பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் குறித்து அரசு
தேர்வுத் துறை வழிகாட்டுதல்களை அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
இன்று வெளியாகும் நிலையில் மாணவர்கள் அல்லது தனி தேர்வர்கள் தங்கள்
விடைத்தாளில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் குறைந்து விட்டதாக கருதினால்
அவர்களின் விடைத்தாளை மறுமதிப்பீடு செய்யவும் மதிப்பெண்களை மறுகூட்டல்
செய்யவும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.இதற்கான வழிகாட்டுதலை அரசு தேர்வு துறை இயக்குனர் வசுந்தராதேவி
வெளியிட்டுள்ளார்.அதன் விபரம்:மாணவர்கள் தனி தேர்வர்கள் விடைத்தாளை
மறுமதிப்பீடு செய்ய விரும்பினால் முதலில் விடைத்தாள் நகலை பெற வேண்டும்.
விடைத்தாள் நகல் பெறுவதற்கு ஒவ்வொரு பாடத்துக்கும் 275 ரூபாய் கட்டணம்
செலுத்த வேண்டும்.மறுமதிப்பீடு வேண்டாம்; விடைத்தாளின் மதிப்பெண்களை
மட்டும் மீண்டும் கூட்டினால் போதும் என்பவர்கள் மறு கூட்டலுக்கு மட்டும்
விண்ணப்பிக்கலாம்.
மறுகூட்டல் செய்ய விரும்புவோர் விடைத்தாள் நகலை பெற வேண்டாம். மறுகூட்டல்
செய்வதற்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் 305 ரூபாயும் மற்ற பாடங்களுக்கு
தலா 205 ரூபாயும் செலுத்த வேண்டும். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள்
வழியாகவும்; தனி தேர்வர்கள் தேர்வு மையங்கள் வழியாகவும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் இடத்திலேயே கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டும்.வரும்
22ம் தேதி முதல் 24ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் தரப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகை சீட்டை பாதுகாப்பாக வைத்திருக்க
வேண்டும்.
அந்த சீட்டில் உள்ள விண்ணப்ப எண் அடிப்படையில் தான் மறு கூட்டல் மற்றும்
மறு மதிப்பீடு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.விடைத்தாள் நகல் வெளியிடும்
தேதி பின்னர் அறிவிக்கப்படும். விடைத்தாள் நகல் பெறுபவர்களுக்கு
மறுமதிப்பீடுக்கான தேதியும் பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.