பொங்கல் பண்டிகை ஜன. 15 செவ்வாய்க்கிழமை வருவதால் போகிப்பண்டிகை தினமான திங்கட்கிழமை, அதாவது ஜன. 14 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை வருகிறது. பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு ஜனவரி 15 அன்று கொண்டாடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் பொங்கல் பண்டிகையை ஒட்டி சொந்த ஊருக்குச் செல்பவர்கள் அதற்கு முன் வரும் சனி, ஞாயிற்றுகிழமைகளில் கிளம்பினால் திங்கட்கிழமை வேலை நாளாக இருப்பதால் சிரமப்பட்டனர். இதன் காரணமாக ஒருநாள் விடுப்பு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். 
இதையடுத்து பல்வேறு தரப்பினரிடையே இதுகுறித்த கோரிக்கை அரசுக்கு விடுக்கப்பட்டது. இதையடுத்து அரசு சார்பில் இன்று ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: பொங்கல் பண்டிகை ஜன.15 முதல் 17 வரை கொண்டாடப்பட உள்ளது.
 இதுகுறித்து பல்வேறு சங்கங்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளில் அனைவரும் தத்தம் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்குச் செல்ல ஏதுவாக வரும் ஜன.14 திங்கட்கிழமையை அனைத்து மாவட்டத்திலுள்ள அரசு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்விக்கூடங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக்கோரியுள்ளனர். 
பல்வேறு சங்கங்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கவனமாக பரிசீலித்து, வரும் ஜன.14 திங்கட்கிழமையை அனைத்து மாவட்டத்திலுள்ள அரசு நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்விக்கூடங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவித்து அந்த நாளை ஈடுகட்ட வரும் பிப்ரவரி 9 சனிக்கிழமை அன்று பணிநாளாக அறிவித்து அரசாணை வெளியிடப்படுகிறது. 
இவ்வாறு அரசு குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இடையில் உள்ள திங்கட்கிழமை ஜன. 14 அன்று விடுமுறை விடப்பட்டதால், வரும் ஜனவரி 12, 13 சனி, ஞாயிற்றுக்கிழமைக் கிழமை தொடங்கி ஜன. 17 வியாழக்கிழமை வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

இதை இன்னும் சிலர் பத்துநாட்கள் விடுமுறை கிடைக்கிறது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். அதாவது ஜன.12 சனிக்கிழமை அன்று தொடங்கும் விடுமுறை ஜன. 17 வியாழக்கிழமை முடிகிறது. இடையில் ஜன.18வெள்ளிக்கிழமை ஒருநாள் வேலை நாள் அன்றும் விடுமுறை எடுத்தால் அதற்கு அடுத்துள்ள சனிக்கிழமை ஞாயிற்றுகிழமை விடுமுறையையும் சேர்த்து 10 நாட்கள் தொடர் விடுமுறை கிடைப்பதால் சிலர் வெள்ளிக்கிழமையும் விடுமுறை எடுக்க தயாராகிவிட்டனர். 
இதன்மூலம் பள்ளிக் கல்லூரிகள், அரசு நிறுவனங்களில் வேலைப்பார்ப்போருக்கு 6 நாட்கள் அல்லது 10 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments