சிறப்பு வகுப்புக்குத் தடை: மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு

விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
 கம்பத்தைச் சேர்ந்த விஜயகுமார் தாக்கல் செய்த மனு:
 கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறை நாள்களில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும், அதை மீறுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், மாணவர்களுக்கு நீட், ஐஐடி உள்ளிட்ட தேர்வுகளுக்கு கோடை காலத்தில் தான் வகுப்புகள் நடைபெறும்.
 இந்த தேர்வுகள் மாணவர்களுக்கு ஒரே பாடத் திட்டத்தின் கீழ் இந்திய அளவில் நடைபெறும். அதை எதிர்கொள்ள மாணவர்களுக்கு தனி வகுப்புகள் நடத்தப்படவேண்டும். எனவே, கோடை விடுமுறை நாள்களில் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தக் கூடாது என தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகல்வித் துறை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு குறித்து தமிழ்நாடு மெட்ரிகுலேசன் பள்ளிகல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை செவ்வாய்க்கிழமை (ஏப்.16) ஒத்திவைத்தனர்.

Share this

0 Comment to "சிறப்பு வகுப்புக்குத் தடை: மெட்ரிகுலேசன் பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவு "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...