பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றமா?- இணையதளங்களில் பரவும் தகவல்களுக்கு தேர்வுத்துறையின் விளக்கம்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றம் என இணையதளங்களில் பரவும் தகவல்களை தேர்வுத்துறை மறுத்துள்ளது.
பள்ளிக் கல்வித் துறையின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1-ல் தொடங்கி 29-ம்தேதியுடன் முடிவடைந்தன. தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதில், பிளஸ் 2 தேர்வுமுடிவுகள் ஏப்ரல் 19-ல் வெளியிடப்பட உள்ளது.இதற்கிடையே மக்களவைத் தேர்தல் மற்றும் விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடையாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை தள்ளி வைக்க முடிவாகியுள்ளது. மே முதல் வாரம் தேர்வு முடிவுகளை வெளியிட அரசு திட்டமிட்டுவருவதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. ஆனால், இந்தத் தகவலை தேர்வுத்துறை மறுத்துள்ளது.
இதுகுறித்து தேர்வுத்துறை அதிகாரிகள் கூறும்போது, “திட்டமிட்டபடி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19-ம் தேதி வெளியிடப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 10-ம் தேதியுடன் முடிவடையும். தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட இறுதிகட்ட பணிகள் நடைபெறும்.பெரும்பாலான முகாம்களில் பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தி முடிக்கப்பட்டு, பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. ஆசிரியர்களின் தொடர் உழைப்பால் அனைத்து தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்ட நாட்களில் வெளியிடப்படும். தேர்வெழுதிய 27 லட்சம் மாணவர்களுக்கும் தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.
அரசு இணையதளம் வழியாகவும் மாணவர்கள் தேர்வுமுடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்தல் பணிகள் காரணமாக சிரமங்களைத் தவிர்க்க பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதியை தள்ளி வைக்க அரசு விரும்பியது. ஆனால், பணிகள் எல்லாம் முடிந்துவிட்டதால் அதற்கான அவசியம் இருக்காது’’ என்றனர்.

Share this

1 Response to "பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றமா?- இணையதளங்களில் பரவும் தகவல்களுக்கு தேர்வுத்துறையின் விளக்கம். "

Dear Reader,

Enter Your Comments Here...