புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய முறையையே அமல்படுத்த வேண்டும், 21 மாத நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும், மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ கடந்த டிசம்பர் மாதம் 4-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தது.


இந்த போராட்டத்தால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதால் அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி லோகநாதன் என்பவர், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை கடந்த டிசம்பர் மாதம் 3-ந் தேதி அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட்டு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக எடுத்த நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. அதுவரை அரசு ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இதையடுத்து அவர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அமைக்கப்பட்ட கமிட்டிகளின் அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் அரவிந்த் பாண்டியன், “ஓய்வூதிய திட்டம் தொடர்பான ஸ்ரீதர் கமிட்டியின் அறிக்கை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க 6 மாதமும், ஊதிய முரண்பாடுகளை களைவதற்கான சித்திக் கமிட்டி அறிக்கை மீதான நடவடிக்கைக்கு 4 வாரமும் அவகாசம் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு கடும் ஆட்சேபனையை ஜாக்டோ-ஜியோ சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத் தெரிவித்தார். “ஜாக்டோ-ஜியோ தங்களின் வேலைநிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பது குறித்து சங்க நிர்வாகிகளுடன் ஆலோசிக்க அவ காசம் வழங்க வேண்டும்” என்று வாதாடினார். இதற்கு நீதிபதிகள் சம்மதித்து வழக்கு விசாரணையை சிறிது நேரத்துக்கு ஒத்திவைத்தனர்.

பின்னர், நீதிபதிகள் முன்பு மீண்டும் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஜி.ஆர்.பிரசாத், “வேலைநிறுத்தம் குறித்து ஜாக்டோ-ஜியோ தரப்பில் ஐகோர்ட்டில் உறுதிமொழி அளித்து தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தை வாபஸ் பெறுகிறோம்” என்று தெரிவித்தார்.

இதற்கு அனுமதி வழங்கிய நீதிபதிகள், மேற்கண்ட கமிட்டிகளின் அறிக்கை தொடர்பான நடவடிக்கைகளை வருகிற 28-ந் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

1 comment:

  1. அதற்கு முன்னர் தேர்தல் தேதியை அறிவித்து விட்டு ஒன்றும் பண்ணமுடியாத நிலைக்கு தள்ளபோகிறார்கள்? எதற்கு இன்னும் 4 வாரம் மற்றும் 6மாதம் என காலநீட்டிப்பு அனைவரையும் முட்டாளாக்கப் பார்க்கும் இந்த அரசுக்கு மங்களம் பாட வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விடுவார்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments