வாட்ஸப்புக்கு போட்டியாக வரும் கூகுளின் 'அல்லோ'!!

        பிரபல இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் 'அல்லோ என்ற பெயரில் புதிய செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

          கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் 'டியூ' எனப்படும் காணொளி அழைப்பு சேவை வசதி செயலி மற்றும் 'அல்லோ' எனப்படும் செய்தி பரிமாற்ற செயலி ஆகியவற்றை கொண்டுவர இருப்பதாக அறிவிப்பு செய்தது.   
அதைத் தொடர்ந்து கடந்த மாதம்  'டியூ' சேவை முறைப்படி அறிமுகம் செய்யப்பட்டது. ஒரு மாதத்திற்குள் பத்து லட்சம் பேர் அதனை தங்கள் அலைபேசிகளில்  பதிவிறக்கம் செய்தனர். அதனைத் தொடர்ந்து கூகுள் தற்போது 'அல்லோ செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த 'அல்லோ செய்தி பரிமாற்ற செயலியானது உள்ளிணைந்த கூகுள் தேடுபொறி வசதியுடன் வெளிவருகிறது. இதன் காரணமாக ஏதாவது ஒரு விஷயத்தை இணையத்தில் தேடுவதற்காக உரையாடல் செயலியிலிருந்து வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் உதவு ஒருங்கிணைப்பு வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் பயனாளர்கள் தங்கள் கூகுள்  கணக்கை இத்துடன் இணைத்துக் கொள்ளலாம்.
இத்துடன் இதில் பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துவதற்கு ஏதுவான 'எமோஜிகள் . மற்றும் 'ஸ்டிக்கர்களும்' இடம் பெற்றுள்ளன.
ஆனால் வாட்சப்பில் இடம் பெற்றுள்ள கோப்புகள்  பரிமாற்றம் மற்றும் குரல்வழி  அழைப்பு வசதி போன்ற வசதிகள் தற்போது இந்த செயலியில் இடம் பெறவில்லை. ஆனால் வெகுவிரைவில் குரல்வழி  அழைப்பு வசதி 'அல்லோ ' செயலியில் இடம் பெறுமென்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி : தினமணி

Share this