டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில், தேர்வர்களுக்கு ஐந்து வருடம் கூடுதலாக்கப்பட்டதைத் தொடர்ந்து, குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசமும் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராம நிர்வாக அலுவலர், பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், உட்பட பல்வேறு பதவிகளில் 6 ஆயிரத்து 574 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்டோபர் 6-ஆம் தேதி வெளியிட்டது.
தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அடிப்படை கல்வித்தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி என்ற போதிலும் பட்டதாரிகளும் முதுகலை பட்டதாரிகளும் பொறியியல் படித்தவர்களும் போட்டிப்போட்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
எழுத்துத்தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்திருப்பதாக டிஎன்பிஎஸ்சி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தேர்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நாளையுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டித்து அரசுப் பணி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வர்களுக்கு, அனைத்து பிரிவினருக்கும் வயது உச்ச வரம்பு ஐந்து ஆண்டு காலம் உயர்த்தி கடந்த 30.10.2026 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 08.11.2026 நள்ளிரவு 11.59 வரை நீட்டித்து தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
எனவே, குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பி தவறவிட்டோர் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வரும் 8ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.








0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...