சென்னை 'ஜாக்டோ - ஜியோ' போராட்டத்தால், அரசு பள்ளிகளில் உடனடியாக, தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு முடித்த, 90 ஆயிரம் முதுநிலை பட்டதாரிகள், இதற்காக விண்ணப்பித்து வருகின்றனர்.தற்காலிக ஆசிரியர் பணிக்கான சம்பளம், 10 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கல்வி அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவியத் துவங்கியுள்ளன. வேலைநிறுத்தத்தை கைவிட்டு, பணிக்கு திரும்ப, உயர் நீதிமன்றம் விதித்த கெடு, நேற்றுடன் முடிவடைந்ததால், பணிக்கு வராதோர் மீது, நடவடிக்கை பாயத் துவங்கியுள்ளது. 
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், 22ம் தேதி முதல், மாநிலம் முழுவதும், வேலைநிறுத்தம் நடந்து வருகிறது. ஆசிரியர்களின் பணி புறக்கணிப்பால், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், பெரிய அளவில் பாதிப்பு இல்லை.தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 15 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், அதிக அளவில் உள்ளனர்; அவர்களில் பலர், சங்க நிர்வாகிகளாக உள்ளனர். எனவே, அவர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.அவர்களால், போராட்டம் தீவிரமடைந்து வருவதும், பணிக்கு வர விரும்பும் ஆசிரியர்களை, அவர்கள் தடுப்பதும், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே, சங்கங்களில் பொறுப்பில் உள்ள ஆசிரியர்களை ஓரங்கட்டும் வகையில், உடனடியாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி ஆகியோர், அவசர கடிதம் அனுப்பியுள்ளனர்.அதில், பள்ளிகள் தடையின்றி இயங்கும் வகையில், தற்காலிக ஆசிரியர்களை உடனடியாகநியமிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதில், 'ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' மற்றும் முதுநிலை பட்டப் படிப்புடன், பி.எட்., முடித்தவர்களை நியமிக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பால், தமிழகத்தில், டெட் முடித்த, 90 ஆயிரம் பேர், தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து வருகின்றனர். சமீபத்தில், டெட் முடித்தவர்களில் பலர், ஆங்கிலம் மற்றும் தொழில்நுட்ப கல்வியிலும் புலமை பெற்றவர்களாக இருப்பதால், அவர்கள் வாயிலாக, அரசு பள்ளிகளின் தரத்தை, வருங்காலத்திலாவது உயர்த்தலாம் என, பள்ளி கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
கெடு முடிந்தது.
எனவே, மாவட்ட வாரியாக, புதிய ஆசிரியர்களிடம் விண்ணப்பம் வாங்கும் பணி துவங்கியுள்ளது. மாவட்ட கல்வி அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் அலுவலகங்களில், விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன.இதற்கிடையில், வேலைநிறுத்தத்தை கைவிட்டு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு திரும்புமாறு, உயர் நீதிமன்றம் விடுத்த கெடு, நேற்றுடன் முடிந்தது. இதையடுத்து, பணிக்கு தொடர்ச்சி 4ம் பக்கம்வராதோரிடம் விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்'

அனுப்பப்பட்டு வருகிறது.அரசின் நடவடிக்கை பாயத் துவங்கியதும், பல பள்ளிகளில், நேற்று முதல், ஆசிரியர்கள் பணிக்கு வர துவங்கினர். அரசு அலுவலகங்களிலும், வருகை எண்ணிக்கை கூடியது. பணிக்கு வராதோர் பட்டியல், நேற்று எடுக்கப்பட்டுள்ளது. இதில், இரண்டு லட்சம் பேர் வரை, பணிக்கு வராதது கண்டறியப்பட்டுள்ளது.அவர்களுக்கு முதல் கட்டமாக, நோட்டீஸ் அனுப்பும் பணி, நேற்று மாலை துவங்கியது. நோட்டீசுக்கு, ஒரு வாரத்தில் விளக்கம் அளிக்காவிட்டால், அரசு பணியாளர் நடத்தை விதிப்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சம்பளம் ரூ.10 ஆயிரம்!


தற்காலிக ஆசிரியர்களை, 7,500 ரூபாய் சம்பளத்தில் நியமிக்க, ஏற்கனவே, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. அதை, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, நேற்று அரசு அறிவித்துள்ளது.இது குறித்து, பள்ளிக் கல்வித் துறை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவு:
பள்ளிகளை மூடாமல், தொடர்ந்து நடத்தும் வகையில், உடனடியாக, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; இவர்களுக்கான சம்பளம், 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
முதலில், பெற்றோர் - ஆசிரியர் கழகம் நிதியில் இருந்து, சம்பளம் தர வேண்டும் என, ஏற்கனவேகூறப்பட்டிருந்தது. ஆனால், பெற்றோர் - ஆசிரியர் கழகத்தில், போதிய நிதி இல்லாததால், தமிழக

அரசின் சார்பில், நிதி வழங்கப்படும்.அதேபோல், அனைத்து பள்ளிகளிலும், குறைந்தபட்சம் தலா, ஒரு ஆசிரியரையாவது உடனே நியமித்து, வரும், 28ம் தேதி, பள்ளிகளை திறந்து, பாடம் நடத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

யாரை அணுகுவது?


தற்காலிக ஆசிரியர் வேலையில் சேர்வதற்கு, ஆசிரியர் தகுதித் தேர்வான, டெட் தேர்ச்சி, பி.எட்., மற்றும் முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள், தங்களின் விபரங்களுடன், அருகில் உள்ள, அரசு, நகராட்சி, ஊராட்சி பள்ளிகளின், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியர் ஆகியோரை அணுகலாம். அவர்களை அணுக முடியாவிட்டால், முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி, வட்டார கல்வி அதிகாரி, அனைவருக்கும் கல்வி, ஒருங்கிணைந்த கல்வி இயக்கக திட்ட அதிகாரி அலுவலகங்களை அணுகலாம்.இந்த அலுவலகங்களின் முகவரிகளை, தங்கள் அருகில் உள்ள, தனியார் பள்ளிகள் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி கல்வித் துறையின், 14417 என்ற உதவி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். tnschools.gov.in என்ற, இணையதளத்திலும் அறியலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் நேரடி நியமனம்


தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை தீவிரமாக மேற்கொள்ளும் வகையில், பள்ளி கல்வித் துறையின் அனைத்து அலுவலகங்களும், இன்றும், நாளையும் இயங்க வேண்டும் என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.அதேபோல், 32 மாவட்டங்களிலும், ஆசிரியர் நியமன பணிகளை மேற்கொள்ள, 15 இணை இயக்குனர்கள், கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், அந்தந்த மாவட்டங்களுக்கு சென்று, இன்று முதல், நேரடியாக ஆசிரியர் நியமன பணிகளை கவனிக்க உள்ளனர்.