திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் நியாமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். அதிமுக அரசின் அடக்குமுறை நடவடிக்கைகள் ரத்து செய்யப்படும் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் மீது முதலமைச்சர் அராஜக நடவடிக்கை என ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை பற்றி முதல்வர் பழனிசாமி கண்டுகொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டத்துக்கு உடனே தேர்வு காண வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், 7-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கிவிட்டன. தினமும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்  ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு பல்வேறு வழிகளில் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு மிரட்டல் விடுத்தது. மேலும் போராடும் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என அரசு அதிரடி காட்டியது. இருப்பினும் போராட்டம் தீவிரமடைந்ததால், மறியல் செய்து கைதானவர்களில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை மட்டும் போலீசார் சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து ஆதரவு குவிந்து வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு ஊழியர்களின் நியாமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this