பிப். 10-க்குள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்


பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள்
பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
கொளப்பாக்கம், கோவூர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மௌலிவாக்கம் ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி, அய்யப்பன்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. குன்றத்தூரை அடுத்த கொளப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஏஞ்சலோ இருதயசாமி தலைமை வகித்தார்.
ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் கே.என்.ராமச்சந்திரன், எம்எல்ஏ கே.பழனி, ஸ்ரீபெரும்புதூர் மாவட்டக் கல்வி அலுவலர் மதிவாணன், கல்விக் குழுத் தலைவர் ஏசுபாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ஊரக தொழில் துறை அமைச்சர் பா.பென்ஜமின் ஆகியோர் கலந்துகொண்டு, 1,007 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினர்.
முன்னதாக, பள்ளி வளாகத்தில் ரூ. 1.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறையை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்துப் பேசியது: 7 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 13 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் மடிக்கணினிகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிப்ரவரி 10-ஆம் தேதிக்குள் அனைத்து பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு 4 சீருடைகள் வழங்கப்படும். 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறைகள் வரும் மார்ச் மாதத்துக்குள் கணினிமயமாக்கப்பட்டு, இணையதள இணைப்பு கொடுக்கப்படும் என்றார்.
இதையடுத்து, ஜாக்டோ-ஜியோ போராட்டம் குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, விரைவில் தேர்வு வர உள்ளதால், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அரசு வேண்டுகோளை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றார்.
விழாவில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ-க்கள் வெங்கட்ராமன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Share this

0 Comment to "பிப். 10-க்குள் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...