Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போராட்டத்தில் மேலும் பல சங்கங்கள் பங்கேற்பு அரசு இயந்திரம் இன்று முடங்கும்

வருவாய்த்துறை உட்பட அனைத்து பணிகளும் பாதிக்கும்

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் மேலும் தீவிரம் அடைகிறது. தலைமை செயலக ஊழியர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசு சங்க ஊழியர்களும் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடத்துகிறார்கள். இதனால் தலைமைச் செயலகம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை உட்பட அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால், சம்பளம் கிடையாது என்று தமிழக தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கடந்த 22ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசின் எச்சரிக்கையையும் மீறி, நாளுக்கு நாள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று 8வது நாளாக போராட்டம் நடைபெற்றது. சில இடங்களில் அரசு எச்சரிக்கையையொட்டி ஆசிரியர்கள் வேலைக்கு சென்றனர். ஆனால் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கல்வி அதிகாரிக்கு பணிக்கு வருவதாக எஸ்எம்எஸ் அனுப்பி விட்டு பணிக்கு செல்லாமல் வழக்கம்போல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், தமிழ்நாடு தலைமை செயலக சங்க ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று சங்க நிர்வாகிகளுக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. அதேபோன்று, அரசுக்கு ஆதரவாக செயல்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கும் ஊழியர்கள் நெருக்கடி அளித்தனர்.

 இதையடுத்து, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான தமிழ்நாடு தலைமை செயலக சங்கம் (பீட்டர் அந்தோணிசாமி), தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் (சண்முகராஜன்), தமிழ்நாடு அரசு அலுவலர் கழகம் சி மற்றும் டி பிரிவு (சவுந்தரராஜன்), தமிழ்நாடு அலுவலக உதவியாளர் மற்றும் அடிப்படை பணியாளர் மாநில மையச் சங்கம் (எஸ்.மதுரம்), தமிழ்நாடு அரசு தலைமை செயலக ஊர்தி ஓட்டுனர்கள் சங்கம் (ராஜாராம்) மற்றும் தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் (பாலமுருகன்) ஆகியோர் நேற்று முன்தினம் (28ம் தேதி) மாலை கூடி பேசினர். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி நிருபர்களிடம் கூறும்போது, “1-4-2003க்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தையே மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். 7வது ஊதிய குழுவால் அறிவிக்கப்பட்ட 21 மாத நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் அரசாணை எண் 56ஐ ரத்து செய்திட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 30ம் தேதி (இன்று) ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்வோம். அப்படியும் தமிழக அரசு எங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கவில்லை என்றால் 31ம் தேதி (நாளை) அடுத்தக்கட்ட போராட்டம் பற்றி அறிவிப்போம்” என்று கூறினார்.

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினருக்கு ஆதரவாக அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கம் போராட்டத்தில் இறங்கினால், அரசு பணிகள் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகும். இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிற்பகல் தலைமை செயலகத்தில் 2 மணி நேரத்துக்கு மேல் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை செயலாளர் சண்முகம் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிவில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சங்க நிர்வாகிகள் மற்றும் இன்று போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை முதல்வர் அழைத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரசு எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அதே நேரம், தலைமை செயலாளர் மூலம் அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நேற்று மாலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் பல்வேறு அரசு சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி 30ம் தேதி (இன்று) போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். ஆனால், அரசு ஊழியர்கள் யாரும் போராட்டத்தல் ஈடுபடவோ, தற்காலிக விடுமுறையோ எடுக்க கூடாது. நாளைக்கு பணிக்கு வராத ஊழியர்களுக்கு ஊதியம் கிடையாது. அதிகாரிகள் இதை கண்காணித்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். காலை மற்றும் மாலை 2 வேலையும் அரசு ஊழியர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். தலைமை செயலக ஊழியர்களின் பிரிவு அதிகாரிகள் காலை 10.15 மணிக்குள் பணிக்கு வந்தவர்களின் விவரங்களை உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்து அரசு அழைத்து பேசாததால் திட்டமிட்டபடி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் 30ம் தேதி (இன்று) ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வோம் என்று அதிரடியாக அறிவித்துள்ளனர். இதுகுறித்து தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி நேற்று தலைமை செயலாளர் எச்சரிக்கை உத்தரவுக்கு பிறகு நிருபர்களிடம் கூறியதாவது: அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் நிர்வாகிகள் கூடி பேசியபடி இன்று வேலை நிறுத்தம் நடக்கும். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கைவிட வேண்டும். தலைமை செயலகத்திலேயே 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அவர்களை மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்.

வேலை நிறுத்தம் குறித்து நேற்று முதல்வரிடமும், தலைமை செயலாளரிடமும் மனு அளித்தோம். இதுவரை அரசு எங்களை அழைத்து பேசவில்லை. அதனால் அறிவித்தபடி, இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகிறோம். அனைத்து அரசு ஊழியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். அரசு எத்தகைய அச்சுறுத்தல் செய்தாலும், ஒன்றுபட்டு கோரிக்கைகளை வென்றெடுக்க வேண்டும். முதல்வர் எங்களது கோரிக்கைகளை நிச்சயம் பரிசீலிக்க வேண்டும். ஓய்வூதியம் இல்லாவிட்டால் எங்களுக்கு என்ன ஆதாரம். அதனால் அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இன்றைக்குள் அழைத்து பேசாவிட்டால், நாளை மீண்டும் பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினரை தொடர்ந்து, அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து, பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலைநிறுத்தம் அறிவித்துள்ளதால் தமிழகம் முழுவதும் அரசு பணிகள் பாதிக்கும். இதனால் பொதுமக்கள் மற்றும் அரசும் நேரடியாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தலைமைச் செயலகத்தில் பணிகள் முற்றிலும் பாதிக்கும். ஏற்கனவே மாவட்டங்களிலும், கமிஷனரகங்கள், இயக்குநகரங்கள் முற்றிலும் முடங்கிப்போயுள்ளன. தற்போது தலைமைச் செயலகமும் இன்று முடங்கும். அதைத் தவிர போலீஸ் கமிஷனரகங்கள், டிஜிபி அலுவலகம், நீதித்துறை ஊழியர்களும் போராடி வருவதால், தமிழகமே இன்று ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த 8 நாட்களாக நடைபெற்று வரும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள், போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளதாகவே கருதப்படுகிறது

காவல் பணிகள் கடும் பாதிப்பு
அரசு ஊழியர்களின் போராட்டம் தீவிர அடைந்ததை தொடர்ந்து காவல் துறையில் உள்ள அமைச்சு பணியாளர்கள் முழு நேர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தால் சென்னை மாநகர காவல் துறையில் குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பதற்கான பணிகள் மற்றும் காவல் துறை சார்ந்த பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளது. அதேபோல், தமிழகம் முழுவதும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து அந்தந்த காவல் நிலையங்களுக்கு செல்ல வேண்டிய முக்கிய கோப்புகள் அனைத்தும் தேங்கி உள்ளது. காவல் துறையில் உள்ள இணைய சேவை பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

தற்போது காவல் நிலையங்களில் வழக்கு பதிவு மற்றும் அன்றாடம் நடைபெறும் பணிகள் மட்டுமே நடந்து வருகிறது. அமைச்சு பணியாளர்கள் செய்ய வேண்டிய பணிகள் முற்றிலும் முடங்கி உள்ளதால், தமிழகம் முழுவதும் காவல் பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல், அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக காவல் துறையில் உள்ள அமைச்சு பணியாளர்களை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் லஞ்சம் ஒழிப்பு துறையிலும் பணிகள் முடங்கி உள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைச்சு பணியாளர்கள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive