விஐடி அறிவியல் போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூ.3 லட்சம் பரிசுவேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இனோ விஐடி அறிவியல் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசு, சான்றிதழ்களை விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் வழங்கினார்.
இனோ விஐடி எனும் பள்ளி மாணவ, மாணவியருக்கான தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சி, போட்டி விஐடியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் 8-ஆவது ஆண்டு அறிவியல் கண்காட்சி, போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
இதில், தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கேரளம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலிருந்து 34 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 564 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இவர்கள் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வேலை மாதிரி வடிவப் போட்டி, அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான யோசனை வழங்கும் போட்டி, அறிவியல் சம்பந்தமான விளம்பரப் பதாகைகள் வழங்கும் போட்டி, விநாடிவினா ஆகியவை நடத்தப்பட்டன.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பங்கேற்று மொத்தம் ரூ. 3 லட்சம் ரொக்கப் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் விஐடி இணை துணைவேந்தர் எஸ்.நாராயணன், முன்னேற்றப்பட்ட அறிவியல் பள்ளி முதல்வர் ஏ.மேரிசாரல், பேராசிரியர்கள் ஆர்.விஜயராகவன், இ.ஜேம்ஸ் ஜெபசீலன் சாமுவேல், என்.அருனை நம்பிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share this