தமிழக அரசு பள்ளிகளில் பயிலும் சிறந்த மாணவர்கள் 50 பேர் தேர்வு செய்யப்பட்டு பின்லாந்து, சுவீடன் நாடுகளுக்கு இலவசமாக அழைத்துச் செல்லப்படுகின்றனர்.தமிழக அரசுப்பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. இதன்படி அறிவியல் போட்டிகள், தேசிய திறனாய்வு தேர்வு, கண்காட்சி போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற அடிப்படையில் மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 50 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த 50 பேரையும் வெளிநாடு அழைத்துச் செல்ல நேர்காணல் அடிப்படையில் ஒரு ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியையும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் வருகிற 20ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு பின்லாந்து நாட்டிற்கு செல்கின்றனர். அங்கு 25ம் தேதி வரை இருப்பர், பின்னர் 26ம் தேதி சுவீடன் நாட்டிற்கு செல்கின்றனர். மீண்டும் பின்லாந்து நாட்டிற்கு வரும் அவர்கள் பிப்ரவரி 4ம் தேதி சென்னை திரும்புவர். மொத்தம் 8 நாள் சுற்றுப்பயணம் இருக்கும். இவர்கள் பின்லாந்தில் அறிவியல் மையம், ஆல்டோ டிசைன் தொழிற்சாலை, அறிவியல் ஆய்வகங்கள், துர்கு பல்கலைக்கழகம், பொய்ட்யா பள்ளி, லேன் பள்ளி உள்ளிட்ட பல இடங்களை பார்வையிடுகின்றனர். இதுபோல் சுவீடன் நாட்டில் தேசிய அருங்காட்சியகம், நோபல் அருங்காட்சியகம், வாசா அருங்காட்சியகம் உள்ளிட்ட பல இடங்களை பார்வையிட்டு கலை, பண்பாட்டு தகவல்கள் அறிகின்றனர்.

இந்த குழுவில் நெல்லை மாவட்டத்தில் இருந்து ஒரே ஒரு மாணவர் மட்டும் தேர்வாகியுள்ளார். மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள கடம்பன்குளம் அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர் மன்மோகன் சாரதிக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இவரது சொந்த ஊர் பரப்பாடி அருகே உள்ள வேப்பங்குளம் ஆகும். தந்தை அருமைதுரை, தாய் பாக்கியலட்சுமி, தந்தை விவசாய கூலி வேலை செய்கிறார். தேர்வான மாணவர் மன்மோகன் சாரதி கூறுகையில், இது எனக்கு கிடைத்த சிறப்பான வாய்ப்பாக கருதுகிறேன். இதனால் நானும் எனது பெற்றோரும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம்.

எனக்கு ஊக்கம் அளித்த பள்ளி தலைமையாசிரியர் சுந்தரத்திற்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார். மாணவர் மன்மோகன் சாரதியை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் நேரில் அழைத்து பாராட்டினார்.  மேலும் முதன்மைக் கல்வி அலுவலர் பாலா, ஆதிதிராவிட நல அலுவலர் கீதா, கல்வி மாவட்ட பொறுப்பு அலுவலர் ராமசுப்பு, தலைமையாசிரியர் சுந்தரம், உதவி தலைமையாசிரியர் ரவி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கணபதி, புரவலர் ஊசிகாட்டான், ஆசிரியர் சங்க செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பாராட்டினர். மேலும் மாணவருக்கு பலர் வெளிநாடு செல்வதற்கான உடைகள் மற்றும் உடமைகளை வாங்கிக் கொடுத்து வாழ்த்தியுள்ளனர்.

மேலும் 50 பேருக்கு வாய்ப்பு

2வது கட்டமாக 25 பேர் தேர்வு செய்யப்பட்டு மலேசியா, சிங்கர்பூர் அழைத்துச் செல்லப்பட உள்ளனர். 3வது கட்டமாக தேர்வாகும் 25 மாணவ மாணவிகள் அமெரிக்கா செல்ல வாய்ப்புள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை செய்து வருவதாக கூறப்படுகிறது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments