வனக் காப்பாளர் பணியிடங்கள்: ஜன.28-இல் சான்றிதழ் சரிபார்ப்பு தொடக்கம்

தமிழக வனத் துறையில் காலியாக உள்ள வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு ஜனவரி 28 முதல் 30-ஆம் தேதி வரை சென்னையில் நடைபெற உள்ளது.
தமிழக வனத் துறையில் காலியாக உள்ள 300 வனவர், 726 வனக் காப்பாளர்கள், 152 ஓட்டுநர் உரிமத்துடன்கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை மொத்தம் 2.10 லட்சம் பேர் எழுதினர்.
இதில், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வில் தேர்வானவர்களின் விவரங்கள் வனத் துறையின் இணையதளத்தில் கடந்த திங்கள்கிழமை (ஜன. 21) வெளியிடப்பட்டன.
28-இல் சான்றிதழ் சரிபார்ப்பு: தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் உள்ள ஏவி அரங்கில் ஜனவரி 28-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது. நாளொன்றுக்கு 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இவை நடத்தப்பட உள்ளன. தேர்வர்கள் தேவையான அனைத்துச் சான்றிதழ்களுடன் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் வர வேண்டும். மேலும், விவரங்கள் www.forests.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக வனத் துறை சீருடைப் பணியாளர்கள் தேர்வுக் குழுமம் தெரிவித்துள்ளது

Share this