ஜாக்டோ-ஜியோ போராட்டம் வலுக்கிறது: தமிழகம் முழுவதும் சாலை மறியலில் ஈடுபட்ட 75 ஆயிரம் பேர் கைது- DAILY THANTHI

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நேற்று முன்தினம் முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதனால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தாங்களாகவே படித்தனர்.

2-வது நாளான நேற்று தமிழகம் முழுவதும் வட்ட அளவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையில் மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் கட்டிடம் அருகே சாலைமறியல் போராட்டத்தை நடத்தினார்கள். இதற்காக நேற்று காலையிலேயே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ரிப்பன் கட்டிட வளாகத்தில் திரண்டனர். அப்போது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

போலீசார் அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி அறிவுறுத்தினர். இதனால் போலீசாருக்கும், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பெரியமேடு சாலையை நோக்கி மறியல் செய்ய சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். போலீசாரையும் மீறி சிலர் தடுப்புகளையும் தள்ளிவிட்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் செய்தனர். போலீசார் கூறியும் அவர்கள் கலைந்து செல்லாததால் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 1,300 பெண்கள் உள்பட 1,700 பேரை கைது செய்து பஸ்சில் ஏற்றிச்சென்றனர். போராட்டம் காரணமாக சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

முன்னதாக ஜாக்டோ- ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், அன்பரசு ஆகியோர் பேசியதாவது:-

முதல்நாள் வேலைநிறுத்தத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சுமார் 8 லட்சம் பேர் பங்கேற்றார்கள். இது மேலும் அதிகரித்து 9 லட்சமாக உயர்ந்து இருக்கிறது. கைது நடவடிக்கைக்கு பயப்படாமல் அனைவரும் வந்திருக்கிறார்கள். எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு நிதிபற்றாக்குறை இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

மனிதாபிமான அடிப்படையில் எங்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள். எங்களது 9 கோரிக்கைகளும் 9 தேர்வுத்தாள்கள் போன்றது. இதில் அனைத்திலும் அரசு தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு முடிவு வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலின்போது தெரியவரும்.

எனவே அரசு தன்னுடைய கொள்கை முடிவை மாற்றி, எங்களை அழைத்து பேச வேண்டும். இல்லையென்றால் வருகிற 26-ந் தேதி (சனிக்கிழமை) ஜாக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் வட்ட அளவில் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர். தமிழகம் முழுவதும் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 75 ஆயிரம் பேர் கைதானதாக போலீசார் தெரிவித்தனர்.

இன்றும் (வியாழக்கிழமை) சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது. சென்னையில் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்து இருப்பதாக சென்னை மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Share this