ஜாக்டோ ஜியோ போராட்டம்: கைதான மேலும் 600 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்

போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மேலும்
600 ஆசிரியர்களை இன்று பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் மாநில அளவில் ஜன. 22-ம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவின்றனர். இதையடுத்து ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இன்று காலை 9 மணிக்குள் பணிக்கு திரும்பாவிடில், ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அரசின் எச்சரிக்கையையும் மீறி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்புகின்றனர். குறிப்பாக சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த வாரம் 447 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தற்போது போராட்டத்தில் கைதான மேலும் 600 ஆசிரியர்களை இன்று பணியிடை நீக்கம் செய்து பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1047 பேர் பணியிடை செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே அரசு அறிவித்தப்படி, ஆசிரியர்கள் இல்லாத அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Share this