ஆர்.எச்.-75' என்ற "ரோகிணி வானிலை ஆய்வூர்தி' 1967 நவம்பர் 20 அன்று விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் முழு எடை வெறும் 32 கிலோ. ஒரு ஆள் எடையில் பாதி. அது வெறும் 7 கிலோ பயன்சுமையினை 10 கிலோ மீட்டர் உயரம் வரை கொண்டு சென்றது.
இன்றைய ஜி.எஸ்.எல்.வி. ஏவுகலனோ 4,15,000 கிலோ எடை. இது, 2,000 கிலோ கனரகச் செயற்கைக்கோளினை 36,000 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்ற விடுகிறது. இது அசாதாரண வளர்ச்சி அல்லவா?
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive