Printfriendly

www.Padasalai.Net

Padasalai's WhatsApp Service!

பாடசாலை வலைதளத்தின் செய்திகள் தங்கள் Whatsapp குழுவில் இடம் பெற 94864 09189 Number ஐ இணைக்கவும்.

Join Now!

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்

புதிய பாடப்புத்தகங்கள் குறித்து திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப அவர்கள்
“கற்றலை மனனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் பயணிக்க வைத்தல்”..
தமிழக அரசின் புதிய பாடப்புத்தகங்களில் வித்தியாசமாகக் காட்சி தருகிறது முகப்பு வாசகம். புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருக்கும்போது, “நம் மாணவர்களுக்காகப் பார்த்துப் பார்த்து இந்த புத்தகங்களைச் செதுக்கியிருக்கிறோம். இன்னும் இரண்டு வருடங்களில் பாருங்கள்... நம் மாணவர்கள் இந்தப் போட்டித் தேர்வுகளை தங்கள் வசமாக்க ஆரம்பிப்பார்கள்” எனப் பெருமிதத்துடன் ஒலிக்கிறது உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் குரல்.
“எந்த விதத்தில் தனித்தன்மையானவை இந்தப் புத்தகங்கள்?”
“அந்தந்தத் துறைகளில் உச்சத்தில் இருக்கும் சிந்தனையாளர்கள்தான் பாடத்திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுத்திருக்கிறார்கள். சி.பி.எஸ்.இ, என்.சி.இ.ஆர்.டி அமைப்புகளில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆலோசனையைப் பெற்றோம். இந்தக் கல்வியாண்டில் 1,6,9,11 வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கிறோம்.
ஒரு நுழைவுத்தேர்வை எழுதுவதில் தொடங்கி, நேர்காணல், என்ன படிக்கலாம், எதைப் படிக்கலாம் என்று நம் மாணவர்களுக்கு இருக்கும் தலைவலிகள் பற்றி நிறையவே யோசித்தோம். வெறும் எழுத்தால் நிரப்பப்பட்ட புத்தகங்களாக இருக்கக் கூடாது என முடிவெடுத்ததால் தொழில்நுட்பத்தைப் புகுத்தியிருக்கிறோம். புத்தகங்கள் முழுக்க QR CODE இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை ஸ்கேன் செய்தால் அனிமேட் செய்த வீடியோக்களுக்குச் செல்லும். ஆசிரியர்கள் நடத்துவதில் சந்தேகங்கள் இருந்தால் கொடுக்கப்பட்டிருக்கும் லிங்க்கை ஸ்கேன் செய்தால் விர்ச்சுவல் ஆசிரியர் இணையம் மூலம் பாடம் எடுப்பார். பாடங்கள் தொடர்பாக 5 நிமிட வீடியோக்களும் தயார் செய்யப் பட்டிருக்கின்றன.
ஐ.சி.டி கார்னர் என்று ஒரு பகுதி அறிமுகப்படுத்தியிருக்கிறோம். நம் இந்தியப் பாடப்புத்தகங்களிலேயே இது புதிய வடிவம். பாடம் தொடர்புடைய இணையப் பயன் பாடுகளைக் கொடுத்திருப்போம். தொலைத்தொடர்பு அம்சங்கள் அத்தனையும் புத்தகங்களில் இடம்பெற்றிருக்கும். ஆப் வடிவங்கள், விக்கிபீடியா பக்கங்கள், வெப்சைட்டுகள் எனப் பல்வேறு இணையத் தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.
கூகுள் பாடி பிரவுசர் மூலம் மனித உடலியக்கத்தைப் பார்க்கலாம், தமிழ் விர்ச்சுவல் அகாடமியின் சொல் விளையாட்டுகள் இருக்கும், வரலாறு மற்றும் புவியியலுடன் கூகுள் எர்த் இணைக்கப்பட்டிருக்கும். ‘விர்ச்சுவல் டூர் ஆஃப் மியூசியம்ஸ்’ லிங்க் கொடுத்திருக்கிறோம், கணிதத்தில் ஜியோஜீப்ரா 360 டிகிரி படங்களுக்கான லிங்க் என மாணவர்களை அந்தத் தளத்திற்கே அழைத்துச் செல்லும் வகையில் பாடப் புத்தகங்களை வடிவமைத்திருக்கிறோம்.
சின்னக் குழந்தைகள் ஆர்வமாகப் படிப்பதற்காக இசையமைப்பாளர்கள் மூலம் சில பாடல்களை இசையமைத்தி ருக்கிறோம். அனிமேஷன் வீடியோக்களையும் இணைத்தி ருக்கிறோம். ஸ்மார்ட்போனையும், டேப்லெட்களையும் ஏந்தியிருக்கும் மாணவர்களை இந்தப் புத்தகங்கள் நிச்சயம் கவரும்.
சோழர் காலத்துக் குமிழித் தூம்பு, கல்லணை கட்டப்பட்ட விதம், தஞ்சைப் பெரிய கோயில் வடிவமைப்பு என, படங்களாகவே விவரித்திருக்கிறோம். நம் ஆதிச்சநல்லூர், கீழடி அகழாய்வுகளின் விவரிப்புகளைக்கூடச் சேர்த்திருக்கிறோம்.
அழ.வள்ளியப்பா, ஈரோடு தமிழன்பன், பிரமிள், ஆத்மாநாம் கவிதைகள், நா.முத்துக் குமாரின் ‘மகனுக்கு எழுதிய கடிதம்’, பெரியார், ஜீவா தொடர்பான கட்டுரைகள், தாகூர் கடிதங்கள், நீலகேசி, இதழாளர் பாரதி, தாவோ சிந்தனைகள், யசோதர காவியம், கந்தர்வனின் ‘தண்ணீர்’, சுஜாதாவின் ‘தலைமைச் செயலகம்’, ஜெயமோகனின் ‘யானை டாக்டர்’, புதுமைப் பித்தன், சி.சு.செல்லப்பா, ஜெயகாந்தன், தி.ஜா, பிரபஞ்சன். பிச்சமூர்த்தி, பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், அப்துல் ரகுமான், இன்குலாப், மீரா, வைரமுத்து, அ.முத்துலிங்கம், ரசூல் என பல்வேறு ஆளுமைகளின் எழுத்துகளையும், எண்ணங்களையும் நம் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அறிஞர் அண்ணாவின் ஆங்கில உரை, இசையமைப் பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் தொடர்பான இசைக் கட்டுரைகளும் உண்டு. ஓவியர்கள் சில்பி, ஆதிமூலம், மருது, மணியம் செல்வன் போன்ற பலருடைய ஓவியங்களைப் பயன்படுத்தியிருக்கிறோம்.”
“நீட் நுழைவுத் தேர்வுக்கு இந்தப் புத்தகங்கள் எந்தளவில் உதவும்?”
சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வு கேள்விகளுடன் நம் பாடப்புத்தகங்களை ஒப்பிட்டுப் பார்த்தோம். பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி பாடங்களிலிருந்து கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தும் நம் புதிய பாடத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன. பயாலஜியைப் பொறுத்தவரை 99% கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன. மேலும், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக் கேள்விகள் பலவும் இந்தப் புதிய பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன. அகில இந்திய அளவில் நடக்கக்கூடிய கடினமான நுழைவுத் தேர்வுகளை நம் மாணவர்கள் மாணவர்கள் எதிர்கொள்ள இந்தப் புதிய பாடத்திட்டம் நிச்சயம் உதவும். என்னுடைய கணிப்பின் படி அடுத்த ஐந்து வருடங்களில் நம் மாணவர்கள் அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் நாட்டிலேயே அதிக இடங்களைப் பெறுவார்கள். மற்ற மாநில இடங்களைக்கூடக் கைப்பற்ற ஆரம்பித்து நுழைவுத் தேர்வுகளில் அசைக்க முடியாத இடத்துக்குச் செல்வார்கள்.”
“தேர்வு முறைகளில் ஏதாவது மாற்றம் வர வாய்ப்பிருக்கிறதா?”
“நிறைய யோசித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒரே இரவில் அதைக் கொண்டுவர முடியாது. நேற்று வரை மனப்பாடம் செய்துவந்த மாணவர்களின் கையிலிருந்து அடுத்த நாளே புத்தகத்தைப் பிடுங்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதை நடைமுறைப் படுத்தமுடியும். இதை ஆசிரியர்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும். மாணவர்களை வகுப்பறைகளில் கேள்விகளைக் கேட்கப் பழக்க வேண்டும்.”
“நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் போன்ற விவகாரங்கள் பேசுபொருளாகியிருக்கின்றன. இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“இந்த விவகாரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள்தான் உரிய முடிவெடுக்க முடியும். இருந்தாலும் நாடு முழுக்க ஒரு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு சில மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கலாம். அந்தந்த மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப பாடத் திட்டத்தில் மாற்றம், ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்துத் தயார்படுத்திட குறைந்தது மூன்று அல்லது நான்கு கல்வியாண்டுகள் அவகாசம் அளிக்க வேண்டும் எனத் தமிழக அரசே கருத்து தெரிவித்திருந்தது. இந்தச் சூழலில் இந்தக் கருத்து மிக முக்கியமானது என்றே நான் கருதுகிறேன்.
-
நன்றி-விகடன்

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...


Follow by Email

 

Tamil Writer

Most Reading